கடல்புரத்தில் – வண்ணநிலவன்

சென்னை போன்ற பெருநகரங்களில், மூச்சு முட்டும் நெருக்கடியான வாழ்க்கையைப் பாவிப்பவர்கள், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தூத்துக்குடியருகில் இடம்பெயர்ந்து வாழ்ந்தால் கிட்டும் அனுபவங்கள் இந்தநாவல் முழுவதும் வாக்கியங்களால் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

வாசித்து முடித்ததும், “நல்லாத்தாம்ல இருக்கு” என்று அந்த பாஷை அனிச்சையாக வந்து விழுவதைத் தவிர்க்கவியலாது.

க்ரூஸ் மிக்கேல், மரியம்மை, பிலோமினா, செபஸ்தியன், அமலோற்பவம், சாமிதாஸ், ரஞ்சி, ஐசக், ரொசாரியோ, சிலுவை, வாத்தி, பவுலுப் பாட்டா, மாமியாக் கிழவி ஆகிய கதை மாந்தர்களைப் புள்ளிகளாக்கி வரையப்பட்டக் கோலம். புள்ளிகளைச் சுற்றியும், வெட்டியும், ஒட்டியும், குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கற்றும், தன்னளவில் ஏதோ ஒரு ஒழுங்கின்பாற்படுவதாகவும் இருக்கிறது.

வாத்தியார் வேலை பார்க்கும் மகன் செபஸ்தி, மேலும் காசு பார்க்கும் ஆசையில், சாயபுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் கடைவைக்க விழைகிறான்.

//வல்லம் எப்படியும் இன்றைய கிரையத்துக்கு அறுநூறு வரை போகும். வீடு ஆயிரத்துக்கு மேல் போகும். எல்லாம் அப்பச்சியின் மனசு இறங்க வேண்டும். (அப்பச்சி – அப்பா. கதை நடப்பது 1970 களில்.)//

இத்தனை நாள் கைகொண்ட தொழிலை விட மனசில்லாதவராகவும், சோற்றுக்கு வழிகாட்டிய வல்லத்தை விற்கவும் மறுப்பவராகவும் அப்பா க்ரூஸ் மிக்கேல்.

//”இன்னும் காலுங் கையும் தெடமாட்டு இருக்கு . வல்லத்தை ஒத்தை ஆளா நின்னு கடல்ல தள்ளிவுடத் தைரியமிருக்கு… எல்லாத்துக்கும் மேல மாதா இருக்கா. இந்தக் குருஸுக்கு அம்மையும் மச்சங்களும்தான் விசுவாசத்துடனிருக்கு”//

மனைவியின் மீதிருக்கும் அன்பு நீறு பூத்த நெருப்பாக வெளிப்படுகிறது. மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு தெரிந்திருந்தும் அவளை வெறுத்து ஒதுக்க முடிந்ததில்லை.

//”அவளை வெறுத்தான். ஆனாலும், அவளிடம் அளவு கடந்த ஆசை கொண்டிருந்தான் அவளுக்கென்று ஒரு அழகு இருந்தது. அது அவளுடைய உடம்புதான். அவளுடைய மடியில் தலை சாய்த்துக் கிடந்தால் போதும், மனசில் வீரமும் விவேகமும் விளையும்”//

வல்லத்தையும் வீட்டையும் விற்க நேர்கையில் தன்வயமிழந்தலைகிறார்.

//குருஸ் வல்லத்தினருகே போய் தன்னுடைய பிரியமான ஒரு குழைந்தையை நீண்ட காலம் பிரிந்திருந்த ஏக்கத்துடன் அதைத் தடவிக் கொடுத்தான். அது அவனுடைய மரியம்மையைப் போல கடலில் அவனுடனே அவனுடைய கஷ்டங்களையும் சந்தோஷங்களைம்கூடஇருந்து அனுபவித்ததல்லவா? அவனுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. மார்பு ஏறி இறங்கியது. அப்படியே அதனருகே பொட்டலத்தை மணலில் வீசிவிட்டு கடலைப் பார்த்தபடியே விழுந்து கிடந்தான்.//

மகனுடன் சென்றால் சீவிச் சிங்காரிக்கவும், உடன்குடித் தேட்டரில் அடிக்கடிப் படம் பார்க்கவும் ஆசைப்படும் அம்மா. தன் இயலாமை, இல்லாமை இரண்டுக்கும் வாய் கொப்பளிக்க வந்து விழும் வார்த்தைகளும் வாத்தியாரும்தான் வடிகால்.

