சினிமா எக்ஸ்பிரஸ்


வெறும் சினிமா குறித்த தகவல்களாகத் தராமல் அதனூடாடும் ஞாபகங்களை பகிர்ந்து கொள்ளவே விருப்பம். எனவே பதிவு கொஞ்சம் நீளமாக இருக்கும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எங்களூருக்குத் தெற்கே 5 மைல் நடந்தால் நெய்க்காரபட்டி சண்முகாத் தேட்டர். கிழக்கே 3 மைல் நடந்தால் சரவணாத் தேட்டர். இரு இடங்களிலும் 3 இடைவேளை விடுவார்கள். குண்டு விளக்கு எரிஞ்சா ரீல் மாத்துறாங்க. குழல் விளக்கு எரிஞ்சா இண்டர்வெல் விட்ருக்காங்க.

சிறுவயதில இந்த டூரிங்க் டாக்கீஸில் பர்த்த படங்கள் அங்கங்கே ஞாபங்களில் இருந்தாலும். 10 வயதில் என் பிறந்த ஊர் அருகே உள்ள செங்கோட்டையில் பார்த்த அலிபாபாவும் 40 திருடர்களும்தான் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது.(தமிழில் வெளியான முதல் கேவா கலர் படம்; முதல் ஈஸ்ட்மென் கலர்ப்படம்-காதலிக்க நேரமில்லை)

அப்போதெல்லாம் நாங்கள் பழனியிலிருந்து வடகரை போவதென்றால்(300 கி மீ) இரு வாரங்களுக்கு முன்பே மாமாவுக்கு கடிதம் எழுதி விடுவோம். ஏன்னா செங்கோட்டையில் இருந்து வடகரைக்கு பேருந்து வசதி குறைவு. எனவே மாமா மாட்டுவண்டி கட்டி வந்து காத்திருப்பார்.

அவ்வாறு ஒரு முறை போகையில் இரவு 9:00 மணிக்குத்தான் செங்கோட்டை போய்ச் சேர்ந்தோம். என் அப்பா மெதுவா என் மாமாவிடம்,”அத்தான் எம் ஜி யார் படம் போட்ட்ருக்காம்லா. ரெண்டாமாட்டம் பாப்பமா?” என்றார். நான் என் அம்மா, அப்பா மற்றும் மாமா நால்வரும் படம் பார்த்தோம்.

மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே என்ற பாடலும், உல்லாச உலகம் உனக்கே சொந்தம் பாடலும் நீண்ட நாட்களாக நான் திரும்பத் திரும்பப் பாடிய பாடல்.

படத்தை விட, அதன் பின் மேற்கொண்ட மாட்டு வண்டிப் பயணம் நினைவை விட்டு அகலாத ஒன்று. நல்ல நிலா வெளிச்சம். ரோட்டின் இரு பக்கமும் அடர்ந்த மரங்கள். வயல்களினூடான பயனமும். மாமாவும் அப்பாவும் மாறி மாறிப் பாடிய பாடலுமாக.

விவரம் தெரிந்த பின் நானாகத் தேடிச் சென்று பார்த்த படம், முள்ளும் மலரும்.

ரஜினி, ஷோபா, சரத் போன்றோர் அல்லாமல், எங்க லைன் வீடுகள்ல குடியிருந்த சேகர் அண்ணன், தேவராஜ் அண்ணன், சுசீலா அக்கா முதலானோர் நடித்த படம் பர்த்தது போல இருந்தது.

இப்படியும் கூடப் படம் எடுக்கலாமா என்று ஆச்சரியப்பட்டேன். அதுவரை ஹீரோ, வில்லன், சண்டை, டூயட் இவைகள்தான் சினிமா என்ற ஒரு மாயையைத் தகர்த்த படம். அது முதல்தான் இயக்குனர் யார், ஒளிப்பதிவாளர் யார், இசையமைபாளர் யார் என்று தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தாம் தூம் இந்தப் ப்டம பற்றிய என் பதிவு.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்.

நினைத்தாலே இனிக்கும், வீட்டில் வி சி டியில் (30 ரூபாய்க்கு கூவிக் கூவி விக்குறாங்க)

ஒரு காலத்துல பிடிச்ச படம் எல்லாக் காலத்துலயும் பிடிக்கனும்னு அவசியமில்லை. அப்ப ரசிச்ச சில காட்சிகள் இப்ப ரெம்பச் செயற்கையாத் தெரியுது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஒரு பெரிய பட்டியலே இருக்கு இருந்தாலும் ஒன்னுதான் சொல்லனும்ங்கிறதால; சுப்பிரமணியபுரம்.

