கதம்பம் – 8/12/08


ஆசிப் அண்ணாச்சி, புதுகை அப்துல்லா, தமிழ்ப்பிரியன், ஆதிரை ஜமால் ஆகியோருக்கும் மற்றுள்ள இஸ்லாமியப் பதிவர்களும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

******************************************************************

காமராஜருடைய ஆட்சியில் விருதுநகர் பகுதியில் ஒரு பாலம் கட்டth திட்டமிடப்பட்டது. திட்ட விளக்கம் மற்றும் மதிப்பீடுகளைச் செய்யும் பொறுப்பு பொ ப து பொறியாளாரான தேவநாதன் உட்பட மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலம் கட்டப்பட வேண்டிய இடத்தை பார்வையிட்டு அந்த இடத்தின் மண் தன்மை மற்றும் பாலத்தின் மேல் செல்லக் கூடிய வாகனங்களின் நிறை மற்றும்
எண்ணிக்கைய கணக்கில் எடுத்து அந்த இடத்தில் பாலங்கட்டினால் அது தாக்குப்பிடிக்காது என்றும் வெள்ளம் அதிகரிக்கும் போது பாலச்சுவர்கள் அரிக்கப்பட்டு பாலம் இடிந்துவிடும் என்றும் காமராஜரிடம் சொன்னார்கள்.

அதுக்கு காமராஜர், “பாலங்கட்ட முடியாதுன்னு சொல்ல எதுக்கு எஞ்சினியர்ன்னேன். மணல் பகுதியில பாலங்கட்டினா வெள்ளம் வந்தா அரிக்கும் இடிஞ்சு விழும்னு படிக்காத எனக்கே தெரியும்ன்னேன். இதை சொல்லுறதுக்கா எஞ்சினியர் படிப்பு படிச்சிங்கன்னேன்? என்னைப் போல படிக்காதவங்க முடியாதுன்னு நினைக்கிறத உங்க படிப்பை பயன்படுத்தி முடிச்சுக்காட்டணும்னேன். ”

“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த இடத்தில் பாலங்கட்டுவதற்கான திட்டத்தை தயாரிக்கலன்னா வேலையை விட்டு அனுப்பிவிடுவேன்னேன்” என்று காலக் கெடு வைத்தார்.

எகிப்து நைல் நைதியின் கிளையின் குறுக்கே கட்டிய பாலத்தின் அடிப்படையில் இந்தப் பாலம் கட்ட திட்டம் தீட்டப் பட்டது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்.

*******************************************************************

இந்தியக் கலாச்சாரம் பற்றி எனக்கெப்போதும் பெருமிதம் உண்டு. தொ பரமசிவம் அவர்களின் “இந்தியப் பண்பாட்டுக் கூறுகள்” நூலில் படித்த இந்த விஷயம் அதை இன்னும் அதிகமாகியது.

திருமணமான 6 மாததிலேயே கணவன் இறந்து விடுகிறான். துக்கம் கேட்க வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி பாத்திரமொன்றில் நீர் நிரப்பி அதில் 3 ரோஜாப் பூக்களை மிதக்கவிட்டு நடுக் கூடத்தில் எல்லோர் பார்வையிலும் படுமாறு வைக்கிறார்.

இறந்தவரின் மனைவி 3 மாதக் கர்ப்பம் என்பதை நாசூக்காகச் சொல்லத்தான்.

இதுபோல ஒவ்வொன்றின் பின்னுள்ள அர்த்தம் என்னவென்று சரியாகப் புரிபடாமல் அதைக் குருட்டாம் போக்கில் பின்பற்றுகிறோம், பூனையைப் பிடித்து தூணில் கட்டிய சாமியாரைப்போல.

**********************************************************************

நா முத்துக்குமாரின் கவிதைகளில் எனக்குப் பிடித்த இன்னொன்று. வாழ்க்கையின் வசீகர விளையாட்டுக்களில் மேலேயும் கிழேயும் போய் வ்ருவதென்பது தவிர்க்கவியலாது. நிலைமாறும் உலகில் நிலையானதொன்று கையிலிருக்கும் காசளந்த ஏளனங்களும், அவலப்படுதலும் இன்ன பிறவும். உள்ளுணர்ந்த வலியின் வேதனையை தொட்டுணர்த்தும் கவிதை இது.

மதுரை ஸ்ரீமுனியான்டி விலாஸ்(ஒரிஜினல்)
எட்டாம் வகுப்பில்
அறிவியல் எடுத்த
கே.எஸ்.கே வாத்தியார்
எங்களை முன்வைத்து
தமிழ்ப் பேரகராதிக்கு
இரண்டு பெயர்ச் சொற்களை
தானமாக கொடுத்திருந்தார்.

சாதுவான பையன்களென்றால்
‘ஆரிய பவன்.’
சட்டாம்பிள்ளைகளுக்கு
‘முனியான்டி விலாஸ்.’

காலத்தின் சதுரங்க பலகையில்
முனியான்டி விலாஸும் நானும்
ஆடும் ஆட்டத்தில்
இரண்டே இரண்டு
நேர் எதிர்ப் புள்ளிகளில்
எப்போதும்
சந்தித்துக் கொள்வோம்.

திசையைத் தொலைத்த
திசையிலிருந்து
சதுரமான தட்டுடன்
எதிர்ப்படும் சர்வர்கள்.
அந்தப் பெருந்தட்டில்
வட்ட வட்டக் குறுந்தட்டுக்கள்
என் இருப்புக்குச் சவால் விடும்.
நண்டு, காடை, கோழி, ஆடு,
மீன், எறா, சுறா,
மூளை, குடல், ஈரல்
எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு
தட்டுக்கு தகுதியற்ற
‘சிங்கிள் ஆம்லெட்’ என்பேன்.
புறக்கணிப்பின் பெரும் வலியை
எனக்களித்து
உள்ளே செல்வார்கள்.

