யார் கடவுள்?

12 வயதிருக்கும் எனக்கப்போது. காலை டிபனைச் சாப்பிட்டுவிட்டு புளிச்சாதத்தையோ அல்லது வேறு சாதத்தையோ டிபன் பாக்ஸிலும் அடைத்துக் கொண்டு, நானும் ராஜ சேகரனும் ஜெயபாலனும் பழனி மலை நோக்கி நடப்போம். எங்கள் ஊரிலிருந்து சரியாக 7 கி மீ தூரம் இருக்கும். 8 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்குச் சென்று சேருவோம். மலை ஏற மேலும் அரை மணி நேரம். தரிசனம் முடிந்து சாப்பிட்ட பின் கீழிறங்கி ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்தபின் மீண்டும் நடையைக் கட்டுவோம். இது இரு வருடங்கள் தொடர்ந்தது, மாதம் ஒரு முறையென.

வெயில் அதிகமிருக்கும் காலங்களில், மலையேறும் சிரமத்திலிருந்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேர்வழியைத் தவிர்த்து யானைப்பாதை மூலம் செல்வோம். நேர்வழி நெட்டுக் குத்தாகப் படிகள் உள்ளதாகவிருக்கும் அய்ந்தாறு படிகள் சற்றுச் சமதளம் மீண்டும் படிகள் என முதியோரும் குழந்தைகளும் ஏறுவதற்குச் சுலபமாக இருக்கும் யானைப்பாதை. பாதையிலமைந்த ஒவ்வொரு இளைப்பாறும் மண்டபத்திலும் ஏதோவொரு ஊணமுற்றவர் யாசித்துக் கொண்டிருப்பர். ஆரம்பகால அருவெறுப்புகளைக் கடந்துஅவர்களைக் கவனிக்கும்போது ஒன்று விளங்கியது; தனக்கு விதிக்கப்பட்டவாழ்க்கை இதுவெனினும் அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தே தீருவெதென்ற வைராக்கியத்துடனிருப்பது.

+2 படிக்கும் பொழுது நண்பர்கள் தங்கள் தோழியரைச் சந்திக்க மலைக்கோவில் ஒரு நல்ல இடமாக இருந்தது. யாருடனாவது துணையாக அவனது தோழி வரும் முன்னரே சென்று காத்திருக்க நேரும் . அவ்வாறான சமயங்களிலும் யாசிப்பவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஆனால் அவர்களை யாரோ இயக்கி வைக்கிறார்கள் என்ற அளவில் ஒரு புரிதல் இருந்ததது.

வெளியூர்களில் எங்காவது சிறு குழந்தை காணாமல் போனால் அவர்கள் முதலில் வந்து விசாரிக்கும் இடம் அடிவாரம்தான். அங்கு இல்லையெனில் அவர்கள் குழந்தை வேறு இடத்தில் சேதாரமில்லாமல் இருக்கிறதென்பது உறுதி என்ற ஆறுதல் அவர்களுக்குக் கிட்டும்.

அதன் பின் பழனியை விட்டு விலகி பல வருடங்கள் கழித்து உடுமலையிலிருந்து கோவைக்கு வேலை நிமித்தம் ரயிலில் தினசரி வந்து போக நேர்ந்தது, சுமார் இரு வருடங்கள். தொடர் பிரயாணத்தில் ரயிலில் வரும் பிச்சைக்காரர்கள் பழகிய முகமாகவும் அதில் சிலரை அறிந்து கொள்ளவும் வாய்த்தது. ஒரு ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டே அவர்கள் வாழ்க்கை அமைகிறது. போகிற போக்கில் பார்க்கும் நமக்கது புலப்படுவதில்லை.

மீண்டும் சில வருடங்கள் கழித்து ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் வாசிக்கக் கிடைத்தது. அவரது காடு நாவல் வாசித்த பாதிப்பிலிருந்த எனக்கு இதுவும் அதைப் போன்றவொன்று என்றென்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு தளம்மட்டுமல்ல தமிழில் வேரு எவரும் தொடாத தளமும் கூட. நாவல் வாசித்து முடித்தபின் கிட்டத் தட்ட ஒரு வார காலம் அதனால் பாதிக்கப் பட்டிருந்தேன்.

நான் கடவுள் படம் இந்நாவலின் அடிப்படையில் என்பதான தகவல்கள் கசிந்த போது, இதில் காசி எங்கு வருகிறதென்ற ஆச்சரியமும் கூடவே பாலா போன்ற எளிதில் திருப்தியடையாத இயக்குநர்தான் இந்தக் கதையை எடுக்க சரியான நபர் என்ற ஆறுதலும் ஏற்பட்டது.