//”ஆமாண்டி… ஆசைதான். நீ இங்க கெடக்கப் போறீயோ? கெட.. கெட. ஒன் அப்பச்சியோட கெட… நீ ஏன் இங்க இருக்க ஆசப்படுதன்னு எனக்குல்லா தெரியும் . ஒன் சங்கதியெல்லாம் தெரியாதுன்னிட்டு நெனைச்சிருக்கியோசிறுக்கி. இரி… இரி… ஒன் அப்பச்சி வரட்டு்”//

//அவளால் வாத்தியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. முதலில் அடிக்கடிதினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தாள். வயசாக வயசாக அதைக் குறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருபோதும் அவள் வாத்தியைப் பார்க்காமல் இருந்தது கிடையாது. அவளுக்கும் வாத்திக்கும் உள்ள ஸ்னேகம் அவ்வளவு நெருக்கமானது.//

ஆயினும் மற்றெல்லாக் கதாபாத்திரங்களைவிட முன்நிற்பது பிலோமினாதான்.

அப்பாவிடம் பாசம். அம்மாவிடம் அன்பு. அண்ணன் செபஸ்திடம் பிரியம். சாமிதாசுடன் காதல். ரஞ்சியிடம் தோழமை. வாத்தியிடம் வாத்சல்யம். என எல்லாம் கலந்த ஒரு படைப்பு.

தனிமையில் இருக்கும் ஒரு நாளில் சாமிதாசிடம் தன்னை இழக்கிறாள் பிலோமி. மிக நசூக்காகவும் அழுத்தமாகவும் எழுதப்பட்டிருக்கும் இச்சம்பவம் கதையின் சிக்கல்களுல் ஒன்று.

//“ பிலோமி திமிறவும் இல்லை, திமிறாமலும் இல்லை. அவளுக்கு வேண்டும் போலவும் வேண்டாம் போலவும் இருந்தது. ஒரு கணத்துக்கு அம்மையின் சிடுசிடு முகம் கண் முன்னால் வந்தது. பிறகு, அதுவும் மறைந்து போனது. அதற்குள் சாமி அவளைத் தன்வசப் படுத்தியிருந்தான். அவளுக்குச் சொல்வதற்கு ஒன்றும் இல்லமல் ஆகிவிட்டிருந்தது.”//

//ரஞ்சி பிலோமியுடைய கையைப் பிடித்துக் கொண்டபோது, ரஞ்சிக்கு நெஞ்சே கீழே விழுந்துவிட்டது போல் இருந்தது. அந்தக் கை எவ்வளவு நேசத்தை வாரிக் கொடுக்கிற கை. இந்த ஸ்னேகமெல்லாம் என்ன விலை பெறும்? வீட்டுக்கு வெளியெ ஆர்ப்பரிக்கிற கடலையே கை நீட்டிக் கொடுத்தால்கூடத் தகுதியானதுதானா? இதெல்லாம் எப்படித் தானே விளைகின்றன? மனுஷர்களுக்குள்ளே மிகவும் கொடியவர்களென்று சொல்கிறோமே அவர்களுக்கும் இது போல ஒரு ஸ்நேகிதம், இது போல ஒரு நேயமான கையை அறிமுகமில்லாமலா இருக்கும்? இதெல்லாம் பரந்தது, ஆழமானது; அந்தக் கடலையே போல இவைகளெலெல்லாம் தான் வாழ்வின் பிடிப்புகள் பிரித்துப் போட இய்லாதபடி மாயமாய் பிணைந்து கிடக்கின்றன. எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை. அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும்தான் காரணம்.//

ஒரே குடும்பமெனினும் அவரவர் ஆசைகளும் அபிலாசைகளும் அவரவருக்கு.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்லும் எனபதான வாழக்கை, புரட்டிப் போடுகிறது இவர்களையும். மரியம்மை மறைவு, சாமிதாசின் துரோகம், க்ரூஸின் மனநிலை பிறழ்தல், சிலுவையின் நம்பிக்கைத் துரோகம் எல்லாம் ஒன்றுகூடியோ அல்லது தனித்தனியாகவோ பிலோமியை ஆதரவு தேடி வாத்தி பக்கம் செலுத்துகிறது.

//வாத்தி அங்கே வந்து போய் இருக்கிறது பற்றி ஊரில் பேச்சும் வந்துவிட்டது. அந்தப் பேச்சு சாமிதாஸ் காதிலும் விழுந்தது. அவனுக்கு வேறு ஊரில் கல்யாணம் நிச்சயமாகி இருந்தாலும் அவனால் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. ரஞ்சிக்கு எல்லாந் தெரியும். அதனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

ஒரு நாள் பிலோமி வாத்தியிடம் இப்படிச் சொன்னாள், “ நீங்க மட்டும் இல்லையின்னா இந்த பிலோமி கடல்ல வுழுந்து மரிச்சிப் போயிருப்பா…”//

இரண்டு விஷயங்களை இந்நாவலின் சிறப்புக்கான காரணங்களாக என்னால் முன் வைக்க முடிகிறது.
1. ஒரு முறைதான் கூடினாலும், பிலோமிக்கு அனுதாபம் சேர்க்கிறேனென்று அவளைக் கர்ப்பமாக்கமல் விட்டது.
2. காதலித்தவளைக் கைவிட்ட சாமிதாசைத் தண்டிக்கமல் இயல்பாக நாவலை முடித்தது.