இரண்டு:
கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
‘மீன் குழம்பாவது கிடைக்குமா?’
எனக் கேட்டு
நிறம் மங்கிய
பீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருப்பார்.

பெருந்தட்டுக்கள் மறைந்து
விலைப்பட்டியல் அட்டையை
நீட்டும்துரித உணவகங்கள்
பெருகிவிட்ட இன்றும்
முனியான்டி விலாஸ்களுக்கே
மனம் விரும்பிச் செல்கிறது.
உணவின் ருசி
உணவில் இருப்பதில்லை.
புறக்கணிப்பின் கசப்பிலும்
குற்றவுணர்ச்சியின் காரத்திலும்
அது ஒளிந்திருக்கிறது.

***********************************************************************

தகுதி குறித்தல்லாது, எண்ணிக்கையை மையப்படுத்தியோ அல்லது அதிர்ஷடத்தின் பாற்படுத்தியோ ஒருவனைத் தேர்ந்த்தெடுத்தல் எவ்வாறான விளைவுகளைத்தரும் என்று நிறுவும் தென்கச்சி.கோ.சாமினாதன் கதைகளில் ஒன்று.

இப்படித்தான் ஒரு முறை, ஒரு பாலத்து வழியா வர்ற 100 ஆது காருக்குப் பரிசுன்னு முடிவு செஞ்சு அத ஒட்டீட்டு வந்த ஆளத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
பரிசுப் பணம் 10,000 ரூபாயக் கொடுக்கிறாரு அந்த ஊர் DSP.

DSP கேட்டாரு, “ ஏம்பா, இந்தப் பணத்த வச்சு என்ன செய்யப் போற?”

கார் ஓட்டியவர், “ சீக்கிரமா டிரைவிங் லைசன்ஸ் எடுக்கனும்ங்க”

“என்னது லைசன்ஸ் இல்லையா?” ன்னு ஆடிப் போய்க் கேட்டார் DSP.

அதுக்கு காருக்குள்ள இருந்து அவம்பொண்டாட்டி, “அவரு குடிச்சிருந்தா அப்படித்தாங்க ஏதாவது உளறுவாரு”ன்னா

”என்னது குடிச்சிருகாரா?”

அதுக்கு பின் சீட்டிலிருந்த அவனது அப்பா சொன்னாரு, “இதுக்குத்தான் இந்த கருப்புக்கலர் காரத் திருடவேண்டாம் ராசியில்ல, வேற காரைத் திருடுன்னேன், பெரியவங்க சொன்னதக் கேட்டாதானே” ன்னா.

Advertisements

54 comments

 1. //
  இந்தியக் கலாச்சாரம் பற்றி எனக்கெப்போதும் பெருமிதம் உண்டு. தொ பரமசிவம் அவர்களின் “இந்தியப் பண்பாட்டுக் கூறுகள்” நூலில் படித்த இந்த விஷயம் அதை இன்னும் அதிகமாகியது.

  திருமணமான 6 மாததிலேயே கணவன் இறந்து விடுகிறான். துக்கம் கேட்க வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி பாத்திரமொன்றில் நீர் நிரப்பி அதில் 3 ரோஜாப் பூக்களை மிதக்கவிட்டு நடுக் கூடத்தில் எல்லோர் பார்வையிலும் படுமாறு வைக்கிறார்.

  இறந்தவரின் மனைவி 3 மாதக் கர்ப்பம் என்பதை நாசூக்காகச் சொல்லத்தா//

  அண்ணா என் கருத்தை சொல்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.. இந்தியாவுக்கென எந்த பண்பாடும் கிடையாது. இந்தியா முழுவது பின்பற்றபடும் ஏதாவ்து ஒரே ஒரு பண்பாட்டை சொல்லுங்கள்? பண்பாடு என்பது மதம், மொழி ,இனம் சம்பந்தபட்டது. ஒரு பெண்ணுக்குள் இயல்பாக நடக்கும் மாற்றங்களை ஊரறிய விழாவாக எடுத்து அவளை தர்ம சங்கடப்படுத்தும் பண்பாடும் உண்டு. காலத்திற்கேற்ப பண்பாடும் மாற வேண்டும். இல்லையேல் இன்னமும் உடன்கட்டை ஏறிக்கொண்டுதான் இருப்போம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்திய பண்பாடு என உலகுக்கு சொன்ன நாம்தான் இன்று எய்ட்ஸில் முன்னனியில் உள்ளோம்.
  ஏதாவ்து தவறாக சொல்லியிருந்தால் திருத்தவும். மீண்டும் மண்ணிக்க‌

 2. கார்க்கி,

  என்னுடையதைப் போல உங்களுக்கும் கருத்துச் சொல்லவும், அதிலும் மாற்றுக் கருத்தைச் சொல்லவும் அதிக உரிமை இருக்கிறது. அதுதானே மிகப் பெரிய விடுதலை.

  இந்தியாவுக்குப் பண்பாடு இல்லையென்பதை நான் வன்மையாக மறுக்கிறேன். பதிவிலியே சொல்லியிருக்கிறேன், சடங்குகளின் உண்மையான அர்த்தத்தை விட்டுவிட்டு அதன் புறக்காரணங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

  எய்ட்ஸ் பற்றிய உங்கள் கருத்து ஏற்கப் பட வேண்டியதென்றாலும், எய்ட்ஸ் வராமல் இருக்கும் நம் போன்றோர் சதவீதம்

  அதிகமில்லையா. தங்கமணிகளைப் பற்றி இவ்வளவு புலம்பினாலும், அவர்களுடனே தொடர்ந்து வாழும் வகை செய்வது நமது பண்பாடுதான். யாரும் யாருடனும் என்பதில் எனக்கு உடண்பாடில்லை.