படம் வெளியாகி ஆர்யாவின் ரசிகர்கள் எல்லாம் பார்த்து கைதட்டல்கள் எல்லாம் ஓய்ந்த பின் பார்க்க வேண்டுமென்ற முடிவின்படி நேற்றுப் பார்த்தேன். தன்னை நம்ம்பியவர்களைக் கை விட வில்லை பாலா. ஓவ்வொருவரிடமிருந்தும் அவர்களது சிறப்பான பங்களிப்பைக் கறந்திருக்கிறார். பாத்திரத் தேர்வும், நடிக நடிகையர், துணை நடிகர்கள், இசை(இளையராஜா), ஒளிப்பதிவு(ஆர்தர் ஏ வில்சன்), எடிட்டிங்(சுரெஷ் அர்ஸ்), கலை(கிருஷ்ணமூர்த்தி) என எல்லா விதத்திலும் நிறைவான படம்.

ஆர்யாவையும் பூஜாவையும் அவர்களது நட்சத்திர அந்தஸ்தை விடுத்து கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவர்களது திறமையை மிளிரச் செய்திருக்கிறார் பாலா.

வசனத்தையும் இசையையும் தனியாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு நல்ல பின்னணி இசை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். அதே போல் வசனம். ஒவ்வொரு பாத்திரமும் தான் பேச வேண்டியதற்கு அதிகமும் குறைவும் இல்லாது பேசுகிறது. பூஜாவுடைய கடைசிக் காட்சி ஒன்றைத் தவிர மற்ற இடங்களில் வசனம் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாய் நிற்கின்றது.

காசியையும் பழனியையும் இணைத்தவிதத்தில் கதாசிரியரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. கதைக் களம் பழனி என உடைத்துச் சொல்ல முடியாமலிருப்பது நமது சகிப்புத்தன்மை இல்லாமையைக் காட்டுகிறது.

காவல் நிலையக் காட்சி தவிர்க்கப் பட்டிருக்கலாம். தொப்பி என்றும் திலகம் என்றும் பகடி செய்ததைத் திரி கொளுத்திப் போட்டு ஜெமோவைப் பந்தாடியவர்கள் இந்தக் காட்சிகளப் பார்க்கும் போது கண்களை மூடிக் கொண்டிருந்தனரா எனத் தெரியவில்லை. அவர்களால் இதை ஒன்றும் செய்யவியாலாதென்பது சுடும் நிஜம்.

இந்தப் படமும் கதாநாயகன், நாயகி, வில்லன் என்ற ஒரு கட்டுக்குள் அமைந்த ஒன்று என்பதுதான் ஆயாசம் தரும் விதமாகவிருக்கிறது. இதை முதலில் உடைத்தெறிய வேண்டும்.

மாங்காட்டுச் சாமியாக வருபவர் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவர் இரு கைகளும் கால்களும் இல்லாதிருந்த போதும் மிகச் சிறந்த கர்நாடக கச்சேரி செய்பவர் எனபதொரு கூடுதல் தகவலிங்கு.

இதுபோல குரூபிகளை வைத்து வியாபரம் செய்யும் ஆட்களும் இருக்கிறார்களா? இதெல்லாம் உண்மையா? அல்லது அதீத மிகைப்படுத்துதலா? என்ற கேள்விக்கெல்லாம் விடை ஒன்றுதான்; உண்மை இதனினும் கொடியது. திரைப்படத்தில் காட்டியது கொஞ்சம்தான். நான் முன்பே குறிப்பிட்டது போல குழந்தைகளைக் கடத்தி வந்து விற்கும் கும்பல் அதை வாங்கும் கும்பல் என எல்லோரும் இருக்கிறார்கள்; மறைந்தும், வெளியே தெரிந்தும் .

இதையெல்லாம் படமாக ஆக்கித்தான் தீர வேண்டுமா? என்பதாகவொரு கேள்வியும் உண்டிங்கு. புண்ணை மறைக்க ஆடை அணிவதால் புண் மறையலாமே தவிர இல்லமல் ஆகிவிடுவதில்லையல்லவா.

ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காகத்தான் திரைப்படத்திற்குச் செல்கிறோம் அந்த இரண்டு மணி நேரமும் இதே வேதனைதானா? என்போர் குருவி, வில்லு, குசேலன் போன்ற படங்களைக் கண்டு களியுங்கள்.

