முத்திரைக் கவிதைகள்

காதலைத்தவிர்த்த பாடுபொருள் கொண்ட கவிதைகள் எனக்கெப்போதும் பிடித்தமானவை. பல்வேறு சாத்தியங்களைக் கொண்ட கவிதைகள் உங்கள் பார்வைக்கு. இன்னும் சில, வரும் வாரங்களில்.

புண்ணியம்

தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!

– க.பாலவெங்கடேசன்

குற்ற மனசு

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

– ஜெ.முருகன்

நானும் நீயும்

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

– ஜெயபாஸ்கரன்

நகரம்

சீறும் பைக்கின் பின்ஸீட்டில்
டி-ஷர்ட் பெண்ணைப் பார்க்கையிலே
கண்கள் இமைக்கும், படம் விரியும்
சாலையில் கவனம் தடுமாறும்
விரட்டிச் சென்று மறுபடியும்
கிட்டே பார்க்கத் தோன்றும்
சிக்னல் விழுந்து பைக் விரைய
மனசுள் ஏதோ குறுகுறுக்கும்
ப்ளஸ் டூ மகளும் போவாளோ
யாரோ ஒருத்தன் பின்னாடி?

– ஜெயந்த்

மனசு

சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

– பா.கீதா வெங்கட்

நன்றி : ஆனந்த விகடன். முத்திரைக் கவிதைகள் (2002)

Advertisements

29 comments

 1. வணக்கம் வேலன்

  கவிதை தொகுப்பு ரோம்ப நல்லா இருக்கு

  என்ன ஒரே விஷயம் எல்லா கவிதைகளையும் நான் முன்பே படித்திருக்கின்றேன்

  நன்றி
  இராஜராஜன்

 2. :-)))…

  அருமையான கவிதைகள்!!!

  அந்த “நானும் நீயும்” கவிதை நல்லா ஞாபகத்துல இருக்கு…

 3. நன்றி தமிழ்
  நன்றி வனம். அதுதான் தொகுப்புன்னு சொல்லீட்டேனே ஆண்டு கூடப் போட்டிருக்கேன் பாருங்க.

  நன்றி விஜய்.

 4. நல்லா இருக்கு.

  நம்ம கவிதைகள் படிச்சிங்களா? நம்ம வலை பக்கம் வாங்க.ரொம்ப நாளா ஆளைக்காணும்.

  ஹைகூக்கள்.. படிச்சிகளா?

  அடுத்து உயிரோசையில் என் கவிதை நம்ம கவிதை வந்திருக்கு.(தொடுப்பு நம்ம வலைல இருக்கு) நம்மளையும் கொஞ்சம் அப்பப்ப உற்சாகப்படுத்துங்க.

  தலைப்பு:பயணிகள் கவனிக்கவும்.

  நீங்க கொஞ்சம் இலக்கிய ரசன உள்ள ஆளு.பாத்து சொல்லுங்க.

 5. வேலன்!
  உங்களிடம் அந்த புத்தகம் (மட்டுமல்ல! அந்த வருடத்தில் வந்த இன்னபிற விகடன் தொகுப்புகள் – கவிதைகள், ஓவியங்கள், ஓவியக்கதைகள், முதலியன) இருக்கா? விகடன் இந்த் தனிப்புத்தக்ங்களை ஒரு ரூபாய்க்கு விற்ற ஞாபகம்! (வாரயிதழுடன் இலவசம், தனிப்புத்தகம் ஒரு ரூபாய்ன்னு!) நல்லதொரு மலரும் நினைவுகள்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!

 6. எல்லாமே நல்லா இருக்கு வேலன். நான் படித்ததில்லை. ‘குற்ற மனசு’ சிறிது இந்தக் கவிதையை நினைவு படுத்தியது.

  “விற்கப்பட்ட இருபதில்
  சொள்ளமாடனுக்கு மூணு,
  பக்ரீதுக்கு மூணு என்று
  ஆறு ஆடுகள் மட்டும்
  புண்ணியம் செய்திருந்தன”

  அனுஜன்யா

 7. புண்ணியம் கவிதை பிடிக்கவில்லை. அந்த மாட்டின் வேதனையை அர்த்த நாரிச்வரர் அறிவாரா?

 8. அந்த முத்திரைகவிதை தொகுப்பு என்கிட்டயும் இருக்கு. இதப் படிச்சதுமே, எடுத்துப் படிக்கணும்போல இருக்குண்ணா!!

  தேங்ஸ்!!!

 9. நல்ல கலெக்ஷன்…

  மாடு கவிதை… ப்ளூ க்ராஸ் காரங்க படிக்கலையே??

 10. வேலன்,

  நான் தவறாக ‘குற்ற மனசு’ என்று சொல்லிவிட்டேன். நான் சொல்ல வந்தது ‘புண்ணியம்’ என்ற கவிதையைத்தான்.