  எய்ட்ஸுக்கு முக்கியக் காரணம் தனிமனித ஒழுக்கமில்லமையே. மிகக்குறைந்த சதவீதமே ஊசி, ரத்தம் ஏற்றியது மூலமாகப் பாதிக்கப்பட்டவர்கள். மனைவியை உண்மையாக நேசிப்பவன் வேறு பெண்ணை எக்காலத்திலும் நாடமாட்டானல்லவா?

 3. //தங்கமணிகளைப் பற்றி இவ்வளவு புலம்பினாலும், அவர்களுடனே தொடர்ந்து வாழும் வகை செய்வது நமது பண்பாடுதான்.//

  ம்ம்ம்ம் என்ன பண்றது………………

  கடைசி ஜோக் ….. சிரிச்சி வயிறு வலிக்குது அண்ணாச்சி

 4. //இந்தியாவுக்குப் பண்பாடு இல்லையென்பதை நான் வன்மையாக மறுக்கிறேன். பதிவிலியே சொல்லியிருக்கிறேன், சடங்குகளின் உண்மையான அர்த்தத்தை விட்டுவிட்டு அதன் புறக்காரணங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்//

  நான் சொல்ல வந்தது அதுவல்ல. இந்தியாவிற்கென பண்பாடு இல்லை. தமிழர் பண்பாடு, கன்னட பண்பாடு,மராத்தியர் என தான் இருப்பதாக தெரிகிறது. இந்தியாவுக்கென பொதுவாக என்ன பண்பாடு இருக்கிறது?

 5. //எய்ட்ஸ் வராமல் இருக்கும் நம் போன்றோர் சதவீதம்

  அதிகமில்லையா. தங்கமணிகளைப் பற்றி இவ்வளவு புலம்பினாலும், அவர்களுடனே தொடர்ந்து வாழும் வகை செய்வது நமது பண்பாடுதான்.//

  இதை பற்றி பேச தயக்கம் இருக்கிறது. எய்ட்ஸ் வராததால் எல்லோரும் அப்படி என்று சொல்ல முடியாது. பல வருடங்களாகவே சின்ன வீடு கான்செப்ட் உண்டு. என்னைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் 50% அதிகமானோர் ஏக பத்தினி விரதர் இல்லை. அந்த சதவீதம் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பாதிக்குமேல் இப்படி என்பதை பல சர்வேக்கள் நிரூபிக்கின்றன. அப்புறம் எப்படி அதை நம் பண்பாடு என சொல்ல முடியும்? வார்த்தையில் மட்டுமே இருக்கும் பண்பாடு அது.

  நான் சொல வருவதை சரியா சொன்னேனா தெரியல.. நீங்க புரிஞ்சிப்பிங்கனு நினைக்கிறேன்

 6. புறக்காரணங்களை கொண்டாடுதல் என்பதன் முலம் என்ன சொல்கிறீர்கள் அவள் மூன்று மாத கர்ப்பமாய் இருக்கிறாள் என்பதை அங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்னன…

 7. \\ஏக பத்தினி விரதர்\\

  இந்த சொற்றொடருக்கு என்ன அர்த்தம் கார்க்கி…

 8. வேலன்,

  எனக்கு மிகவும் பிடித்த கவிதை பற்றி எழுதியதற்கு நன்றி. தென்கச்சியின் ‘கதை’ முன்பே கேட்டிருந்தது என்றாலும், சிரிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள் உண்மையிலேயே இருந்து ஆட்சி செய்தார்களா என்று சமயத்தில் தோன்றுகிறது.

  வழமை போல் மணக்கும் கதம்பம் என்பதுடன், எல்லா இசுலாமிய நண்பர்களுக்கும் ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன்.

  அனுஜன்யா

 9. கதம்பம் அருமை.. முத்துக்குமாரின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.

 10. கதம்பம் அருமை.. முத்துக்குமாரின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.

 11. கதம்பம் அருமை.. முத்துக்குமாரின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.

 12. //இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த இடத்தில் பாலங்கட்டுவதற்கான திட்டத்தை தயாரிக்கலன்னா வேலையை விட்டு அனுப்பிவிடுவேன்னேன்” என்று காலக் கெடு வைத்தார்./

  இது போன்ற காலங்களையும் கடந்திருக்கிறது பொதுப்பணி துறை என்ற ஆச்சர்யம்தான் மிஞ்சியது – இன்றைய நிலையினை நினைக்கையில்!

 13. எல்லா விசயங்களும் அருமை அண்ணாச்சி.

  தென்கச்சி கதையை இன்று காலையில தான் தொலைக்காட்சியில் அவர் சொல்லக் கேட்டேன்.

  வேறு ஏதாவது ஒரு சமயத்தில் கதையை உபயோகிக்கலாம் என நினைத்தேன். முந்திக் கொண்டீர்கள்.

 14. //நான் சொல்ல வந்தது அதுவல்ல. இந்தியாவிற்கென பண்பாடு இல்லை. தமிழர் பண்பாடு, கன்னட பண்பாடு,மராத்தியர் என தான் இருப்பதாக தெரிகிறது. இந்தியாவுக்கென பொதுவாக என்ன பண்பாடு இருக்கிறது?//

  ஒருவனுக்கு ஒருத்தி என்பது எல்லா இந்திய மானிலங்களிலும் உள்ள பண்பாடு. மேலும் வயதான காலத்தில் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்பதும் நம் பண்பாடு. பின் ஏன் முதியோர் இல்லம் எனக் கேட்பீர்கள். அதன் சதவீதம் குறைவு. இன்னும் வ்ளிம்பு நிலையில் வாழ்பவர்கள் தங்கள் பெற்றோரைக் கால் வயிற்றுக் கஞ்சியாவது ஊற்றுகிறார்கள்.