படைப்பை விமர்சிக்கலாம் இப் படைப்பே தேவையா என்பதெவ்வகை விமர்சனமென்பதெனக்குப் புரிவதில்லை;பெரும்பாலும்.

**************************************************************************

40 comments

  1. //ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காகத்தான் திரைப்படத்திற்குச் செல்கிறோம் அந்த இரண்டு மணி நேரமும் இதே வேதனைதானா? என்போர் குருவி, வில்லு, குசேலன் போன்ற படங்களைக் கண்டு களியுங்கள்.//

    :-)))) சாட்டைய‌டி!

    //இந்தப் படமும் கதாநாயகன், நாயகி, வில்லன் என்ற ஒரு கட்டுக்குள் அமைந்த ஒன்று என்பதுதான் ஆயாசம் தரும் விதமாகவிருக்கிறது. இதை முதலில் உடைத்தெறிய வேண்டும்.//

    க‌ண்டிப்பாக‌…

  2. உங்கள் வாழ்வனுபவமும், படத்தின் காட்சிகளும் உங்களுக்கு எளிதில் relate செய்துகொள்ள உதவியிருக்கும்.

    இந்த மாதத்தின் பிரதான பொழுதுபோக்கே ‘நான் கடவுள்’ விமர்சனம்/கருத்து/அனுபவம் இவற்றை நான் வாசிக்கும் பதிவர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள் என்பதை கவனிப்பதுதான் 🙂 அந்த வகையில் நீங்களும் என்னை ஏமாற்றவில்லை. நல்ல பதிவு வேலன்.

    அனுஜன்யா

  3. \படைப்பை விமர்சிக்கலாம் இப் படைப்பே தேவையா என்பதெவ்வகை விமர்சனமென்பதெனக்குப் புரிவதில்லை;பெரும்பாலும்.\\

    :-)))) சாட்டைய‌டி!

    \\படிச்சுட்டு வரேன் :)\\

    அனுஜன்யா நீங்களுமா?

  4. வேலன்!

    நேற்று ஊரில் இல்லை. இன்று காலையில்தான் பதிவைப் பர்த்தேன். மிக வித்தியாசமாய், அனுபவத்தளத்தில் நின்று பேசியிருக்கிறீர்கள்.

  5. நல்ல விமர்சனம் அண்ணாச்சி, அதிலும் அந்த கடைசி வரிகள் அருமை..

  6. பிற தகவல்களோடு அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வேலன்..

  7. இதுபோல குரூபிகளை வைத்து வியாபரம் செய்யும் ஆட்களும் இருக்கிறார்களா? இதெல்லாம் உண்மையா? அல்லது அதீத மிகைப்படுத்துதலா? என்ற கேள்விக்கெல்லாம் விடை ஒன்றுதான்; உண்மை இதனினும் கொடியது. திரைப்படத்தில் காட்டியது கொஞ்சம்தான். நான் முன்பே குறிப்பிட்டது போல குழந்தைகளைக் கடத்தி வந்து விற்கும் கும்பல் அதை வாங்கும் கும்பல் என எல்லோரும் இருக்கிறார்கள்; மறைந்தும், வெளியே தெரிந்தும் .

    கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.

  8. முரளி,

    படித்தால், பெரும்பாலும் ‘Me the first’ நழுவிவிடும். சரி, படித்த மாதிரி பாவனை பண்ணி ‘சூப்பர்’ என்று போட்டால், நம்ம அதிர்ஷ்டம் ‘அனுஜன்யா போன்ற மோசமான பதிவர்கள் எழுதுவதைக் குறைக்கலாம்’ என்று ஏதாவது வரிகள் இருக்கும். அதோடு ‘Me the first’ விளையாடாமல் எப்பிடி நாமளும் யூத் தான் யூத் தான் என்று காமிக்கிறது! That is why …….

    அனுஜன்யா

  9. நெத்தியடி!

    வேறு எதுவும் சொல்வதற்கில்லை விமர்சனம் பற்றி.

  10. எல்லாம் மிக நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள். அசத்தல், நன்றி.
    இருப்பினும் ஒரு விடயம் நெருடுகிறது, அதுவும் உங்களுக்கு தெரியாதது இல்லை. இருப்பினும் ஊதுற சங்கை ஊதி வைப்போமே என்று தான் இங்கே ஊத வந்திருக்கிறேன்.