  மாதவராஜ், என் புரிதலில் அந்தக் கவிஞர் ஒரு எள்ளலுடன் அந்தக் கவிதையை எழுதி உள்ளார். உங்களுக்கு ‘அர்த்தனாரியிடம்’ நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், இதுவும் ஊழ்வினைப் பயன் என்ற கோட்பாட்டிலும் நம்பிக்கை வைக்கலாம்.

  அனுஜன்யா

 11. பழைய கவிதைகளை மீண்டும் தொகுத்து தந்ததற்கு நன்றி அண்ணாச்சி..

  அதில் முதல் கவிதையான அம்மாவைப்பற்றிய கவிதை என்னால் மறக்க முடியாத ஒன்று..

  மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு..

  ஜெயபாஸ்கரனின் கவிதை கலக்கல் 🙂

 12. //மாதவராஜ் said…
  புண்ணியம் கவிதை பிடிக்கவில்லை. அந்த மாட்டின் வேதனையை அர்த்த நாரிச்வரர் அறிவாரா?
  //

  இந்த கவிதை அர்த்த நாரீஸ்வரருக்காக எழுதலைங்க.. படிக்கற மனுசங்க புரிஞ்சுக்கட்டும்ன்னுதான்..

  இது கொஞ்சம் அழகான பகடின்னு நினைச்சு மறுபடி படிச்சுப்பாருங்க 🙂

 13. நேற்று உங்கள் வலைப்பதிவை நோட்டமிட்டேன்…….. சில நாட்களுக்கு பிறகு காதல் அல்லாத வாழ்வை வேறொரு கண்ணோட்டத்தில் புரிய வக்கும் கவிதைகளை கொடுத்ததற்கு நன்றிகள் பல…..

  என்றும் அன்புடன்
  ஜெகன் சுசி.
  jaganchitra

 14. //கே.ரவிஷங்கர் said…

  ஹைகூக்கள்.. படிச்சிகளா?

  அடுத்து உயிரோசையில் என் கவிதை நம்ம கவிதை வந்திருக்கு.(தொடுப்பு நம்ம வலைல இருக்கு) நம்மளையும் கொஞ்சம் அப்பப்ப உற்சாகப்படுத்துங்க.

  தலைப்பு:பயணிகள் கவனிக்கவும். //

  ரவி உங்க ஹைக்கூக்கள்ல எனக்குப் பிடித்த ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லியிருக்கேன்.

  பயணிகள் கவனிக்கவும். கவிதை நல்ல கவிதை படித்த நிறைவைத் தருகிறது. நல்ல கூர்ந்த கவனிப்பு. ஹேட்ஸ் ஆஃப்.

 15. அனுஜன்யா!
  சென்ஷி!

  எழுதிய கவிஞர் மன்னிக்க வேண்டும்..
  மாடுகளுக்குத் தெரியாது என்பதற்கு பதிலாக
  மாடுகளுக்குத் தெரியும் என்றிருந்தால்
  பகடி, சரியாய் இருக்குமோ என்று தோன்றுகிறது.
  இருந்தாலும்….
  பகடியாய் படிக்கக் கூட கஷ்டமாயிருக்குங்க.

 16. Blogger venkatramanan said…

  வேலன்!
  உங்களிடம் அந்த புத்தகம் (மட்டுமல்ல! அந்த வருடத்தில் வந்த இன்னபிற விகடன் தொகுப்புகள் – கவிதைகள், ஓவியங்கள், ஓவியக்கதைகள், முதலியன) இருக்கா? விகடன் இந்த் தனிப்புத்தக்ங்களை ஒரு ரூபாய்க்கு விற்ற ஞாபகம்! (வாரயிதழுடன் இலவசம், தனிப்புத்தகம் ஒரு ரூபாய்ன்னு!) நல்லதொரு மலரும் நினைவுகள்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!//

  எங்கிட்ட எந்த புத்தகமும் தங்காது வெங்கட். எல்லாமே யாரோ ஒருவரிடம் இருக்கும். அதனாலேயே எனக்கும் தங்கமணிக்கும் நிறையப் பிரச்சினைகள். புத்தகங்கள அலமாரில அடுக்கி அழகு பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே யாராவது வீட்டுக்கு வந்தாலோ அல்லது விஷேச நாட்களிலோ அதை பரிசாகக் கொடுத்துவிடுவேன். சிலது தங்கும். சிலது அதிசயமாகத் திரும்பி வரும்.

 17. அனுஜன்யா said…

  எல்லாமே நல்லா இருக்கு வேலன். நான் படித்ததில்லை. ‘குற்ற மனசு’ சிறிது இந்தக் கவிதையை நினைவு படுத்தியது.