 15. //இதை பற்றி பேச தயக்கம் இருக்கிறது. எய்ட்ஸ் வராததால் எல்லோரும் அப்படி என்று சொல்ல முடியாது. பல வருடங்களாகவே சின்ன வீடு கான்செப்ட் உண்டு. என்னைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் 50% அதிகமானோர் ஏக பத்தினி விரதர் இல்லை. அந்த சதவீதம் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பாதிக்குமேல் இப்படி என்பதை பல சர்வேக்கள் நிரூபிக்கின்றன. அப்புறம் எப்படி அதை நம் பண்பாடு என சொல்ல முடியும்? வார்த்தையில் மட்டுமே இருக்கும் பண்பாடு அது.//

  சர்வேக்கள் எந்த மட்டத்தில் நடக்கிறது என்பதைப் பொறுத்தது அது. என் பெரியப்பாவுக்கே இரு தாரம். முன்னோர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால் என் தலைமுறையில் இது மாறியிருக்கிறது. சர்வேக்கள் என் மாதிரி நடுத்தர மக்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மேல மட்டத்திலேயே நடத்தப் படுகிறது.

 16. அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

 17. இந்திய கலாச்சாரம் என்றுமே சிறப்பானது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கு கூட சமீபத்தில் தான் முழுமையடைந்துள்ளது. 50 வருடங்களுக்கு முன் கூட இரண்டு மனைவிகள் வைத்திருந்தவர்கள் அதிகம் இருந்தனர். இதற்கும் எய்ட்ஸூக்கும் தொடர்பு இல்லை. இந்தியாவில் எய்ட்ஸ் அதிகம் பரவக்காரணம் விழிப்புணர்வு இல்லாதது தான். நம் நாட்டை விட பிற மேலை நாடுகளில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கின்றது. ஆனால் அவர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் தடுக்கப்படுகின்றது.

  எய்ட்ஸை ஒன்றை மட்டும் வைத்து இந்திய கலாச்சாரம் சரியில்லை என சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 18. //தமிழன்-கறுப்பி… said…

  புறக்காரணங்களை கொண்டாடுதல் என்பதன் முலம் என்ன சொல்கிறீர்கள் அவள் மூன்று மாத கர்ப்பமாய் இருக்கிறாள் என்பதை அங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்னன…//

  அந்தப் பெண் பிரசவிக்கும்போது மற்றவர்கள் அவதூறு பேசக்கூடாது. பிறக்கும் குழந்தைக்கு இறந்தவர்தான் அப்பா எனபதைச் சொல்லத்தான்.

 19. //முரளிகண்ணன் said…

  very nice annachchi. asaththalaa irukku kathampam//

  நன்றி முரளிக் கண்ணன்.

  //தமிழன்-கறுப்பி… said…

  \\ஏக பத்தினி விரதர்\\

  இந்த சொற்றொடருக்கு என்ன அர்த்தம் கார்க்கி…//

  ஒரு தங்கமணி ஒரு ரங்கமணி காம்பினேசன்.

 20. பதிவு அருமை. கார் நகைச்சுவை சூப்பர். பின்னூட்ட விவாதங்களும் பதில்களும் மிக அருமை.

 21. காமராஜர் பற்றிய செய்தி சூப்பர்…

  பின்னூட்டத்தில் இது போல ஆரோகியமான விவாதங்கள் தொடரட்டும்.

 22. //அனுஜன்யா said…

  வேலன்,

  எனக்கு மிகவும் பிடித்த கவிதை பற்றி எழுதியதற்கு நன்றி//
  முன்பொருமுறை உங்களுக்கு அனுப்பிய மெயிலில் இருந்துதான் காப்பி செய்தேன்.

  // தென்கச்சியின் ‘கதை’ முன்பே கேட்டிருந்தது என்றாலும், சிரிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.//

  அவரோடது மெல்லிய நகச்சுவை ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்தை முன் வைத்ததாக இருக்கும்.

  // காமராஜர், கக்கன் போன்றவர்கள் உண்மையிலேயே இருந்து ஆட்சி செய்தார்களா என்று சமயத்தில் தோன்றுகிறது.//

  அதுதாங்க உண்மையிலேயே பொற்காலம். இப்ப நடப்பது காமராஜர் ஆட்சி என்ற பெயரில் அவர் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் ஆட்சி.

 23. நன்றி சென்ஷி,
  நன்றி bee’morgan
  நன்றி ஆயில்யன்.
  உத்தரவிடும் தலைவனின் தகுதியைப் பொறுத்தே பணியாளர்கள் அமைகிறார்கள்; வேலைகள் நடைபெறும்.

 24. //வெயிலான் said…

  எல்லா விசயங்களும் அருமை அண்ணாச்சி.

  தென்கச்சி கதையை இன்று காலையில தான் தொலைக்காட்சியில் அவர் சொல்லக் கேட்டேன்.

  வேறு ஏதாவரதது ஒரு சமயத்தில் கதையை உபயோகிக்கலாம் என நினைத்தேன். முந்திக் கொண்டீர்கள்.//

  நன்றி வெயிலான். தென்கச்சியின் புத்தகத்தில் படித்ததைத்தான் எழுதினேன். இன்று தொ கா விலும் இதே கதை என்பது ‘நல்ல கதைதான் போங்க’.

 25. நன்றி தமிழ்.

  //எய்ட்ஸை ஒன்றை மட்டும் வைத்து இந்திய கலாச்சாரம் சரியில்லை என சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.//

  என் கருத்தும் அஃதே.

 26. நன்றி சிவா
  நன்றி மகேஷ், உங்க கருத்தையும் சொல்லுங்க.