    /*இந்தப் படமும் கதாநாயகன், நாயகி, வில்லன் என்ற ஒரு கட்டுக்குள் அமைந்த ஒன்று என்பதுதான் ஆயாசம் தரும் விதமாகவிருக்கிறது. இதை முதலில் உடைத்தெறிய வேண்டும்.*/

    கதாநாயகன், நாயகி, வில்லன் என்ற ஒரு கட்டுக்குள் தான் எல்லா கதைகளும் வரும், எல்லாருடைய வாழ்கையும் வரும். உதாரணமாக, நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அந்த பெண்ணை அவளோட முறை பையனும் காதலிக்கிறான் என்று வையுங்கள். கதை என்னை மையமாக வைத்து சொல்லப்பட்டால் நான் நாயகனாகவும் அந்த மாமன் வில்லனாகவும் மாறி விடுகிறான். இல்லை எனில் மாமன் நாயகனாகவும் நான் வில்லனாகவும் ஆகி விடுகிறோம். சரி மனித வில்லன்கள் இல்லை, அவளோட அப்பனே வந்து என் பெண்ணை வைத்து யார் வாழ ( ஐ மீன் பொருளாதார ரீதியாக) முடியுமோ? அவர்களுக்கு கட்டி தருகிறேன் என்று சொல்லி விட்டால் இங்கே கதை நாயகர்களுக்கு வில்லன், சூழ்நிலையே அன்றி வேறு இல்லை.

    இன்று வரை நாம் கதை நாயகர்களாக யாரையும் கண்டதில்லை, கதாநாயகர்களாக தான் காண்கிறோம்.

    இந்த படத்தில் கதை நாயகர்கள் தான் வந்துள்ளார்களே தவிர, கதாநாயகன் இல்லை. அந்த வகையில் இது தாங்கள் கூறியதை உடைத்தே வந்திருக்கிறது.

    பெரும்பாலும் நம் படங்களில் நாயகர்கள், அழகிலே குறைந்தவர்களாகவும், பொருளாதரத்திலே குறைந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டால் அவர்களை அழகாக காண்பிக்க வேண்டியே கனவுக் காட்சியும் இருக்கும் ஒரு பாடலும் இருக்கும் அயல் நாட்டில்.

  11. நன்றி அனுஜன்யா
    நன்றி தீபா
    நன்றி மாதவராஜ்
    நன்றி முரளிக்கண்ணன்
    நன்றி வெண்பூ
    நன்றி தாமிரா
    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
    நன்றி வெயிலான்.

  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நைனா. ஆனால் உங்களிலிருந்து நான் மாறுபடுகிறேன்.

    அம்சவல்லி கதைநாயகி, தாண்டவன் வில்லன் நாயகிக்கு உதவி அவளுக்கு மோட்சமளிக்கும் நாயகன் ருத்ரா அதுதான் இந்தக் கதையின் அடிநாதம்.
    டூயட் ஒன்றுதான் இல்லை. மற்றபடி வழக்கமான பார்முலாதான்.

    ஆனால் இதற்குமுன் நான் விமர்சனமெழுதிய தன்மத்ரா, கருத்த பக்‌ஷிகள் போன்ற படங்களைப் பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.

    தன்மத்ராவில் எந்த வித ஹீரோத்தனமும் இல்லாத கதைநாயகன் மோகன்லால். அவனுக்கு ஒரு குடும்பம் என்ற அளவிலேதான் மனவி பாத்திரம். ஆனால் கதை? சந்தோஷமான் குடும்பத்தில் குடும்பத்தலைவனுக்கு திடீரென்று நோய் தாக்கினால் என்னவாகும் என்பதான ஒரு கற்பனை. கடைசியில் லால் இறந்து போகிறார். இதையே தமிழில் எடுத்திருந்தால் கதை நாயகி சாமிக்கு வேண்டி கடைசி நேரத்தில் அற்புதம் நடந்து அவன் பிழைத்து ஒரு சுப முடிவை எட்டியிருக்கும்.

    அதே போல்தான் க.பக்‌ஷிகளும். மம்முட்டிக்கு ஜோடி யாரும் கிடையாது. மம்முட்டிக்கு ஒரு கதை, மீனாவுக்கு ஒரு கதை இரண்டும் ஒன்றையொன்று தொட்டும் வெட்டியும் செல்லுவதுதான் படம். அதிலும் எந்த ஹீரோத்தனமும் கிடையாது. தோல்வியுறும் ஒருவன் கதைநாயகன். இது தமிழில் சாத்தியமா?

    அன்பே சிவம், நம்மவர் போன்ற படங்களில் கதை நாயகியே தேவையில்லை. எனினும் வலிந்து படைக்கப் பட்டிருக்கிறது.