படம் பார்த்ததும் வெயிலானிடம் சொன்னேன். 35 வயது மேற்பட்டோருக்கு மிகவும் பிடிக்குமென்று. மதுரை அதைச் சுற்றி 200 கி மி தூரத்திலுள்ள அணைவருக்கும் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன். அதிலுள்ள வன்முறை அதிகமென்பது ஒரு சாரார் கருத்து. இல்லை என்பதுதான் உண்மை. படத்தில் மிகவும் நாசூக்காகக் காட்டியிருக்கிறார்கள். இயல்பு நிலை அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று.

படம் பிடித்ததற்கான காரணம் பலவெனினும் குறிப்பிட்டுச் சொல்ல சில; அதன் பெர்பெக்சன், பாத்திரத்தேர்வு; இசை; நடித்தவர்களின் உடல் மொழி, வசனம்.

(அந்தப் பட்டியல் – ராஜ பார்வை, பேசும் படம், நம்மவர், அன்பே சிவம், குருதிபுனல், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, ஆளவந்தான், சேது, பருத்தி வீரன் )

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

பாபா படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்ததுதான் பெரிய காமெடி. அதன் மூலம் அந்தப் படத்துக்கு விளம்பரம் கிடைத்தும் ஓடவில்லை என்பது இன்னும் காமெடி. இதற்குப் பதிலடியாக பா ம க நிற்கும் தொகுதிகளில் மட்டும் வேலை செய்து பா ம க வைத் தோற்கடியுங்கள் என்று ஆணையிட்டு மூக்குடைபட்டது சூப்பர் காமெடி. இதற்குப் பதில் சந்திரமுகியையோ அல்லது குசேலனையோ தடை செய்திருக்கலாம். விரசக் காமெடியும் பெண்ணுடலை மூலதனமாக வைத்து எடுக்கப் பட்ட காட்சிகளும். அபத்தத்தின் உச்ச கட்டம்.

முக்கியமா சண்டியர் படத்தை விருமாண்டியாக்கியது ஆல் டைம் காமெடி

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ப்ரியா படத்திற்கு ஸ்டீரியோ முறையில் இசை ஒலிப்பதிவு செய்தது. அந்தச் சமயத்தில் அது பெரிய டெக்னாலஜிக்கல் முன்னேற்றம். அது வரையில் மோனோ முறையில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஸ்டீரியோவில் கேட்ட பரவச அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. இன்று 15 சேனல், 32 சேனல் ஸ்டீரியோ எல்லாம் வந்த பிறகு இது சாதாரனமாகத் தோன்றலாம்.

ஸ்டிரியோவில் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல்கள்.
1. வா வா மஞ்சள் மலரே – ராஜாதி ராஜா
2. சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே – தனிக்காட்டு ராஜா

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிறுவயதில் பேசும்படம், சினிமா எக்பிரஸ் படித்ததுண்டு. தற்பொழுது குமுதம் விகடன் போன்றவற்றில் வரும் சினி செய்திகளைப் படிப்பதோடு சரி.

7.தமிழ்ச்சினிமா இசை?

பல ஜாம்பவான்கள் இசை அமைப்பளர்களாக இருந்தாலும், இளையராஜாதான் சாதாரன மனிதனின் ஆத்ம ராகத்தைத் திரையில் ஒலிக்கச் செய்தவர்.
ஏரியில இலந்த மரம் தங்கச்சி வச்சமரம் பாட்டாகட்டும், பூவே செம்பூவே பாட்டாகட்டும், சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷக் காற்றே பாட்டாகட்டும், நின்னுக்கோரி வர்ணமாகட்டும், குருவாயூரப்பா குருவாயூரப்பாவாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், என்னைத் தாலாட்ட வருவாளாவாகட்டும் ராஜாவின் வீச்சு எல்லையில்லாதது. கடல் தண்ணீரை ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலில் அடக்குவது போல்தான் அவரைப் பற்றி எழுதப் புகுவது.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 பாட்டுக்கள் கம்போஸ் செய்தாலும் அத்தனையும் தனித்தன்மையுடனிருந்தது. 48 மணி நேர ரீ ரிக்கர்டிங்க்தான் ஒரு படத்திற்கு. அவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் தரமான இசை அவரிடமிருந்து கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்த உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது பாட்டும் அதை விடச் சிறப்பான மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் பாட்டும் சொல்லும் அவரைப்போல் இன்னும் ஒருவர் வந்துதான் அவர் இடத்தை நிரப்ப வேண்டும் எனபதை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பிற மொழிகளில் நான் அதிகம் பார்ப்பது மலையாளப் படங்கள்தான். வரவேழ்ப்பு, கானாமறயத்து, யாத்ரா,தசரதம், சித்ரம், பரதம், வடக்கன் வீர கதா, நெ 20 மெட்ராஸ் மெயில், ஹிஸ் ஹைனெஸ் அப்துலா, காற்றத்தே கிளிக்கூடு, திலக்கம், கல்யாணராமன். சாந்துப் பொட்டு, சதாவிண்டே சமயம், பெருமழைக் காலம், வெட்டோம், வினோத யாத்ரா, ஏய் ஆட்டோ, கொச்சி ராஜாவு இன்னும் பிற.

