கதம்பம் 22/02/2009

.

தொலைந்தவன்

கண்டிப்பாய் இருக்கிறது
ஆனால்காணவில்லை.
மகனுக்கு அப்பன்.
மனைவிக்கு புருஷன்
அதிகாரிக்கு அடிமை
நண்பனுக்கு நடமாடும் வங்கி.
இப்படியாகத்தான் அது.
கண்ணில் படுவதேயில்லை
நீங்கள் கண்டதுண்டா
நிஜமான என்னை?

1994-ல் வெளியான இந்தக்கவிதையை எழுதியவர் அனந்த்பாலா.

இவர் யாரென்று சொல்ல முடியுமா. தற்பொழுது இவர் பிரபல வலைப்பதிவர். விடை பதிவின் இறுதியில்.

**************************************************************************

சமீபத்தில் நண்பர் ஒருவர் இக்கால இளைஞர்களைத் திட்டித் தீர்த்தார். இத்தனைக்கும் அவருக்கு வயதும் 50க்குள்தான். நாட்டுப்பற்று இல்லை, தாய்ப்பாசம் இல்லை, பெரியவர்களை மதிப்பதில்லை என சரமாரியாகப் புகார். எனக்குத் தாங்க வில்லை.

“சார் பாரதி இறந்த போது அவரது இறுதி அஞ்சலிக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

“தெரியவில்லை”

“மொத்தம் 14 பேர்தான், பரவாயில்லை. வ உ சி விடுதலை ஆகி வரும்பொழுது அவரை வரவேற்கச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

“ஒரு பத்துப் பேர் இருப்பார்களா?”

“இல்லைங்க மொத்தம் மூனே பேர் அதிலும் இருவர் உறவினர் ஒருவர் நண்பர்”

இது போல நாமே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களையும் தலைவர்களையும், சுதந்திரத்திற்காக உடல் பொருள் ஆவி அணைத்தையும் தியாகம் செய்தவர்களையும் சுலபமாக மறந்து விட்டோம். அது இந்தத் தலைமுறையினருக்கு எப்படித் தெரியும்? அவர்களைப் பொருளாதார ஆதாயம் ஒன்றே குறிக்கோள் என வளர்த்த நம் மீதுதான் தவறு” என்றேன்.

சரிதானே?

**************************************************************************

கேரக்டர் சரியில்லை

இந்தக் குற்றச் சாட்டை ஆணின்மீது பிரயோகிக்கும் போது வரும் அர்த்தத்தையும் பெண்ணின் மீது பிரயோகிக்கும்போது வரும் அர்த்தத்தையும் யோசித்திருக்கிறீர்களா?

ஆணுக்குக் கற்பு தவிர்த்த எல்லா ஒழுக்கக் கேடுகளையும் அதன் மூலம் அர்த்தப் படுத்தும்போது, பெண்ணிற்கு அதைக் கற்பு சம்பந்தப் படுத்தி மட்டும் சொல்லுவது சரியா?

இதுக்கு யாராவது மேல் ஷாவனிஸ்டுன்னு எம் மேல சண்டைக்கு வரதீங்க.

**************************************************************************

“மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!”

இந்தக் குறளுக்குப் பொதுவா கவரிமான் ஒரு மயிர் இழந்தாலும் உயிர் வாழாது அவ்வளவு மானமுள்ள மிருகம் எனப் ப்டித்திருக்கிறோம்.

ஆனால் இது உண்மையல்ல எனவும் ஒரு கருத்து இருக்கு பாருங்க.

‘கவரி’ ன்னா மயிர் ‘மா’ன்னா மிருகம். குளிர் பிரதேசங்களில் வாழும் மிருகம், குளிரைத் தாங்க அடர்த்தியான ரோமங்களைக் கொண்டது. அந்த மயிரை இழந்து விட்டால் குளிரில் விரைத்துச் செத்து விடும் என்பதுதான் உண்மையான அர்த்தமாக இருக்கக் கூடுமோ.

இதைப்போலத்தானோ பாலையும் நீரையும் பிரிக்கும் பறவை?

**************************************************************************

”திரைக்கதா”ன்னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். மிகவும் நல்ல படம்

பிரித்விராஜ் ஒரு வெற்றிப் பட இயக்குனர். அடுத்தப் படத்துக்கான கருவை யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்குப் பரிசு வழங்கும் ஒரு பிரபல நடிகரைப் பற்றிய விபரங்களைத் தேடிப் படிக்கும்போது, முதல் படத்தில் அவருடன் அறிமுகமான நடிகையுடன் அவருக்குக் காதலும் அது கல்யாணத்தில் முடிந்ததும் தெரிய வருகிறது.

அந்த நடிகையை மையமாக வைத்து அடுத்த படத்தைச் செய்யலாம் என நடிகையைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்கத் தொடங்குகிறார். படத்தின் முதல்பாதி நடிகை பிரபலமாவதும், அவரது காதலும், கலயாணமும் எனச் செல்கிறது. .

நடிகையின் கல்யாண முறிவுக்கான உண்மையான காரணத்தையும் அவரது தற்போதைய நிலையையும் அறி்யும் பிருத்வி, அவரது கதையை படமாக எடுக்கும் வியாபார எண்ணத்தைக் கை விட்டுவிட்டு அவரது நலத்தில் அக்கறை் கொண்ட மனிதாபிமானமுள்ளவராக மாறுகிறார்.

ப்ளாஷ்பேக் உத்தி மிக அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் உறுத்தாமல் இருக்கிறது. எடிட்டரின் திறமை பளிச்சிடுகிறது. பிருத்வி மிக முதிர்ந்த நடிப்பை அலட்டல் ஏதுமின்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ப்ரியாமணி கதாநாயகி வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அது என்னவோ நல்ல நடிப்பை வெளிப்படுத்த மலையாளப் படவுலகத்திற்குச் செல்லும் நடிகைகள், தமிழ் படத்துக்கு உடம்பை வெளிப்படுத்தினால் போதும் என நினைக்கின்றனர் போலும்.

ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையைச் சில இடங்களில் தொட்டுச் சென்றாலும் அவர்தான் என அறுதியிட்டுச் சொல்ல முடியாவண்ணம் திரைக்கதையில் சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது.

சென்ற அக்டோபரில் (10/08) எடுக்கப்பட்ட இந்தப் படம் அதற்குள் சிடியில் கிடைக்கிறது, 70 ரூபயில். நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்திற்கு உத்திரவாதம்.

**************************************************************************

சக வலைப்பதிவர், நண்பர் ச.முத்துவேலின் கவிதைகள் இந்த மாத உயிர் எழுத்து பத்திரிக்கையில் வந்திருக்கிறது.

கொஞ்சமாக எழுதினாலும் நல்ல கவிதைகள் எழுதும் இந்த இளைஞர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்.

கரைகளைத் தாண்டி

எறிந்ததென்னவோ
ஒரு கல்தான்.
அதுவும் ஒரே முறைதான்.
தரை தொட்டுவிட்டதா
தெரியவில்லை.

அது கிளப்பிய
வட்ட வட்ட அலைகள்
விரிந்துகொண்டேயிருக்கிறது

நன்றி-உயிரெழுத்து
பிப்-2009

**************************************************************************

டாக்டர் நீங்க சொன்ன மாதிரி சிகரட்டுக்குபதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன். ஒரே ஒரு பிரச்சினைதான்

அதுலஎன்னப்பா பிரச்சினை?

சூயிங்கத்தைப் பத்த வைக்க ரெம்ப நேரம் ஆகுது.

**************************************************************************

அந்தப் பதிவர் நம்ம பரிசல்.

**************************************************************************

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s