    சுப்பிரமமணியம் படம்கூட அழகர் தான் காதலிக்கும் பெண்ணுக்காகத்தான் முதல் கொலையைச் செய்கிறான் என்று எந்த இடத்திலும் நிறுவப் படவில்லை. ஒரு காட்சி இன்பத்திற்காகத்தான் காதலும் காதலியுமே தவிர, படத்தில் பெரிய பங்களிப்பு எதையும் செய்துவிடவில்லை.

    கடைசி துரோகம் அவள்மூலம்தான் நிறைவேற்றப் படுகிறது என்று சொல்வீர்களேயானால் பின் ஏன் பரமன் கொலையுறுகிறான்.

    கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பதுதானே கதையின் சாராம்சம். அதற்குக் காதலி ஏன். சத்யா என்றொரு படம் கமலகாசன் எடுத்தார் இதேதான் கரு அந்தப் படத்திலும் காதல் தேவையில்லாத ஒன்று.

    ஒரு செண்டிமெண்ட் காட்சி, ஒரு துள்ளாட்டக் காட்சி, ஒரு சவால்காட்சி, ஒரு நகைச்சுவைக் காட்சி, ஒரு காதல் காட்சி. இதை வரிசை மாற்றி மாற்றி எடுக்கப் படுபவைதான் தமிழ்ப் படம்.

    ‘வீடு’ன்னு ஒரு படம் பாலு மகேந்திராவோடது. அதுல கதை அவங்க வீடு கட்டப் படும் கஷ்டம் பற்றியதுதானேதவிர வேறல்ல. அர்ச்சனா நடித்திருந்தும் அவர் கதாநாயகியாக வரவில்லை. ஒரு பாத்திரம் அவ்வளவே.
    எவ்வளவோ சொல்லலாம் இதை ஹரி, லிங்குசாமி போன்றவர்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை.

    பாலா போன்ற இயக்குனர்களாவது இந்த பார்மேட்டில் இருந்து வெளியே வருவார்களா? என்பதுதான் என் ஆதங்கம்.

    மற்றபடி அழகாக இருப்பவர்கள்தான் கதாநாயகனாக வர முடியும் என்பதெல்லாம் 80 களிலேயே வழக்கொழிந்த ஒன்று. ஒரு தலை ராகம் சங்கர், முக்தா சீனிவாசன் பையன் சுரேஷ், இன்னும் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் முரளி, பாக்கியராஜ் (புதியவார்ப்புகள்), பார்த்தீபன் போன்றவர்களெல்லாம் அழகானவர்களா? நம்மை போல, நமது பக்கத்து வீட்டு ஆட்களைப் போல இருந்தததால் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.

  13. /ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காகத்தான் திரைப்படத்திற்குச் செல்கிறோம் அந்த இரண்டு மணி நேரமும் இதே வேதனைதானா? என்போர் குருவி, வில்லு, குசேலன் போன்ற படங்களைக் கண்டு களியுங்கள்/

    Flash news:- குருவி, வில்லு மக்கல்ளை மகிழ்ச்சி கொள்ள் செய்தன.. வேலனண்ணாச்சி தகவ்ல்.. :)))..
    குசேலன் கூடப் போய் குருவிய சேர்த்துட்டிங்களே!!!.. ரஜினி ரசிகர்கள் களத்தில் இறங்கவும்.. :)))

  14. வேலன் அண்ணா…

    தங்களின் நேரத்தை தின்று விடுவதாக தாங்கள் நினைத்தால் முதற்கண் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

    நீங்கள் என்னுடைய முதல் பின்னூட்டத்தை ஆழ்ந்து படிக்க வில்லை என்று எண்ணுகிறேன். தயவு செய்து, இந்த அன்பு தம்பிக்காக மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    /*அம்சவல்லி கதைநாயகி, தாண்டவன் வில்லன் நாயகிக்கு உதவி அவளுக்கு மோட்சமளிக்கும் நாயகன் ருத்ரா அதுதான் இந்தக் கதையின் அடிநாதம்.*/

    கதையின் அடிநாதம் சரி தான்.

    /*டூயட் ஒன்றுதான் இல்லை. மற்றபடி வழக்கமான பார்முலாதான்.*/

    இதில் எங்காவது நாயகனோ, நாயகியோ யாரையாவது ஏக்கப் பார்வை பார்த்தார்களா என்ன? எல்லாரும் கொள்வது போலே நீங்களும் அப்படி உருவகித்து கொண்டீர்கள். வில்லன், நாயகன், நாயகி என்பதெல்லாம் நாம் உருவகித்து கொள்வது தான்.

