மெய் வருத்தக் கூலி

மும்பைப் பயணம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு படிப்பினையைத் தந்தவாறே அமைகிறது. இம்முறை நேரம் காலம் பாரமால் உழைப்பது பற்றிய படிப்பினை கிட்டப் பெற்றேன்.

பொதுவாக நாம் எல்லோரும் நம்மை அதிகமாக உழைப்பவர்களாகக் கருதிக் கொண்டு படம் காட்டுகிறோம் வீட்டிலும், வெளியிலும்; உண்மை அதுவல்லவென்பது ந்மக்கே நன்றாகத் தெரிந்தாலும்.

நான் ரயிலில் சந்தித்த ஒருவர் திருச்செங்கோட்டுக்காரர். கடலை வியாபாரி. மொத்தமாகக் கொள்முதல் செய்து சில்லறையில் வியாபாரம். வயது 63, இரு முறை பைபாஸ் ஆபரேசன் நடந்திருக்கிறது. இருப்பினும் சோர்ந்து போகாமல், சிறிது ஓய்வுக்குப் பின் மீண்டும் லைனுக்குக் கிளம்பி விட்டார்.

“ஏனுங்கையா இந்த வயசில இவ்வளவு கஷ்டப் படனுமா? அதான் இப்ப காரு பங்களாவுன்னு நல்லா செட்டில் ஆகீட்டிங்க. பசங்க புள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் நல்ல முறையில செஞ்சு வச்சுட்டீங்க. அப்புறமெதுக்கு இந்தப் பாடு?”

“அதுதான் தம்பி உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு. உங்களுக்கு வேலை ஒரு சுமை. எனக்கு சும்மா இருக்கதுதான் சுமை. நீங்க சொன்னமாதிரி எல்லாக் கடமையும் முடிஞ்சுருச்சுன்னாலும் வெட்டியா வீட்டுல இருந்தாத் துருப் புடிச்சுப் போயிருவோம். இப்படி நாலு எடத்துக்குப் போய் நாலு மக்க மனுசங்களப் பார்த்தாலே நம்ம கஷ்டம் சின்னதாப் போயிரும்.”

“இப்பல்லாம் என்ன தம்பி பெரிய கஷ்டம்? செல் போன் இருக்கு அப்பப்ப வீட்டுக்கு பேசிக்கிடலாம், எனிவேர் பேங்கிங்க் இருக்கு போன் பண்ணிச் சொன்னதும் பணத்தப் போடறாங்க. நான் எடுத்து பொருள வாங்குறேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜெல்லாம் இருக்கு. ஆனா 80கள்ல இந்த வசதி ஏதுமில்லாம நாங்க பட்ட கஷ்டம் அதிகம் தம்பி. அப்ப எனக்கு கன்னடமும் தெரியாது, தெலுங்கும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. உள்ள போட்டிருக்க கதர் பணியனுக்குள்ள பை வச்சுத் தச்சிருப்போம். குறைஞ்சது ரெண்டு அல்லது 3 லட்ச ரூபாய் எடுத்துட்டுப் போவோம். உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. போற இடத்துல தங்கவும் நல்ல ஏற்பாடு இருக்கது அங்க இருக்க தரகர் குடோன்ல தங்கிக்கிடுவோம். சரக்க ஏத்திக்கிட்டு லாரியிலேயே கூடவே வருவோம். இல்லன்னா நம்ம முதல் நம்மளுது இல்ல. இப்ப அப்படியா? லாரில புக் பண்ணிட்டு L R காப்பிய ஊருக்கு அனுப்பிச்சுட்டு அடுத்த ஊருக்குப் போய்ட்டே இருக்கலாம்.”

”ஆனா இப்ப எனக்கு என்ன கஷ்டம்னா. அந்தக் காலத்துல இருந்த நேர்மை இப்ப கொஞ்சம்கூட இல்லங்கிறதுதான். 3 லட்ச ரூபாய தரகர்கிட்டவோ அல்லது அவரோட அப்பா, அம்மா கிட்டவோ கொடுத்து வச்சுட்டு ஒரு வாரம் கழிச்சுக் கூட வாங்கிக்கிடலாம். அந்தத் தரகர்கிட்ட சரக்கு வாங்கலன்னாலும் பரவாயில்லை ஒன்னும் சொல்லாம நாம கொடுத்த பணத்த பைசா சுத்தமாத் திருப்பித் தருவாங்க. இப்ப முடியுங்களா?”

தர்மாவரம் ஸ்டேசனில் இறங்கியவர் இன்னும் என் மனதை விட்டு இறங்கவில்லை.

**************************************************************************

அந்தேரி எக்ஸ்பிரஸ் ஹைவேகிட்ட நில்லுங்க நான் 7:30க்கு வந்துவிடுவேன் என்று சொன்ன அனுஜன்யா, ஒரு வெளி நாட்டு வங்கியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மிக எளிய மனிதர். சொன்னது போலவே வந்தார்.

“டெய்லி இவ்வளவு நேரம் ஆகிடுமா?”

”இன்னைக்கு நீங்க வர்றிங்கன்னு நேரத்துல கிளம்பினேன். இல்லன்ன 8 மணிக்குக் கிளம்புவேன்”

“எவ்வளவு நேரமாகும் வீடு செல்ல?”

“காலேலன்னா ஒன்னே முக்கால் மணி நேரம் ஆகும். மாலைன்னா இரண்டரை மணி நேரம் ஆகும்”

“அப்ப பத்தரைக்குத்தான் வீட்டுக்குப் போவீங்க. காலை எத்தனை மணிக்குக் கிளம்புவீர்கள்?”

“ஏழரைக்கெல்லாம் கிளம்பிடுவேன்”

“ஒரு நாளைக்கு 15 அல்லது 16 மணி நேரம் உழைக்கிறீங்களே? பொறாமையா இருக்குங்க அனு”

“அட இதென்னங்க என் டிரைவரப் பாருங்க, 60 வயசாச்சு அவருக்கு. என்னைக் கண்டிவளியில் இறக்கி விட்டுட்டு அவரு மட்டுங்கா போகனும். இங்க இருந்து ஒரு மணி நேரப் பயணம். காலையும் அதே போல. பார்த்தா அவரு என்ன விட அதிகமா உழைக்கிறாருங்க. கிட்டத்தட்ட 18 மணி நேரம். ”

உழைப்புக்கு நேரம் காலம் கிடையாதுன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.

**************************************************************************

எப்படி உழைப்பில்லாமப் பொருள் கிடைக்காதோ அதுபோல திறைமையில்லாம புகழ் கிடைக்காதுங்க. திறமையில்லாமல் வரும் புகழ் தங்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இருந்தாலும் சில பெரிசுகளுக்கு எப்படியாவது புகழ் பெறனுங்கிற ஆவல்ல என்னத்தையாவது செய்யுறாங்க. தன்னெஞ்சறிவது பொய்னு அவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் புகழ்மீதான காதல் அவங்கள வழி மாறத் தூண்டுது.

பாவமாவும் இருக்கு; சில சமயம் பரிதாபமாகவும்.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s