 27. நீங்கள் பக்கவாட்டில் போட்டிருக்கும் நா முத்துகுமாரின் கவிதை வரி சலூன் கண்ணாடி என்றுதானே வரவேண்டும்?

  சலூன்

  பார்த்துக் கொண்டிருந்தேன்
  பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதைப்
  பார்த்துக் கொண்டிருந்தேன்

  என்று சின்ன வயதில் கிறுக்கியிருக்கிறேன் – கவிதைன்னு சொல்லலை:)

  முனிவாண்டி விலாஸ் கவிதையும் நல்லாருக்கு.

 28. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பண்பாடு என்று தனியாக ஏதாவது இருக்கிறதா என்பதே தெரியவில்லை. பலர் பழக்க வழக்கங்களையோ அல்லது குணங்களையோ பண்பாடு என்று சொல்லிவிடுகின்றனர்.

 29. வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

  http://www.thamizhstudio.com/

  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக

  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript

  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

  Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

 30. நன்றி சுந்தர்.
  கண்ணாடிகள்னு மாத்தீட்டேன். பண்பாடு என்பதே ஒரு சமுதாயத்தின் பழக்கம்தானே?

 31. இதே மாதிரித்தான் குழந்தை கண் ஆபரேஷனப்போ நொட்டை வேலைப் பண்ண ஆளுங்களையும் நச்சுனு கேட்டு வேண்டியதை செய்ய வெச்சாருல்ல பெருந்தலைவர்:):):)

  ஜோக் கலக்கல்:):):)

 32. //இறந்தவரின் மனைவி 3 மாதக் கர்ப்பம் என்பதை நாசூக்காகச் சொல்லத்தா//

  இதனைப் படித்தபொழுது எனக்குத் தோன்றிய விஷயங்களில் இருந்து சில வார்த்தைகள். தவறான கண்ணோட்டமென்றால் கூறவும்.
  அந்தக் குடும்பத்து நெருங்கிய உறவினர்களுக்கு அந்தப் பெண்ணின் கர்ப்பம் தெரிஞ்சிருக்கும்(சொந்தம் பிளஸ் சொத்து காரணங்களுக்காக இதை ஆமோதிக்கிறேன்). தெரியலைன்னாலும் சொல்லலாம். இதன் பின்னர் ஊர்காரங்களுக்கு இதை எதுக்கு சொல்லணும். அதாவது ஊர்காரங்க ஏன் இப்டி தனக்கு இன்னொருத்தரோட அந்தரங்க விஷயமும் தெரியனும்னு எதிர்பாக்கறாங்க? சில சமயம் முதல் மாத கர்ப்பம் பல பெண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்போது அப்பெண் கணவனை இழந்தால் ஊர்க்காரர்கள் என்ன பேசுவார்கள்? கர்ப்பம் தரிப்பது என்ன திட்டம் போட்டு நடக்கும் விஷயமா? கணவனை இழந்த ஓரிரு மாதங்களில் எல்லாம் பெரும்பாலான இடங்களில் மறுமணம் பற்றிக் கூட பலர் யோசிப்பதில்லை. அப்டியே அடுத்த மாதமே அவர் மறுமணம் செய்தாலும் அதைப்பற்றி யோசிக்க வேண்டியது அந்தப் பெண்ணும், அவரின் வருங்கால கணவரும். ஊர்க்காரர்கள் இல்லையே. இல்லை முறையற்ற உறவில், அதுவும் கணவரை இழந்த உடனே ஈடுபடுகிறார் என்று வைத்துக்கொண்டாலும், அப்டிப்பட்ட ஒரு நபர் அவர் என்றால், அவர் கணவர் உயிரோடு இருக்கும்போது கூட தன் இஷ்டப்படி நடந்திருக்க மாட்டாரா? இது ஒவ்வொன்றிலும் ஊருக்கு அவர் தன்னை நிரூபித்தாக வேண்டுமா? :(:(:(

 33. // rapp said…

  இதே மாதிரித்தான் குழந்தை கண் ஆபரேஷனப்போ நொட்டை வேலைப் பண்ண ஆளுங்களையும் நச்சுனு கேட்டு வேண்டியதை செய்ய வெச்சாருல்ல பெருந்தலைவர்:):):)//

  அத விவரமாச் சொன்னீங்கன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல?

  // ஜோக் கலக்கல்:):):)//

  நன்றி

 34. // rapp said…

  //இறந்தவரின் மனைவி 3 மாதக் கர்ப்பம் என்பதை நாசூக்காகச் சொல்லத்தா//

  இதனைப் படித்தபொழுது எனக்குத் தோன்றிய விஷயங்களில் இருந்து சில வார்த்தைகள். தவறான கண்ணோட்டமென்றால் கூறவும்.
  அந்தக் குடும்பத்து நெருங்கிய உறவினர்களுக்கு அந்தப் பெண்ணின் கர்ப்பம் தெரிஞ்சிருக்கும்(சொந்தம் பிளஸ் சொத்து காரணங்களுக்காக இதை ஆமோதிக்கிறேன்). தெரியலைன்னாலும் சொல்லலாம். இதன் பின்னர் ஊர்காரங்களுக்கு இதை எதுக்கு சொல்லணும். அதாவது ஊர்காரங்க ஏன் இப்டி தனக்கு இன்னொருத்தரோட அந்தரங்க விஷயமும் தெரியனும்னு எதிர்பாக்கறாங்க? சில சமயம் முதல் மாத கர்ப்பம் பல பெண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்போது அப்பெண் கணவனை இழந்தால் ஊர்க்காரர்கள் என்ன பேசுவார்கள்? கர்ப்பம் தரிப்பது என்ன திட்டம் போட்டு நடக்கும் விஷயமா? கணவனை இழந்த ஓரிரு மாதங்களில் எல்லாம் பெரும்பாலான இடங்களில் மறுமணம் பற்றிக் கூட பலர் யோசிப்பதில்லை. அப்டியே அடுத்த மாதமே அவர் மறுமணம் செய்தாலும் அதைப்பற்றி யோசிக்க வேண்டியது அந்தப் பெண்ணும், அவரின் வருங்கால கணவரும். ஊர்க்காரர்கள் இல்லையே?//

  அப்படி இல்லைங்கிறதாலதானே இந்த விவாதமே. பெண் எடுக்கும் முன் அந்தக் குடும்பதப் பத்தித் தீர தீர விசாரிக்கிறோம். அந்தக் குடும்பத்துல ஒரு பொண்ணு தனக்கு இஷ்டப்பட்டவனக் கட்டிக்கிட்டாலும் உடனே ஓடுகாலின்னு முத்திரை குத்தித் தள்ளி வச்சுடுறோம்.