    /*ஆனால் இதற்குமுன் நான் விமர்சனமெழுதிய தன்மத்ரா, கருத்த பக்‌ஷிகள் போன்ற படங்களைப் பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள். */

    இதை நான் படம் மூலமாக கூறாமல், நேரடியாகவே கூறி இருக்கிறேன் முந்திய பின்னூட்டத்தில். சூழ்நிலையும் வில்லனாக முடியும் என்று.

    /*எவ்வளவோ சொல்லலாம் இதை ஹரி, லிங்குசாமி போன்றவர்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. */

    /*பாலா போன்ற இயக்குனர்களாவது இந்த பார்மேட்டில் இருந்து வெளியே வருவார்களா? என்பதுதான் என் ஆதங்கம்.*/

    வந்தாச்சு… வந்தாச்சு… இன்னும் வெளியே இழுத்து வருவார் தமிழ் சினிமாவை என்று நம்புகிறோம்.

    /*மற்றபடி அழகாக இருப்பவர்கள்தான் கதாநாயகனாக…..*/
    இதை நான் எங்கும் சொல்ல வில்லை. நான் சொன்னது பொதுவாக தமிழ் படங்களில் நடக்கும் கனவு காட்சி என்னும் கூத்தை.

  15. அருமையான பார்வையில் எழுதியிருக்கிறீர்கள். எல்லாரும் இந்தப் படத்தைப் பற்றி எழுதிவிட்டார்களே.. இவர் என்ன சொல்வார் என்று எதிர்பார்த்து வருபவர்களை ஏமாற்றாத பதிவு!

  16. ஏதோ ஒண்ணு இருக்கு அண்ணாச்சி உங்ககிட்ட…

  17. /*சொல்ல மறந்துட்டேன்.. அந்த ஒளிக்கவிதையில் இருபப்வர் கொள்ளை அழகு!!*/

    அதை நேர் வாக்கிலே பாதியா மடிச்சு, இடது பக்க பாதிய மட்டும் எடுத்தால், இன்னும் சூப்பர் என்று என்னோட பின் பக்கத்திலே இருந்து யாரோ சொல்றாங்க.

  18. நன்றி கார்க்கி
    நன்றி tvrk சார்
    நன்றி பரிசல். நீங்க நேர்லயும் அழகுதான்.

  19. நைனா,

    உங்கள் பின்னூட்டத்தின் முதலிரு பத்திகள் தேவையில்லை.

    ஏக்கப் பார்வை தேவையில்லை. ஆனால் இவ்வளாவு பேர் இருந்தும் கண்ணில்லாத அந்தக் கதை நாயகியைக் காப்பாற்ற எங்கிருந்தோ வந்த கதாநாயகந்தான் வர வேண்டும் என அமைக்கப் பட்டிருக்கும் திரைக்கதைதான் பிரச்சினை.

    மக்கள் திலகம் படங்களில் கதாநாயகிக்கு ஆபத்து என்றவுடனே வரமாட்டார். வில்லன் அவளைத் துன்புறுத்தி ஆடைகளைச் சேதாரப் படுத்தியபின் தான் வந்து சேருவார். அதைப்போலவே ருத்ரா அகோரி எனவே அவனுக்கு நல்லவர் யார் கெட்டவர் யார் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விடும் எனவும், அவனே கடவுள் எனவும், கடவுளின் சார்பாக அவனே தீர்ப்பும் வழங்குவான் எனவும் நிறுவப்பட்டிருக்கிறது.

    அவ்வாறிருக்கையில் ஏன் அம்சவல்லிக்கு அவ்வளவு கொடுமைகள் நடைபெறும்வரைக் காத்திருக்கிறார். அவள் வந்து மன்றாடி முறையிடும் வரைக் காத்திருக்க வேண்டிய வசியம் என்ன? அவ்வளவு நாட்களாக தாண்டவன் செய்யும் அராஜகம் எதுவும் தெரியவில்லையா?

    அதனால்தான் சொல்கிறேன் கதாநாயகக் கூறுகள் உள்ள படம் இது.

    சேது (விக்ரம்), நந்தா (சூர்யா), பிதாமகன் (விக்ரம்), நான் கடவுள் (ஆர்யா) என அவரது எல்லாப் படங்களும் கதாநாயகனை முன்னிறுத்தி அவனது வீரதீர பராக்கிரமங்களைப் பறை சாற்றும் விதமாகவே அமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான் என் வாதம். தின்வாழ்க்கையில் தென்படும் ஒருவரைக் கொண்டு கதை படைக்க முடியாதா?