  “விற்கப்பட்ட இருபதில்
  சொள்ளமாடனுக்கு மூணு,
  பக்ரீதுக்கு மூணு என்று
  ஆறு ஆடுகள் மட்டும்
  புண்ணியம் செய்திருந்தன”

  அனுஜன்யா//

  தேர்ந்தெடுத்தது விகடனாச்சே. அப்பெல்லாம் விகடன், தரத்துக்கு முக்கியத்துவம் தந்த ஒரு பத்திரிக்கை.

  இப்ப ஸ்ரீனிவாசன் வந்ததும் நல்ல விளம்பர உத்திகளுடனும், வியாபாரத் தந்திரங்களுடனும் அதை ஒரு பத்திரிக்கை எனபதிலிருந்து பொருள் (புராடக்ட்) என்ற அளவில் சந்தைப் படுத்திவிட்டார்.

  ஆடுகள் செய்த புண்ணியம் ஆட்டுக்குத் தெரிவதில்லை.

 18. //மாதவராஜ் said…

  புண்ணியம் கவிதை பிடிக்கவில்லை. அந்த மாட்டின் வேதனையை அர்த்த நாரிச்வரர் அறிவாரா?//

  நானும் நீங்களும் உணரமறுக்கும்போது அர்த்தநாரீசுவரர் உணரலங்கிறது சரியில்லைங்க.

  எல்லோரும் பக்திப் பரவசத்துல மூழ்கி இருக்கும்போது அந்த மாட்டின் வலிஉணரும் கவிஞன் மனநிலைதான்
  முக்கியம். பிறன்வலியுணர்தல் முக்கியம்.

  //பரிசல்காரன் said…

  அந்த முத்திரைகவிதை தொகுப்பு என்கிட்டயும் இருக்கு. இதப் படிச்சதுமே, எடுத்துப் படிக்கணும்போல இருக்குண்ணா!!

  தேங்ஸ்!!!//

  கிருஷ்ணா எல்லா எழுத்துக்களும் ஏற்கனவே ஏதோ ஒருசமய்த்தில் ஏதோ ஒருவரால் எழுதப் பட்டவைதான். வெவ்வேறு சமயங்களில் நமக்கேற்படும் அனுபவத் துனுக்குகள் அதை வெளிப்படுத்தும். அவ்வளவே.

  //Mahesh said…

  நல்ல கலெக்ஷன்…

  மாடு கவிதை… ப்ளூ க்ராஸ் காரங்க படிக்கலையே?? //

  நன்றி மகேஷ். ப்ளூ க்ராஸ்காரங்களுக்கு கவிதை படிக்க நேரமிருக்குமா?

 19. அந்த முத்திரைகவிதை தொகுப்பு என்கிட்டயும் இருக்கு.

 20. நல்ல தொகுப்பு!!!

  //
  புத்தகங்கள அலமாரில அடுக்கி அழகு பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே யாராவது வீட்டுக்கு வந்தாலோ அல்லது விஷேச நாட்களிலோ அதை பரிசாகக் கொடுத்துவிடுவேன்//

  வீட்டுல நிறைய புத்தகம் இருக்கும்போது சொல்லுங்க, விஷேச நாளாக இருப்பது உசிதம். :-):-):-)

 21. //
  புத்தகங்கள அலமாரில அடுக்கி அழகு பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே யாராவது வீட்டுக்கு வந்தாலோ அல்லது விஷேச நாட்களிலோ அதை பரிசாகக் கொடுத்துவிடுவேன்//
  குறித்து வைத்துக் கொண்டேன்.. ;))

 22. நன்றி TVRK சார்
  நன்றி கபீஷ்
  நன்றி தமிழ். வெங்கட் சாமினாதன் புத்தகம் ஒன்னு உங்களுக்குக்காக வைத்திருக்கிறேன்.

 23. 2002ல் வெளிவந்தாலும், இப்போதும் அருமையாக இருக்கின்றன.

  நன்றிகள்.

  வாழ்க வளமுடன்
  தமிழ்நெஞ்சம்

  உங்களது வலைப்பூவில் தமிழ்2000க்கு ஒரு நாற்காலி கொடுத்தமைக்கு நன்றிகள்

 24. பழைய நினைவுகள் கிளறிவிட்டது உங்களோட கவிதை தொகுப்பு.

  எந்த வீட்டுல குரூப் போட்டா பார்த்தாலும் எனக்கு “நீயும் நானும்” கவிதை ஞாபகம் வரும். சில வரிகள் மறந்து போயிருந்தது. இனி மனசுல அப்படியே தங்கும்

  ரொம்ப நன்றிங்க.

 25. முன்பு படித்திருந்தாலும், இன்றும் அதே சுவாரசியம் நீடிக்கிறது ஒவ்வோர் கவிதையிலும்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s