கொஞ்சம் கவிதை

கவிதைகள் எனக்கு அறிமுகமானது +2 படிக்கும் போதுதான். அதுவரை நாவல் சிறுகதை என்று வாசித்துக் கொண்டிருந்தவன் கவிதைகள் பக்கம் திரும்பியது நண்பன் நாகராஜன் மூலம்தான்.

அப்பாவுடன் இலக்கிய மன்றக் கூட்டங்களுக்குப் போவதுண்டு என்றாலும் அது என் போன்ற சாதாரண ஆட்களுக்கில்லை என்ற எண்ணம் உண்டு. வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்பு-தான் முதலில் படித்தக் கவிதைத் தொகுதி.

மு.மேத்தா, மீரா, அப்துல் ரஹ்மான், ஈரோடு தமிழன்பன், கல்யாண்ஜி, கலாப்பிரியா, பழமலை போன்ற கவிஞர்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். மேலும் நல்ல கவிதைகள் திரு.சுஜாதா அவர்கள் மூலம்(க.க.பக்கங்கள்) அறிமுகம்.

காதல் கவிதைகள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. நண்பர்கள் எழுதி வாசிக்கும் போது வயிற்றைப் பிசையும். கொஞ்சம் மையமா நல்லா இருக்குன்னும் சொல்லாம இல்லைன்னும் சொல்லாம சமாளிச்சுடுவேன். எப்படிச் சொன்னாலும் வம்பு. எல்லோரும் சுலபமாக எழுதத்துடிப்பதும் அவ்வளவு சுலபமாக எழுத முடியாததும் காதலின் சிறப்பு. நல்ல காதல் கவிதைகள் வெகு சிலவே. மற்றவைக் காதலியை வருணனை செய்து காக்கா பிடிக்கவே. ’வாடி வாடி கைபடாத சி டி’ வகை.

சமீபத்தில் படித்ததில் எனக்குப் பிடித்த சில கவிதைகள் இங்கு தருகிறேன்.

நடன ஒத்திகை

37, 38 எனக்
கடந்து கொண்டிருந்தது வயது
முந்தைய நாள்
பள்ளி ஆண்டு விழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள்
தன் மகளைப் போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.
– நரன்
– உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.

வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

– நரன்
– உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.

காத்துக் கிடந்த பக்கங்கள்

உன் மேஜை மேல்
புத்தகமொன்று விரிந்து கிடக்கிறது
காற்றின் கரங்கள்
புதுப் புதுப் பக்கங்களாய் என்னைக்
காட்டிக் கொண்டிருக்கிறது உனக்கு.
முழுதுமாய் நீ
வாசித்து விடுவாயென்ற வேட்கையில்
வேகவேகமாய்ப் புரண்டு படுக்கையில்
முடிவதற்கு முன்பாகவே
சட்டென்று மூடி விடுகிறாய் என்னை.
மீண்டும் உன் மேஜை மேல்
அந்தப் புத்தகம் காத்துக் கிடக்கிறது
மின் விசிறியைப் பார்த்தபடி
மிச்ச அதன் பக்கங்களோடு.

-எஸ்.நடராஜன்
– தீராநதி அக்டோபர் 2008 இதழில்.

அவள் விகடனில் சில சமயம் அத்தி பூத்தாற்போல நல்ல கவி்தை கிடக்கும்.

தூரத்து அப்பா

குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.

-எம்.சுதா முத்துலட்சுமி
– அவள் விகடன் – 24 அக்டோபர் 2008

Advertisements

21 comments

 1. எல்லா கவிதைகளுமே அருமை….

  நிறைய தேடி படிச்சிருக்கீங்க… வாழ்த்துக்கள்…

 2. அண்ணா நீங்க இவளோ புத்தகங்கள் படிப்பீங்களா.. எல்லா கவிதையுமே முத்து முத்தா இருக்கு. இப்போ வலைத்தளம் பக்கம் வந்ததில் இருந்து, புத்தகங்கள் படிக்க நேரமே கிடைப்பதில்லை…

 3. எல்லா கவிதைகளுமே நல்லா இருக்குது..

  //அவள் விகடனில் சில சமயம் அத்தி பூத்தாற்போல நல்ல கவிதை யும் கிடக்கும்.//

  :))

 4. சென்ஷி said…

  எல்லா கவிதைகளுமே நல்லா இருக்குது..

  //அவள் விகடனில் சில சமயம் அத்தி பூத்தாற்போல நல்ல கவிதை யும் கிடக்கும்.//

  உயர்வு சிறப்பு உம்மையா?