ஆங்கிலப் படங்களில் பை சைக்கிள் தீவ்ஸ், ஹோட்டல் ருவாண்டா, ரன் லோலா ரன், வெர்டிகோ, தி டே ஆஃப்டர், தி சைக்கிளிஸ்ட், சில்ட்ரென் ஆஃப் ஹெவென போன்றவை. கோவையில் உள்ள கோனங்கள் திரைப்பட அமைப்பு மூலம் நல்ல சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கிறது.

அதிகம் தாக்கிய படம் ஹோட்டல் ருவாண்டாதான். ஒரு வாரம் போல மனசு பாதித்துக் கிடந்தேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பு இல்லை. எனவே மற்ற கேள்விகள் பொருந்தா.

இளையராஜா, மலேசியா வாசுதேவன், RC சக்தி, பாரதிராஜா போன்றோரைச் சந்தித்திருக்கிறேன் அதிகப் பரிச்சயமில்லை.

ரானுவவீரன் படத்தில் வரும் போஸ்ட் ஆபீஸ் எங்கள் ஆசிரியர் வீடுதான். அந்தப் படப்பிடிப்பின் போது ரஜினியுடன் போட்டோ எடுத்திருக்கிறேன்.

பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்பு. ஸ்கிரிப்ட் எழுத பிரகாஷக் என்ற தமிழ் சாப்ட்வேரை நிறுவச் செல்லும்போது கமல ஹாசனைச் சந்தித்திருக்கிறேன். தேவர் மகன் பட ஸ்கிரிப்ட் ஒன்றிரண்டு பக்கங்களைப் தயார் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாலா, அமீர், சசிக்குமார், வெங்கட் பிரபு போன்றவர்கள் நல்ல நம்பிக்கையையும். பேரரசு, சீமான் போன்றவர்கள் அதீத அவநம்பிக்கையையும் விதைக்கிறார்கள்.

தமிழ் சினிமா உருப்பட யாரும் சிலுவை சுமக்க வேண்டியது இல்லை. ரசிகர்கள் தரமான படத்தைத் தேர்வு செய்து ஒட வைப்பதும், பிறவற்றைப் பெட்டிக்குள் முடங்கச் செய்வதுமான நடவடிக்கையே போதுமானது.

ஆனால் தமிழ் சினிமாவில் நிலவும் பார்முலாதான் அதை முன்னேற விடாமல் தடுக்கும் தடைக்கல். 90 நிமிடம் ஓடக்க்கூடிய படத்தில் 4 பாட்டு எனில் 4 X 5 = 20 நிமிடங்கள். 3 பைட்டு எனில் 3 X 7 = 21 நிமிடங்கள். நகைச் சுவைக் காட்சி 4 முறை எனில் 4 X 5 = 20 நிமிடங்கள். மொத்தம் 61 நிமிடங்கள்; மீதமிருக்கும் 30 நிமிடங்களில் கதை சொல்ல வேண்டும். மிகப் பெரிய சவால்தான். நல்ல திரைக்கதை 3 பகுதிகளாக இருக்க வேண்டும் என்று சுஜாதா சொல்லுவார்; கதா பாத்திரங்கள் அறிமுகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல், அது தீரும் விதம் என.

இந்த அமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும். காமெடிப் படம் தனியே, சண்டைப்படம் தனியே, காதல்படம் தனியே எனத் தனித் தனியாக இருந்தால்தான் எதிர்பார்க்கும் விதமாகக் கதை சொல்ல முடியும்.