  குறைந்தது இன்னும் இரு தலைமுறைகளாவது ஆகும் இதெல்லாம் மாற.

  //இல்லை முறையற்ற உறவில், அதுவும் கணவரை இழந்த உடனே ஈடுபடுகிறார் என்று வைத்துக்கொண்டாலும், அப்டிப்பட்ட ஒரு நபர் அவர் என்றால், அவர் கணவர் உயிரோடு இருக்கும்போது கூட தன் இஷ்டப்படி நடந்திருக்க மாட்டாரா? இது ஒவ்வொன்றிலும் ஊருக்கு அவர் தன்னை நிரூபித்தாக வேண்டுமா? :(:(:(//

  மனிதன் கூட்டமாக வாழும் விலங்கு. எனவே அவன் சார்ந்த கூட்டத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்படுதல் அவசியமாகிறது. இதை மீறி வாழ்தல் இயலாததல்ல. இருப்பினும் ஒரு நியதிக்குட்பட்டு வாழ்வதில் சில சவுகரியங்களும் இருக்கிறதல்லவா? அதை இழக்க நாம் தயாராக இல்லை.

 35. //மனிதன் கூட்டமாக வாழும் விலங்கு. எனவே அவன் சார்ந்த கூட்டத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்படுதல் அவசியமாகிறது. இதை மீறி வாழ்தல் இயலாததல்ல. இருப்பினும் ஒரு நியதிக்குட்பட்டு வாழ்வதில் சில சவுகரியங்களும் இருக்கிறதல்லவா? அதை இழக்க நாம் தயாராக இல்லை.
  //

  இதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். நான் இங்கு கூற வருவது நம்பிக்கை சார்ந்த சில சென்சிட்டிவ் விஷயங்களில் இப்படி செய்வது எவ்ளோ தவறு? சீதையை தீக்குளிக்க சொல்ற மனப்பான்மையும், அதுக்கு ஒத்து ஊதிய ராமாயண நாயகனின் கூற்றையும் ஆமோதிப்பது போலல்லவா உள்ளது? அது அவர்களின் தாம்பத்தியத்தை காயப்படுத்தும் விஷயமில்லையா? இந்த அதீத மூக்கைநுழைக்கும் தன்மைதானே, என் ஜாதிப்பெண்ணை நீ மனம்செய்துக்கொள்ளக்கூடாது என அதிகாரம் செலுத்தும் அளவிற்கு மோசமான சமூக அவலத்திற்கு பாதைப் போட்டுக்கொடுத்துள்ளது.

  //பெண் எடுக்கும் முன் அந்தக் குடும்பதப் பத்தித் தீர தீர விசாரிக்கிறோம். அந்தக் குடும்பத்துல ஒரு பொண்ணு தனக்கு இஷ்டப்பட்டவனக் கட்டிக்கிட்டாலும் உடனே ஓடுகாலின்னு முத்திரை குத்தித் தள்ளி வச்சுடுறோம்.//

  இது பழக்கத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக சரியாகிவிடுமா? அதனை தவறு என்றாவது பதிவு செய்ய வேண்டாமா? இல்லையென்றால் நாளைய தலைமுறையும் இன்னும் ரெண்டு தலைமுறை போகட்டும் என இருந்து விட மாட்டாங்களா?

 36. //அத விவரமாச் சொன்னீங்கன்னா//

  நான் பெருந்தலைவர் பற்றிய புத்தகத்திலும் படித்திருக்கேன். அதுப்போல காமராஜர் திரைப்படத்திலும் பார்த்தேன். ஒரு குழந்தைக்கு லண்டனில் பத்து நாட்களுக்குள் கண் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் பார்வை போய்விடும். அங்கு செல்ல அக்காலக்கட்டத்தில் அரசாங்க சார்பில் ஏதோ ஒரு அனுமதிக்கடிதம் தேவையெனும்போது, அதிகாரிகள் அபீஷியல் பேப்பர் வேலைகளையும், சட்டதிட்டங்களையும் சொல்லி, ஒரு மாதமாகும் என்றனர். விஷயத்தை காமராஜரிடம் அச்சிறுவனின் தரப்பினர் கொண்டுசென்றபோது, அதிர்ந்த காமராஜர், அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டார். அவரிடமும் அதே பதில். உடனே காமராஜர்,’ ஏன்யா,குழந்தைக்கு பத்து நாளில் operation பண்ணலைன்னா கண்பார்வை போயிடும்னா, இப்டி சொல்றீங்களே. மக்களுக்காக சட்டமா, சட்டத்துக்காக மக்களா? படிச்ச உங்களுக்கு இது தெரியாதா? கண்போயிட்டா திரும்ப கிடைக்குமா? என்ன செய்வீங்களோ தெரியாது, உடனடியா அனைத்தையும் செஞ்சு, அவங்க லண்டன் போக ஏற்பாடு செய்யணும்’ , அப்டின்னு சொல்லி உதவினார். அதுப்போலவே, அவர்களும் லண்டன் சென்று சிகிச்சையளித்து சிறுவனின் பார்வை காப்பாற்றப்பட்டது:):):)

 37. கடைசி நகைச்சுவை புதியதாக இருந்தது.