 5. வேலன், எல்லாமே அருமையான கவிதைகள். நரன் உயிர்மையில் எழுதிய இன்னொரு கவிதை:

  //குட்டிக் குழந்தை

  4வயது குட்டிக் குழந்தை
  மிகக்குட்டியான உடையை உடுத்துகிறது.
  தன் குட்டியான பாதங்களால்
  குட்டியான அடிகளை எடுத்து வைக்கிறது
  இப்பிரபஞ்சத்தின் மீது
  33வயது தந்தையின் மிகப்பெரிய
  பூட்சுகளை அணிந்தபடி
  பெரிய பெரிய அடிகளை எடுத்து வைக்க
  முயல்கிறது.
  தந்தையின் பெரிய கால்சராயை
  அணிந்து கொள்கிறது.
  இடுப்பில் நிற்காத அக்கால் சராய்
  அவிழ்ந்து அவிழ்ந்து விழுகிறது
  33 வயதிலிருந்து
  4வயதிற்கு//

  நல்ல கவிதைகளைத் தேடிப் படித்து, பரிந்துரைக்கும் உங்களுக்குப் பாராட்டுகள். ஆனாலும் எங்களை இவ்வளவு பரிகசிக்க வேண்டாம் நாலாவது பத்தியில்.

  அனுஜன்யா

 6. அனுஜன்யா,

  இன்னொரு நல்ல கவிதையைத் தேடிப் படிக்கத் தந்ததற்கு நன்றி.

  எல்லா கவிஞர்களையும் கலாய்க்கல அம்மதிரி எழுதும் கவிஞர்களத்தான். நீங்க நல்ல கவிஞர் வரிசையில வருவதால தப்பிச்சீங்க.

 7. அருமையான கவிதைகளை அறிமுகம் செய்ததற்கு நன்றி வேலன்.. நான்குமே அருமை..

 8. //அப்பாவுடன் இலக்கிய மன்றக் கூட்டங்களுக்குப் போவதுண்டு//

  உங்கள கெடுத்தது அவர் தானா

 9. கடைசி நேரத்தில் என் கவிதையை எடிட் செய்தது எனக்குத்தெரியும். மறைக்காதீர்கள், ஒப்புக்கொள்ளுங்கள்.! ஹைய்யா.. வந்துட்டேனே..

 10. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………… நான் இதுக்கு பின்னூட்டம் போட்டா கும்மப் போறாங்கன்னு பயமா இருக்கு. ஏன்னா, எல்லாமே நல்ல கவிதைகளா இருக்கு:):):)

 11. கவிதை மாதிரி எழுதுற என்னையவே பாராட்டுறீங்க… நரேன் போன்ற கவிஞர்களைப் நீங்கள் பாராட்டுவதில் என்ன ஆச்சர்யம்?

 12. //தாமிரா said…

  கடைசி நேரத்தில் என் கவிதையை எடிட் செய்தது எனக்குத்தெரியும். மறைக்காதீர்கள், ஒப்புக்கொள்ளுங்கள்.! ஹைய்யா.. வந்துட்டேனே..//

  வாங்க தாமிரா. சுந்தரத் தெலுங்கு தேசத்தில் பெற்ற அனுபவங்களை பதிவிடுங்கள் ஆவலாக இருக்கோம்.

 13. // rapp said…

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………… நான் இதுக்கு பின்னூட்டம் போட்டா கும்மப் போறாங்கன்னு பயமா இருக்கு. ஏன்னா, எல்லாமே நல்ல கவிதைகளா இருக்கு:):):)//

  ராப்பே சொல்லீட்டாங்க எல்லாக் கவிதையும் நல்லா இருக்குன்ன்னு. அப்ப என் ரசனை ஓக்கே தான் போல.

 14. //புதுகை.அப்துல்லா said…

  கவிதை மாதிரி எழுதுற என்னையவே பாராட்டுறீங்க… நரேன் போன்ற கவிஞர்களைப் நீங்கள் பாராட்டுவதில் என்ன ஆச்சர்யம்?//

  உங்களைப் பாராட்டிப் புகழ்ந்து கவிதை பாடுமளவுக்கு காரியங்கள் செய்துட்டு கமுக்கமா இருக்கீங்க.

 15. //கவிதை மாதிரி எழுதுற என்னையவே பாராட்டுறீங்க//

  அப்துல்லா அண்ணே, இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தியா தெரியல:):):)

 16. நல்ல நல்ல கவிதைகள்.
  பாராட்டவும்,பரிந்துரைப்பதுவும்
  கடமையாவே செய்கிறீர்கள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s