சமீபத்தில் வந்த சரோஜாவும், பொய் சொல்லப் போறோமும் நல்ல முயற்சி. கதானாயகன், நாயகி, வில்லன் போன்ற பாத்திரங்கள் இல்லாமல் நல்ல முயற்சி.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு அதிகம் பாதிக்காது. படிக்கக் கூடுதல் நேரம் கிடைக்கும்.

தமிழர்களுக்கு ஒன்றும் குடி முழுகிப் போகாது. தமிழ்த் திரையுலகில் திறமை வாய்ந்தவர்கள் எல்லாம் வேற்று மொழிப் படங்களில் வேலை செய்ய சென்றுவிடுவர். காமா சோமா ஆட்கள் எல்லாம் பீல்டிலிருந்து விலகி விடுவர். ஆரோக்யமாக இருக்கும். கிளாஸ் ரசிகர்கள் பிறமொழியில் வந்த நல்ல படங்களப் பார்த்து இன்புறுவர். மாஸ் ரசிகர்கள் எல்லாம், பாயும் புலி பதுங்கும் கரடி போன்ற படங்களில் தஞ்சம் புகுவர்.

இந்தத் தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த அதிஷாவுக்கு நன்றி.

அனேகமாக எல்லோரும் எழுதி விட்டனர். இருப்பினும், இன்னும் எழுதாமல் இருந்தால், நான் அழைக்க விரும்புவது

1. T.V. ராதாகிருஷ்ணன்
2. கொத்ஸ்.
3. அனுஜன்யா

Advertisements

28 comments

 1. நல்லா எழுதியிருக்கீங்க வேலன். அருமையான நினைவுகள். கேள்விகளுக்கான பதில்களும் பொருத்தமா இருக்கு..

 2. நினைவுகளை நன்கு கோர்த்துள்ளளீர்கள்.

 3. //ஒரு காலத்துல பிடிச்ச படம் எல்லாக் காலத்துலயும் பிடிக்கனும்னு அவசியமில்லை. அப்ப ரசிச்ச சில காட்சிகள் இப்ப ரெம்பச் செயற்கையாத் தெரியுது.
  //

  :):):) super

  //மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் //

  இது எந்த படப்பாடல்? விருமாண்டியா?

  //பேரரசு, சீமான் போன்றவர்கள் அதீத அவநம்பிக்கையையும் விதைக்கிறார்கள்.
  //

  :):):)
  ரொம்ப அழகானப் பதிவு:):):)

 4. //rapp said…

  //ஒரு காலத்துல பிடிச்ச படம் எல்லாக் காலத்துலயும் பிடிக்கனும்னு அவசியமில்லை. அப்ப ரசிச்ச சில காட்சிகள் இப்ப ரெம்பச் செயற்கையாத் தெரியுது.
  //

  :):):) super //

  ஆமா ராப் இப்ப ரசிக்கிற படத்த இன்னும் பத்து வருடம் கழித்து ரசிக்க முடியுமான்னு தெரியல.

  //மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் //

  இது எந்த படப்பாடல்? விருமாண்டியா? //

  அமாங்க. இந்தப் பாடல இரவில் தனிமையில கேட்டுப்பாருங்க என்னவோ பண்ணும்.

  //பேரரசு, சீமான் போன்றவர்கள் அதீத அவநம்பிக்கையையும் விதைக்கிறார்கள்.
  //

  :):):)//

  இல்லையா பின்ன?.

  ரொம்ப அழகானப் பதிவு:):):)

  நன்றி ராப்.

 5. முதல் கேள்விக்கே இவ்ளோ நேரமாகுதே-ன்னு பயத்தோட படிச்சேன். ஆனா, சுவாரஸ்யமா தொடர்ந்ததால முழுசையும் படிச்சு முடிச்சேன்!

  இசைஞானி, ரஜினி, கமல்-ன்னு எல்லா பெரிய தலைகளையும் சந்திச்சிருக்கீங்க. அதுவும் தேவர்மகன் விஷயம் ஆச்சர்யம்!

  பேரரசு லிஸ்ட்ல ‘தம்பி’ தந்த சீமானை சேர்த்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. என் கண்டனங்கள் அண்ணா. எதுக்காக சேர்த்திங்க-ன்னு புரியவே இல்ல!

 6. நன்றி பரிசல்.

  சீமானோட வாழ்த்துகள் படம் பாத்ததில்லையா?

 7. //வடகரை வேலன் said…

  நன்றி பரிசல்.

  சீமானோட வாழ்த்துகள் படம் பாத்ததில்லையா?//

  ஒரு படத்துக்காக, இவ்ளோ கோபமாண்ணா…

  தம்பி-க்காக மன்னிக்கக்கூடாதா?