  நன்றிண்ணா.

 38. // rapp said…

  //சீதையை தீக்குளிக்க சொல்ற மனப்பான்மையும், அதுக்கு ஒத்து ஊதிய ராமாயண நாயகனின் கூற்றையும் ஆமோதிப்பது போலல்லவா உள்ளது? அது அவர்களின் தாம்பத்தியத்தை காயப்படுத்தும் விஷயமில்லையா? இந்த அதீத மூக்கைநுழைக்கும் தன்மைதானே, என் ஜாதிப்பெண்ணை நீ மனம்செய்துக்கொள்ளக்கூடாது என அதிகாரம் செலுத்தும் அளவிற்கு மோசமான சமூக அவலத்திற்கு பாதைப் போட்டுக்கொடுத்துள்ளது.//

  சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது யார் வகுத்த நியதி. ராமன் என்பது ஒரு காவியக் கதை என்று வைத்தாலும், பிறிதொருகாலத்தில் அவன் வழக்குறைக்கும்போது, உன் மனைவியே யோக்கியமில்லை நீயெல்லாம் பஞ்சாயத்துச் சொல்ல வந்து விட்டாயே என்பது போன்ற பேச்சுக்களைத் தவிர்க்கவே அவ்வாறு செய்ய நேர்ந்தது. சரியா தவறா என்பது வேறு. செய்வதா தவிர்ப்பதா என்பதில் செய்தே தீரவேண்டும் என்பதான முடிவெடுக்கப் பட்டது.

  //பெண் எடுக்கும் முன் அந்தக் குடும்பதப் பத்தித் தீர தீர விசாரிக்கிறோம். அந்தக் குடும்பத்துல ஒரு பொண்ணு தனக்கு இஷ்டப்பட்டவனக் கட்டிக்கிட்டாலும் உடனே ஓடுகாலின்னு முத்திரை குத்தித் தள்ளி வச்சுடுறோம்.//

  இது பழக்கத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக சரியாகிவிடுமா? அதனை தவறு என்றாவது பதிவு செய்ய வேண்டாமா? இல்லையென்றால் நாளைய தலைமுறையும் இன்னும் ரெண்டு தலைமுறை போகட்டும் என இருந்து விட மாட்டாங்களா?//

  அதத்தாங்க சொல்லுறேன், அந்தப் பெண்ணப் பத்தி தப்பும் தவறுமாப் பேசுறதவிட சந்தேகத்துக்கிடமில்லாம தெளிவாச் சொல்லுரோம்.

  நீங்க கேக்குறதென்னன்னா அத ஏன் எல்லோருக்கும் சொல்லனும் அந்தரங்கமானதுதானேன்னு. அப்படிப் பார்த்தா மாங்கல்யமே வேண்டாமே? கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் மற்றவ்ர்களுக்காக் ஏன் இந்த வேஷம்?

  கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பொண்ண எங்க வேனும்னானலும் கூட்டீட்டுப் போங்க ஆனா அதுக்கு முன்னாடி வேண்டாம்னு சொல்லுறோம். ஏன் அவங்க இருவருக்கும்தான் கல்யாணம்னு நிச்சயமாகி விட்டதே? ஏன் அனுமதிப்பதில்லை?

  பசங்க பைக் எடுத்துக்கிட்டு நடு ராத்திரி சுத்துற மாதிரி பெண்கள் சுத்த அனுமதிக்கப் படுவதில்லையே? வெளி இடங்களில் தங்குவதும் அவ்வாறே.

 39. ராப்,

  காமராஜர் பற்றிய தகவல் எனக்குப் புதுசு. நன்றி

  பரிசல்காரன் – நன்றி.

 40. உங்கள் கதம்பம் பின்னூட்டம் இடுவதே சற்று சிரமமாக இருக்கிறது.எதை விடுப்பது ..எதை தொடுப்பது என்றே தெரிவதில்லை.
  கலக்கல் வேலன்

 41. //இதுபோல ஒவ்வொன்றின் பின்னுள்ள அர்த்தம் என்னவென்று சரியாகப் புரிபடாமல் அதைக் குருட்டாம் போக்கில் பின்பற்றுகிறோம்//

  உண்மை தான் வேலன், அதே சமயம். நாம் செய்யும் பல செயல்களுக்கு அர்த்தம் உள்ளது ஆனால் ஒரு சிலர் அதற்கான காரணம் தெரியாமல் முட்டாள் தனமான செயல்களை செய்வதாக கூறுவதுண்டு.

 42. // T.V.Radhakrishnan said…

  உங்கள் கதம்பம் பின்னூட்டம் இடுவதே சற்று சிரமமாக இருக்கிறது.எதை விடுப்பது ..எதை தொடுப்பது என்றே தெரிவதில்லை.
  கலக்கல் வேலன்//

  நன்றி சார். உண்மையில் இதையெல்லாம் தனிதனிப் பதிவாக எழுதலாம்தான். ஆனால் நேரம் வாய்ப்பதில்லை. பொங்கலுக்குப் பிறகு ஒரு வேளை எழுதக்கூடும்.

 43. காமராஜர் போன்ற ஒரு தலைவர் இனி தமிழ்நாட்டுக்கு கிடைப்பாரா?

 44. பொண்ணு என்னங்க ஒரு வகை சொத்தா இல்லை போகப்பொருளா? அவளை எவனோ ஒருத்தன் யாரு சந்தேகப்பட? சீசரின் மனைவி எதுக்காக ஊர்ல இருக்கறவனோட சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளா இருக்கணும்? அவங்கவங்க புத்தியப் பொருத்ததில்லயா இது? சீசரோட மனைவியோட அந்தரங்கத்தை நோண்டிப் பாக்குறது என்னைப் பொறுத்தவரை தப்புதான்.

