தன்மத்ராவும் கருத்த பக்‌ஷிகளும்

இந்தப் புத்தாண்டன்று இரு நல்ல திரைப் படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.
மோஹன்லால் நடித்த தன்மத்ரா மற்றும் மம்முட்டி நடித்த கருத்த பக்‌ஷிகள்.

மசாலாப் படம், அல்லது கலைப்படம் என்ற இரண்டே உட்கூறுகளைக் கொண்டதாகத்தான் இருக்கிறது நம் திரை உலகம். ஆனால் தேவையான அளவு மசாலாக் கூறுககளைக் கொண்டும் ஒருநல்ல கலைப் படத்தை அளிக்க முடியும் என்று மலையாளத் திரையுலகினர் நம்புவதால்தான் இம்மதிரியான படங்களும் சாத்தியமாகிறது.

மேலும் இப்படங்களின் தயாரிப்புச் செலவு குறைவாக இருப்பதால்(குறிப்பாக நடிகர்களின் சம்பளம்), மிகப் பெரிய அளவில்ல இல்லாவிட்டாலும் ஓரளவு லாபத்தை ஈட்டி விடுகின்றன. நம்ம ஊர் நடிகைகளின் சம்பளத்தைவிட கேரளத் திரைஉலகில் கதாநாயகன் வாங்கும் சம்பளம் குறைவு எனச் சொல்லப் படுவதுண்டு.

தன்மத்ரா பற்றி முன்பே கேள்விப் பட்டிருந்தாலும், ச்சின்னப் பையன் மற்றும் தமிழ்ப்பிரியன் பரிந்துரைத்ததாலும் பார்த்தேன்.


ஒரு ஆதர்ஷ குடும்பத்தலைவன்(நல்ல கணவன், நல்ல தந்தை, நல்ல ஊழியன்) அல்சைமர் வியாதியால் தாக்கப் பட்டால் அந்தக் குடும்பம் எப்படிச் சிதறும் என்பதோடு, அவன் அந்நோயின் தாக்குதலுக்குட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறுண்டு போவதை இயல்பாகச் சித்தரிக்கிறது படம்.

பத்மராஜன், லோகிதாஸ் போன்ற சிறந்த டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பயின்ற பிளெஸ்ஸி(Blessy) இயக்கிய படம்.

படத்தில் நடித்தவர்களை அவர்களின் நடிப்பின் அடிப்படையில் வரிசைப் படுத்ததினால், மோகன் லால், நெடுமுடி வேணு, மீரா வாசுதேவன், அர்ஜுன், சீதா, ஜகதிக்குமார் என்று சொல்லலாம். ஆனால் எல்லோரும் அவர்களுக்களிக்கபட்ட பாத்திரங்களை இதைவிட வேறெவராலும் சிறப்பாகச் செய்துவிட முடியாது என்ற விதமாகச் செய்திருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தது நெடுமுடி வேனுவின் பாத்திரம்தான். என் தந்தை போன்ற பாத்திரப் படைப்பு. மகனின் வசந்தத்தில் ஒரு பெருமிதமும் அவனின் இலையுதிர்கால வேதனையைத் தாங்க முடியாதவராகவும் என மிகப் பிரமாதப் படுத்தியிருக்கிறார்.

”இவன இந்த நிலைமையில் இங்க கொண்டுவரவா நான் வீடு வரை இந்த ரோட்டைப் போட்டேன்” என்று ஆதங்கப் படுமிடத்தில் தன் சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார்.

கேரள மாநில பரிசுகளை வென்ற படம். சப் டைட்டிலுடன் கிடைக்கிறது கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.


மம்முட்டி படம் வேறு தளம். படத்தில் மம்முட்டி செய்திருக்கும் கதாப்பாதிரத்தின் பெயர் முருகன், மூன்று குழந்தைகள், அழகப்பன், மயிலம்மா மற்றும் பிறவியிலிருந்தே கண் தெரியாத மல்லி. மூன்றாவது குழந்தை பிறந்ததும் மனைவி உடல்சுகவீனத்தில் மறைந்துவிட்டாள். தினமும் இஸ்திரி வண்டியை நகர்த்திக் கொண்டு அந்நகரத்தின் மேல்தட்டு மக்களின் வீட்டு வாசலில் நின்று அவர்கள் துணியை இஸ்திரி செய்து கொடுக்கும் அன்றாடங்காய்ச்சி. தங்கியிருப்பது ரயில் நிலையத்தின் ஓரத்தில் குடிசைப் பகுதியில்.

யாராவது கண் தானம் செய்தால் மல்லிக்குப் பொருத்திப் பார்வை வரவைக்கலாம் என்கிறார் கண்டாக்டர். முருகன் இஸ்திரி செய்யும் வீடுகளில் ஒன்றில் இருக்கும் மீனா ஒரு நோயின் பிடியில் சாவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார். மல்லியைப் பற்றி அறிந்ததும், தன் கண்களைத் தானம் செய்ய முன்வருகிறார். இதை ஒட்டிய சம்பவங்களும் மனப் போராட்டங்களும்தான் கதை.

ஒரு சீரியல் ரேஞ்சுக்கு இருக்கும் கதையை தன் திறமையான திரைக்கதையால் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார், இயக்குனர்.

கலவரமொன்றில் ரவுடிகள் சிலர் ஒருவனைக் கொலை செய்து முருகனின் தள்ளுவண்டியில் வைத்து எரிக்கப்படும்பொழுது, அங்கு எரிக்கப்பட்ட மனிதனைவிட தன் வண்டி எரிகிறதே எனப் பதைக்கும் காட்சியில் அழுவதற்கு வாய்ப்பிருந்தும் அழவில்லை. இதே தமிழ்ப் படமாக இருந்தால் அந்த இடத்தில் ஓலமிட்டு அழும் காட்சி ஒன்றை வைத்திருப்பர். மொத்தப் ப்டத்திலும் மம்முட்டி ஒரு இடத்தில் கூட அழவில்லை.

இப்படமும் ஆங்கில சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

ஒரு கதாபாத்திரத்தை முன்னிறுத்தும் விதமாகக் கதையில் மாற்றங்களைச் செய்து கதையைக் கெடுப்பதுதான் நமது வழக்கம். படம் முடிந்ததும் யாராவது ஒருவர் தூக்கலாகத் தெரியும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இவ்விரண்டு படங்களிலும் கதைதான் கதாநாயகன்.

மொத்தத்தில் இம்மாதிரிக் கதா பாத்திரங்களை ஏற்று நடிக்க தமிழகத்தில் யாரும் இல்லை என்பதும் அவ்வாறு நடித்தால் இதில் பாதி அளவாவது நடிப்பார்களா என்பதும் பெரிய கேள்வி. விடையில்லாததும் விடை காணமுடியாததும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s