  ஆர்.வி.உதயகுமார் சிங்காரவேலன் எடுத்ததுக்காக சின்னகவுண்டரை பாராட்டாம இருக்கமுடியுமா..

  சீமானை பேரரசுகூட கம்பேர் பண்ணினதுதான் என்னால தாங்கமுடியல.

  இந்தவாரம் கோவை வர்றேன். கவனிச்சு, இந்த சோகத்தை தீர்க்கணும் நீங்க…

 8. சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்….நல்ல நினைவுகள்… கோர்வையா நல்ல தமிழ்ல எழுதியிருக்கீங்க…

  நானும் சண்முகா தியேட்டர்ல ஒரு படம் (ராஜராஜசோழன்னு ஞாபகம்) பாத்திருக்கென். அப்பறம் பழனில சாமி, சினி வள்ளுவர் தியேட்டர்கள்லயும் படங்கள் பாத்திருக்கேன். இந்தப் பதிவப் படிக்கும்போது அதெல்லாம் ஞாபகம் வந்தது.

 9. மஹேஷ்,
  சாமித் தியேட்டர் இப்ப கல்யாண மண்டபம் ஆயிருச்சு

 10. நல்ல பதிவு!

  உங்க பிளாக் அமைப்பு நல்லா இருக்கு!

 11. நினைவுகளை நிறுத்தி நன்றாக எழுதி இருக்குறீர்கள்.. மாட்டுவண்டியில் சினிமாவுக்கு போன அனுபவமும் இருக்கு போல.. :))

 12. வேலன்

  என்னை அழைத்ததற்கு நன்றி. நானும் ஏற்கனவே இந்த தொடரைப் போட்டாச்சே!!

  http://elavasam.blogspot.com/2008/10/blog-post.html

  //இந்த அமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும். காமெடிப் படம் தனியே, சண்டைப்படம் தனியே, காதல்படம் தனியே எனத் தனித் தனியாக இருந்தால்தான் எதிர்பார்க்கும் விதமாகக் கதை சொல்ல முடியும்.//

  இதைத்தான் நானும் சொல்லி இருக்கேன்!

 13. ஆமா தமிழ்.

  ஒரு காலத்துல எங்க தாத்தா வீட்டுல 26 மாடுகள் இருந்தன.

  ஒரு கூட்டு வண்டியும் மயில,செவல காளை ஜோடிகள்தான் என் ஃபேவரைட்.

  மாமாக்கள் வளர்ந்து பங்கு வைத்ததில் எல்லாம் காணாமல் போய்விட்டன.

 14. நன்றி கொத்ஸ்,

  வெளியூர் சுத்தியதால் எல்லோர் வலைக்கும் சரியாகப் போக முடியவில்லை. அதுதான் ஏற்கனவே எழுதவில்லையெனில்னு போடிருந்தேன்.

 15. //நல்லா எழுதியிருக்கீங்க வேலன். அருமையான நினைவுகள். கேள்விகளுக்கான பதில்களும் பொருத்தமா இருக்கு..//

  ரிப்பீட்டே…..

 16. வேலன்,
  நல்ல பதிவு. குறிப்பாக ராஜா பற்றியக் குறிப்புகள் அருமை. நான் தினம் தினம்
  கேட்கும் பாடல்களை நீங்களும் குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கின்றது.
  நன்றி. நன்றி

 17. ராஜான்னா நமக்கு உயிருங்க. ஸ்பீகர் வாங்கி மண்பானையில வச்சு, பிளாஸ்டிக் குடத்துல வச்சுன்னு ரெம்ப ரகளை பண்ணியிருக்கேன்.

  ஏ ரசாத்தி ராசாத்தி – ’என்னுயிர்த்தோழன்’ பாட்டு கேட்டுருக்கிங்களா?

 18. //தேட்டர்//

  :-))))

  //ஒரு பெரிய பட்டியலே இருக்கு இருந்தாலும் ஒன்னுதான் சொல்லனும்ங்கிறதால; சுப்பிரமணியபுரம்//

  இந்த வாரம் சிங்கை தொலைகாட்சியில் போடுறாங்க கண்டிப்பா பார்த்திடுவேன் ..பலமுறை முயற்சித்தும் பார்க்க முடியாமல் போன படம்.

  //சந்திரமுகியையோ அல்லது குசேலனையோ தடை செய்திருக்கலாம்//

  ???????????? !!!!!!!!!!!!!!!!!!!!!!