  //கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பொண்ண எங்க வேனும்னானலும் கூட்டீட்டுப் போங்க ஆனா அதுக்கு முன்னாடி வேண்டாம்னு சொல்லுறோம். ஏன் அவங்க இருவருக்கும்தான் கல்யாணம்னு நிச்சயமாகி விட்டதே? ஏன் அனுமதிப்பதில்லை//

  அப்போ காதலித்து திருமணம் செய்தவர்கள் எந்த லிஸ்டில் வருவாங்க? பிளஸ் எனக்குத் தெரிஞ்ச முக்காவாசிப் பேர் இப்போ நிச்சயமான உடன் சேர்ந்து பல இடங்களுக்கு செல்கிறார்கள்.

  //நீங்க கேக்குறதென்னன்னா அத ஏன் எல்லோருக்கும் சொல்லனும் அந்தரங்கமானதுதானேன்னு. அப்படிப் பார்த்தா மாங்கல்யமே வேண்டாமே? கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் மற்றவ்ர்களுக்காக் ஏன் இந்த வேஷம்//

  கல்யாணம்கறது என்ன?ரெண்டு பேருக்கிடையில் ஏற்படும் ஒப்பந்தம். இதில் ஈடுபட்டுள்ள காலம்வரை ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்போம். இதுதானே? மாங்கல்யம் புனிதமானதுன்னா, ஏன் பதிவு பண்ணனும்? இப்டி இருக்கு உங்க கேள்வி. அந்தக்காலத்துல நம்மகிட்ட இருந்தா தாலி வந்துச்சி? இடையில் வந்ததுதானே? ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தக் கூடாதுங்கறது அதன் அடிப்படை, ஆனா அதை ஊருக்கு நிரூபிக்கணும், அதுவும் பெண் மட்டுமே நிரூபிக்கனுங்கறது சரியான விஷயமா? பெண் ஒரு மனிதப் பிறவிதானே. ஊரார் சொல்றாங்க சொல்றாங்கன்னா, அவங்க எல்லாத்துக்கும் எல்லாக்காலத்திலும் சொன்னவங்கதான். மறுமணத்தில் இருந்து விவாகரத்து வரை எல்லாவற்றிற்கும் தடை போட்டவர்கள்தான் ஊரார். நாம்தானே மீண்டு வெளியில் வரவேண்டும்.

  //பசங்க பைக் எடுத்துக்கிட்டு நடு ராத்திரி சுத்துற மாதிரி பெண்கள் சுத்த அனுமதிக்கப் படுவதில்லையே? வெளி இடங்களில் தங்குவதும் அவ்வாறே.//

  இப்பொழுது இதிலேயே பெரிய மாற்றம் வருகின்றது. அதுவும் ரெண்டாவது பாயின்ட் ஏன் சொல்லிருக்கீங்கன்னே புரியலை.

  முதல் காரணத்தை எடுத்துப்போம், ஏன் வெளியில் நடுராத்திரி செல்ல வேண்டாம் என்று சொல்கிறோம்? ஒன்று திருட்டு, கொள்ளை போன்ற காரணம். இதனால் இருபாலரும் பாதிக்கப்படுவார்கள்.
  மற்றொன்று பாலியல் வன்புணர்ச்சி. பாலியல் வன்புணர்ச்சிங்கர சொல் பயன்படுத்த ஆரம்பித்ததாலேயே இப்போ நாம் எல்லோரும் தெளிவு பெற்றுட்டோம்னு நெனச்சேன், ஆனா இல்லை போலருக்கு. அது ஏன் கவலைக்குரிய விஷயம்? ஒரு காரணம், உடலளவில் துன்புறுத்தப்படுவது, ரெண்டாவது காரணம் நோய்கள் வரவாய்ப்புள்ளது, மூன்றாவது மனதளவில் மிகுந்த வேதனைக்குள்ளாவது, நான்காவது கர்ப்பம் தரிப்பது. இவற்றில் மூன்றாவது காரணம்தான் மிக முக்கியமானது, இன்பத்தை தரக் கூடிய ஒரு இயற்கையான உணர்வுக்கே இந்த விபத்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். யோசித்துப் பாருங்கள் நான்காவதைத் தவிர்த்து மற்றவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். பாதிப்பு ஒன்றுதான். ஆனால் ஆண்கள் மனதளவில் காலங்காலமாக இதை தவறில்லை என்று பதிய வைத்ததினால், இதுபோன்ற சமயங்களில் கொஞ்சம் சீக்கிரம் மீண்டுவிடுகின்றனர்.

  கமல் விக்ரம் படத்தில் விதண்டாவாதமாகக் கூறுவார், நாங்க வெயில் காலத்தில் வெறும் லுங்கியோட உக்காந்திருப்போம், பெண்களால் முடியுமான்னு? அப்டி இருக்கு பல விஷயங்கள்:(:(:( இதற்கு விதண்டாவாதமாக பதில் கூறுவதென்றால், வெளிநாட்டில் பல இடங்களில் கமல் கூறுவதைப் போன்று பார்க்கலாம். ஏன் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஜாதிக் கொடுமையால் நம்மூரில் கூட அது இருந்தது. அத்துனைப் பெண்களும் அப்படியே திரிந்தால் அதுவும் சாதாரணமாகி விடும்.

 45. அண்ணே தங்களின் வாழ்த்திற்கு நன்றி. அப்புறம் அது ஈகைத் திருநாள் அல்ல…தியாகத் திருநாள்.

 46. இன்னொரு காமராஜர் நமக்கு கிடைப்பாரா? 😦

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s