//”சும்மா உள்ளே வாங்க இது அசல் மனுஷர் வீடு இல்லை. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை. ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றன. பிலோமி அவனுடைய தவ்விப்பைப் பார்த்திருந்தாள். நார்ப் பெட்டிகள்கிடந்த மூலையைப் பார்த்தாள். அதன் மேலே அவள் சேலை சுருட்டிக் கிடந்தது,அதனுடன் கிடைக்கையில் அடிக்கடி நினைத்துக்கொண்ட அம்மை பற்றின பயம், வல்லத்துப் பாய்களைப் போலே குடை பிடித்துக் கொண்டு உப்பிப் பறந்த அந்தச் சுகம் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.

மீண்டும் அவனே பேசினான். அவள் மௌனித்திருந்தாள்.

“நீ என்னய மன்னிக்கனும்… எனக்கு மாப்புத் தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளைச் செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சி;அதான் வந்தேன். நீயும் கண்டிச்ஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரெம்ப நெனைச்சுகிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

ம்…”

பிலோமி சொல்லவில்லை சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளுக்கு அபூர்வமான சோபையைத் தந்தது.//

சமுதாயத்தைப் பிரதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது ஒரு நல்ல இலக்கியப் படைப்பின் இலக்கணம். பரதவர்களின் வாழ்க்கையை அதன் ஒழுங்குகளுடனும், ஒழுங்கீனங்களுடனும் அதன் போக்கிலேயே பதியப்பட்டிருக்கிறது. இதை வேறெப்படியும் எழுதியிருக்க முடியாது. ஏனெனில் இன்னுமொரு பிலோமினாவும், சாமிதாசும், செபஸ்தியும் இதன் நீட்சியாக வேறு பெயர்கள் தாங்கியும் வேறு ஊர்களில் தங்கியும் இதை வாழ்ந்து கொண்டுதானிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் ஆசைகளும் அபிலாஷைகளும் வேறு விதத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கும்.

ஆசைகளற்று வாழ வேண்டுமென்பதே ஆகப்பெரிய ஆசையில்லையா?

இந் நாவலைப் அனுப்பிய கிழக்குப் பதிப்பகத்துக்கு நன்றி.

Advertisements

17 comments

 1. /ஆசைகளற்று வாழ வேண்டுமென்பதே ஆகப்பெரிய ஆசையில்லையா/

  வழக்கம்போல உங்களின் முத்தாய்ப்பான கருத்து.

  /வாசித்து முடித்ததும், “நல்லாத்தாம்ல இருக்கு” என்று அந்த பாஷை அனிச்சையாக வந்து விழுவதைத் தவிர்க்கவியலாது./

  நல்லாருக்கு. நான் இனிமேல்தான் படிக்கணும்.படிக்கிற ஆசையைத் தூண்டிடுச்சி உங்க எழுத்து.

 2. எனக்கு மிகப் பிடித்த புத்தகங்களுள் ஒன்று கடல்புரத்தில். உங்களுடைய write-up நன்றாக வந்துள்ளது.

 3. // கபீஷ் said…

  இது டிடி-யில் தொடராக வந்துச்சு இல்ல!//

  ஆமாங்க 13 வாரத் தொடரா வந்தது.

 4. ச.முத்துவேல் said…

  /ஆசைகளற்று வாழ வேண்டுமென்பதே ஆகப்பெரிய ஆசையில்லையா/

  வழக்கம்போல உங்களின் முத்தாய்ப்பான கருத்து.

  /வாசித்து முடித்ததும், “நல்லாத்தாம்ல இருக்கு” என்று அந்த பாஷை அனிச்சையாக வந்து விழுவதைத் தவிர்க்கவியலாது./

  நல்லாருக்கு. நான் இனிமேல்தான் படிக்கணும்.படிக்கிற ஆசையைத் தூண்டிடுச்சி உங்க எழுத்து.//

  நன்றி முத்துவேல்.

 5. ஏற்கனவே நீங்க ரொம்ப பெரியாளுன்னு தெரியும், இதுல பதிப்பகங்கள் புத்தகங்கள் அனுப்பி விமர்சனம் கேட்கும் அளவில் பெருசுன்னு இப்பதான் புரியுது. வணக்கம்ங்கண்ணே.. நம்பள கொஞ்சம் பாத்து வெச்சிக்கிடுங்க.!

  வழக்கம் போல சிறப்பான பதிவு.

 6. நல்ல விமர்சனம்.

  வடகரை என்றவுடன் நீங்கள் தென்காசி பக்கம் உள்ள சாம்பவர் வடகரை என்று நினைத்தேன். தூத்துக்குடி பக்கம் வடகரை இருக்க.

  குப்பன்_யாஹூ

 7. தென்காசிப் பக்கம் இருக்க வடகரைதாங்க. பம்புளிக்கும் நெடுவலிக்கும் நடுவில இருக்கே அந்த ஊருதான்.

  நீங்க?

 8. அம்மாடி… அருமையான அறிமுகம். விமர்சனம் பண்றது கூட ஒரு பெரிய கலை. சிறப்பா செஞ்சுருக்கீங்க.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s