  //பிற மொழிகளில் நான் அதிகம் பார்ப்பது மலையாளப் படங்கள்தான்//

  :-)))

  //அந்தப் படப்பிடிப்பின் போது ரஜினியுடன் போட்டோ எடுத்திருக்கிறேன்//

  இங்க பார்ரா … அடுத்த முறை போட்டோவை காட்டுங்கள் வேலன்

  //சமீபத்தில் வந்த சரோஜாவும்//

  உண்மையாகவே ..சீரியஸ் ஆகவும் இருந்தது காமெடியாகவும் இருந்தது

  சீமானை நீங்கள் பேரரசுவுடன் இணைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து

  வேலன் நல்லா சுவாராசியமா கூறி இருக்கீங்க.. பதிவு பெரிதாக இருந்தாலும் படிக்க நன்றாக இருந்தது.

 19. //கிரி said…

  //தேட்டர்//

  :-))))//

  வழக்குல அப்படித்தானே சொல்லுவோம்.

  //ஒரு பெரிய பட்டியலே இருக்கு இருந்தாலும் ஒன்னுதான் சொல்லனும்ங்கிறதால; சுப்பிரமணியபுரம்//

  இந்த வாரம் சிங்கை தொலைகாட்சியில் போடுறாங்க கண்டிப்பா பார்த்திடுவேன் ..பலமுறை முயற்சித்தும் பார்க்க முடியாமல் போன படம். //

  ஆனா தொலைக்காட்சியில பார்த்தா நீர்த்துப் போய் அதன் முழுத் தாக்கம் இல்லாமல்தான் இருக்கும்.

  //சந்திரமுகியையோ அல்லது குசேலனையோ தடை செய்திருக்கலாம்//

  ???????????? !!!!!!!!!!!!!!!!!!!!!! //

  என் தனிப்பட்ட கருத்து இது. ‘தம்பிக்கு எந்த ஊரு’ ரஜினிதான் எனக்குப் பிடிக்கும்

  //பிற மொழிகளில் நான் அதிகம் பார்ப்பது மலையாளப் படங்கள்தான்//

  :-))) //

  ஆமாங்க கிரி. வீட்டோட பாக்கும் படங்கள்தான்.

  வரவேழ்ப்புன்னு ஒரு மலையாளப் படம் இருக்கு. மோஹன்லாலும் ரேவதியும். அது மாதிரி ஒரு படம் தமிழ்ல நினைச்சுக் கூட பார்க்க முடியாதுங்க. சிங்கையில கிடைச்சாப் பாருங்க.

  //அந்தப் படப்பிடிப்பின் போது ரஜினியுடன் போட்டோ எடுத்திருக்கிறேன்//

  இங்க பார்ரா … அடுத்த முறை போட்டோவை காட்டுங்கள் வேலன்//

  அது 1980-ல இப்ப எங்க இருக்கோ என்னவோ. இன்னொரு சுவராசியமான விஷயம் என்னன்ன அந்தப் படத்துலதான் சிரஞ்சீவி வில்லனா அறிமுகம் ஆகியிருப்பார் தமிழ்ல.

  //சமீபத்தில் வந்த சரோஜாவும்//

  உண்மையாகவே ..சீரியஸ் ஆகவும் இருந்தது காமெடியாகவும் இருந்தது //

  நல்ல முயற்சி அந்தப் படம்.

  // சீமானை நீங்கள் பேரரசுவுடன் இணைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து//

  பார்க்கலாம் அடுத்து சீமான் நல்ல படங்கள் எடுத்தா.

  // வேலன் நல்லா சுவாராசியமா கூறி இருக்கீங்க.. பதிவு பெரிதாக இருந்தாலும் படிக்க நன்றாக இருந்தது.//

  நன்றி கிரி.

 20. வேலன் அண்ணாச்சி….பதிவு கலக்கல் 😉

  \\வடகரை வேலன் said…
  ராஜான்னா நமக்கு உயிருங்க. \\

  இதுக்கு ஒரு ஸ்பெசல் “ஓ” 🙂

 21. //கோபிநாத் said…

  வேலன் அண்ணாச்சி….பதிவு கலக்கல் 😉

  \\வடகரை வேலன் said…
  ராஜான்னா நமக்கு உயிருங்க. \\

  இதுக்கு ஒரு ஸ்பெசல் “ஓ” :)//

  வாங்க கோபி,

  நீங்களும் ராஜா ரசிகரா? மகிழ்ச்சி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s