    காட்சி அமைப்பிலும் அதைச் செதுக்கும் விதத்திலும் நேர்த்தியாகப் படைக்கிறார் என ஒத்துக் கொள்ளலாம். ஆனால் பாத்திரப் படைப்பு? அவரது படங்களில் வந்த 4 பாத்திரங்களுமே தின வாழ்வில் காணக் கிடைக்காதவை.

  20. நான் கடவுள் திரைப்படம் குறித்த
    தகவலும், உங்கள் பால்ய கால
    பழனி மலை ஞாபகங்களும்
    தூக்கலானவை.

    காதலி இல்லாததால் கதாநாயகனில்லை
    என்று சொல்லுவதற்கில்லை.
    அகம் பிரம்மஸ்யம் என்று சொல்லுவதற்காகவே
    ஆரியாவை நிறைய்ய தூக்கிப்பிடிக்கிறது கதை.
    காசியிலிருக்கும் ஓதுவார், ஊரிலிருக்கும் தாய் இருவரும்
    ருத்ரனின் தந்தையை மானக்கேடாகத் திட்டுவதும்
    உயிர்போகக் கத்துவதும் சடுதியில் ஏற்றுக்கொண்டு
    காலில் விழாமல் வணங்குவதால் அவர்கள் வாழத்தகுதி
    உடையோர் ஆவதும் முரண்பாடுகள்.

    கிடக்கட்டும் விடுங்கள்.
    வர்ணனைகளும், விவரணைகளுமான உங்கள் கதை
    சொல்லலுக்கு கூடுதல் ஈர்ப்பைத்தருகிறது. வான்காவின்
    ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே வர்ணங்கள்
    உயிர் பெற்றுக்கிளம்பும் அகிராவின் குறும்படத்தைப்போல
    அசத்துகிறது உங்கள் விமரிசனம்.

  21. விவாதங்கள் இன்னும் இருக்கிறது. இப்போதைக்கு இது போதும். நன்றி, நன்றி, நன்றி மிக நன்றி அண்ணா.

  22. //உண்மை இதனினும் கொடியது. திரைப்படத்தில் காட்டியது கொஞ்சம்தான்//
    நான் திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. உங்கள் யதார்த்தமான விமர்சனம் இந்த படத்தை பார்க்க தூண்டியுள்ளது. நிறைய விடயங்களை எழுதுகின்றீர்கள் வாசிப்பதட்கு நேரம் தேவை. வாசித்ததும் எனது கருத்தையும் சொல்லுகின்றேன்.

  23. //இதையெல்லாம் படமாக ஆக்கித்தான் தீர வேண்டுமா? என்பதாகவொரு கேள்வியும் உண்டிங்கு. புண்ணை மறைக்க ஆடை அணிவதால் புண் மறையலாமே தவிர இல்லமல் ஆகிவிடுவதில்லையல்லவா.//

    அண்ணாச்சி டச்.. 🙂

    //ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காகத்தான் திரைப்படத்திற்குச் செல்கிறோம் அந்த இரண்டு மணி நேரமும் இதே வேதனைதானா? என்போர் குருவி, வில்லு, குசேலன் போன்ற படங்களைக் கண்டு களியுங்கள்.//

    என்னாது குசேலன் மகிழ்ச்சிக்காகவா? :)) சிவா மனசுல சக்தியை விட்ட உங்கள் நுண்ணரசியலை கண்டிக்கிறேன்.. :))

  24. அண்ணாச்சி என்னாச்சி? சின்ன தங்கச்சி எழுதிக் குடுக்காம நீங்களே சொந்தமா எழுதின பதிவா இது? எழுத்துப் பிழைகள் இருக்கே. :))

  25. //குறையிருந்தால் vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்.//

    என்னாது? மெயில் ஐடி’யா? :))

  26. //இதையெல்லாம் படமாக ஆக்கித்தான் தீர வேண்டுமா? என்பதாகவொரு கேள்வியும் உண்டிங்கு. புண்ணை மறைக்க ஆடை அணிவதால் புண் மறையலாமே தவிர இல்லமல் ஆகிவிடுவதில்லையல்லவா.//

    அண்ணாச்சி நான் படம் பார்க்கவில்லை. அதனால் கேட்கிறேன். வெறுமனே அடுத்தவர் புண்ணை பிறருக்கு காட்டுவதில் என்ன வகை உணர்வு இருக்க முடியும். அந்த புண் ஆற என்ன மருத்துவம் சொல்லி இருக்கிறார்கள் பாலாவும் ஜெமோவும்?. குறைகளை குறைகளாகவே சொல்வதை விட அதற்கான தீர்வை சொல்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்? அப்படி எதுவும் சொல்லி இருக்கிறார்களா?

    குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் அல்லது வித்து பணம் பார்க்கும் கும்பல் இருப்பது உண்மையே. அதை பல படங்களில் பார்த்தாகிவிட்டது. சமீபத்தில் கூட ஸ்லம்டாக் மில்லியனர், கஜினியில். அதையே பாலாவும் ஜெமோவும் ஏன் காட்ட வேண்டும். அப்படியே காட்டினாலும் அதற்கு என்ன தீர்வை முன் வைக்கிறார்கள்?

    படைப்பாளிகளுக்கும் செய்தி சேகரித்து வழங்கும் நிருபர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

    இது போன்ற படைப்புகளை?! பார்த்து அல்லது படித்து முடிக்கும் போது மனதில் ஒரு குற்ற உணர்ச்சியோ பாரமோ உண்டாவதைத் தவிர , அப்பாடா இனி இது போன்ற அவலங்கள் இருக்காது என்பது போன்ற உணர்வைத் தந்திருக்கிறதா?
    குறிப்பாக நான் கடவுள் பார்த்து முடிக்கும் போது..

  27. நன்றி கிங்,
    நன்றி பூபதி
    நன்றி சஞ்சய்.

    இந்தப் படம் என்ன விளைவை
    ஏற்படுத்தும் என யோசிக்கிறீர்கள்.

    வாழ்க்கையில் இம்மாதிரி மக்களும் உள்ளனர், ஏதோ பிச்சை எடுக்கிறார்கள் உண்ணுகிறார்கள், உறங்குகிறார்கள் என்ற அளவிலேதான் நமது பார்வை இருக்கக்கூடும். ஆனால் அதன் பின்புலத்தில் இவ்வகையான் கொடுமைகளும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன என்பது தெரிவதில்லை.

    இலக்கியம், கலை முதலியவை பிரச்சினைகளைக் எடுத்துக் காட்டுமே தவிர அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. ஏனெனில் எந்தத் தீர்வும் அரசியல், சமுதாய, பொருளாதார காரணிகளை உள்ளடக்கியது.

    பொதுவாக இம்மாதிரிப் படங்களைப் பார்க்கும் போது என்னுடைய தற்போதைய வாழ்க்கையை எண்ணிப் பார்த்து கடவுளுக்கு நண்றி சொல்லிக் கொள்வேன். அவ்வளவே.

    அஞ்சலை நாவல் ஒரு பெண்ணின் துயரத்தை முன் வைக்கிறது; தீர்வெதையும் சொல்லாமலே. ஆனால் அதைப் படித்த பின் அஞ்சலை போன்ற பெண்களின் வலிகளையும் வேதனைகளையும் உணரத் தலைப்படுகிரோம் அதுதான் இலக்கியத்தின் நோக்கமும்;வெற்றியும் கூட.

  28. படைப்பை விமர்சிக்கலாம் இப் படைப்பே தேவையா என்பதெவ்வகை விமர்சனமென்பதெனக்குப் புரிவதில்லை;பெரும்பாலும்.//
    yes

  29. படம் பார்க்கிறவரைக்கும் விமர்சனங்கள் எதுவும் படிப்பதோ,அது பற்றி தெரிந்துகொள்ளவோ கூடாது என்று நினைத்திருந்தாலும், படித்துவிட்டேன்.

    உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளது,அண்ணாச்சி.

  30. nice post 🙂 🙂

    \படைப்பை விமர்சிக்கலாம் இப் படைப்பே தேவையா என்பதெவ்வகை விமர்சனமென்பதெனக்குப் புரிவதில்லை;பெரும்பாலும்.\

    🙂 🙂 🙂 very nice

  31. அண்ணே … கொஞ்சம் நம்ம வீட்டுக்கும் வந்து தலைய காட்டுங்க…

  32. பதிவிற்கு நிகராக பின்னூட்டங்களையும், அதற்கு தாங்கள் பதிலளித்ததையும் ரசித்தேன்…

  33. migachirandha vimarsanam.oru nadunilayana vimarsanathirkana eduthukattu.ungalukku en nenjarntha vazthugal

Leave a reply to Deepa J Cancel reply