கதம்பம் – 18/10/08

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார் கி வா ஜ. நடு வழியில் ஏதோ கோளாறு காரணமாக கார் நின்று விட்டது. கி வா ஜ வை காரிலேயே அமரும்படிக் கூறி விட்டு மற்றவர்கள் இறங்கித்தள்ளி ஸ்டர்ட் செய்து அரங்கத்தை அடைந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் மாலை, சால்வை, நினைவுப் பரிசு எல்லாவற்றையும் ஒரு அழகிய கைப்பையில் வைத்து அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கி வா ஜ அவர்கள் சொன்னார்,” வரும் போது தள்ளாதவனாக வந்தேன். போகும்போது பையனாகச் செல்கிறேன்”.

***********************************************************

அடிக்கடி ரயில் பயனம் செய்வதில் ஒன்றைக் கவனித்தேன். நடுப் படுக்கையை (middle berth) தயார் செய்ய நினைப்பவர்கள் முதலில் படுக்கையை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் பின் மேலிருக்கும் கொக்கியை விடுவிக்கிறார்கள். சில சமயம் கொக்கி சுலபமாக வருவதில்லை. கையிலிருக்கும் படுக்கையின் சுமை வேறு அதிக எரிச்சலைத் தூண்டுகிறது. அதற்குப் பதிலாக முதலில் மேலிருக்கும் கொக்கியை விடுவித்த பின் படுக்கையை எடுத்து மாட்டுவது சுலபமாக இருக்கும் அல்லவா?. முக்கியமாக உயரம் குறைவாக இருப்பவர்களாவது இதை கடை பிடிப்பார்களா?

வாழ்க்கையிலும் இதுபோலத்தான் எது முதலில் எது பிறகு என்று பகுத்தாயாமல் சிக்கல் உண்டாக்குகிறோம். சுலபமாக முடிவதைக் கூட தேவையில்லாத சுமைகளால் கடினமானதாக்கிக் கொள்கிறோம். சரிதானே?

*******************************************************************

இந்த முறை ரெஜொவாசன் கவிதைகள் கொஞ்சம்.

நட்பைப் பற்றிய இந்த நெடுங்கவிதையில் சில துண்டுகளைமட்டும் எடுத்து இங்கே தந்திருக்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறார். சிறப்பாக வருவார்.

உலகத்தின் நிழல் மறையும்
முற்றிலும் இருள் கவியும் பின்னிரவுகளில்
விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே
மெதுவாக விழித்துப் பார்க்கின்றன
நட்பின் நினைவுகளும்
அதன் அழகான கவிதைகளும் …

பறவை அறியாமல் உதிரும்
அதன் இறகு போல
நம்மை அறியாமல்
கனவிற்குள் உதிர்கின்றன
நட்பின் நினைவுகள் ..

வைத்த புள்ளியையே சுற்றி
கிறுக்கப் பட்டுக் கொண்டிருக்கும்
குழந்தையின் கோட்டோவியத்தைப் போல
நட்புக் காலத்தையே நீள் வட்டப் பாதையில்
சுற்றிக் கொண்டிருக்கும் மனமும் …

நம்மைச் சுற்றிலும்
ரகசியமாய் மௌனிக்கின்ற எல்லாமும்
உரக்கப் பேசித் திரியும்
நம் நட்புக்காலக் கதைகளை

இவருடைய சமீபத்திய ‘அனிச்சை‘ கவிதையை மிகவும் ரசித்தேன்.

இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால் இவரது சுய அறிமுகம் சுவராஸ்யமாக இருக்கிறது.


பயணங்களில் பாதைகளில் உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் சிறகுகளில் கொஞ்சம் பால்யமும் உறைந்து கிடக்கலாம் .வீதிகளெங்கும் இரண்டாம் சாமங்களின் கனவுகள் உயிர்பெற்று அலைந்து உலவலாம் . நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்களில் தேவதைகள் மோதிச் செல்லலாம் . தெருமுனை தேநீர்க் கடைகளில் கடவுளர்கள் கதைக்கக் கிடைக்கலாம் .காதலின் பெயர் சொல்லிச் சகலமும் தொழக் காணலாம்.


************************************************************************

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான். அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள் ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய். யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன் கர்ணனை அழைத்து விபரம் சொன்னான். சரி என்று தலையாட்டிய கர்ணன் அவ்வழியே சென்ற இருவரை அழைத்து,” இதை பாதிப் பாதியாக்கி நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான். அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

*************************************************************************

சீரியலைப் பார்த்து பெண்கள்தானே அழுவார்கள். அவர் ஏங்க அழுகிறார்?
அவர் பார்த்துக் கொண்டிருப்பது அவரது கல்யாண சிடி-ங்க.

Advertisements

55 comments

 1. வழக்கம்போல் கதம்பம் சூப்பர்…

  கலக்குங்க தலைவரே….

 2. ஹையா…இந்த தடவை நாந்தான் பஷ்டு!!!

 3. வாங்க சின்னப் பையன்.

  சமீபத்திய பொருளாதாரச் சரிவு உங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தவில்லையே?

 4. செம கலக்கல் கதம்பன் இன்னிக்கு.. கி.வா.ஜ சிலேடை அருமை, இப்போதுதான் படிக்கிறேன். கர்ணன் விசயமும் அதிலிருக்கும் மெசேஜும் சூப்பர். கடைசி ஜோக் ஹா..ஹா..ஹா.. இன்னும் நீங்க போன பதிவு புலம்பல விடல போல.. :)))

 5. //சீரியலைப் பார்த்து பெண்கள்தானே அழுவார்கள். அவர் ஏங்க அழுகிறார்?

  அவர் பார்த்துக் கொண்டிருப்பது அவரது கல்யாண சிடி-ங்க//

  ஹி ஹி ஹி சூப்பர்!

 6. கி.வா.ஜ. வோட சிலேடைப் பேச்சு ரொம்பவே ரசிக்கலாம்…. நெறய படிச்சுருக்கேன்… இது இப்பதான் படிக்கிறேன்…

  இந்த மாதிரி வாசனை பூக்கள் கிடைக்க நேரம் ஆனாலும் நல்ல கதம்பம் கிடைக்கறதுல மகிழ்ச்சி

 7. கர்ணன்,அர்ஜீனன் கதை, கதை மலர்ல படத்தோட படிச்சிருக்கேன்…

 8. கவிதைக்கான தெரிவு தெரிவுக்குரியதே…

 9. //Mahesh said…

  கி.வா.ஜ. வோட சிலேடைப் பேச்சு ரொம்பவே ரசிக்கலாம்…. நெறய படிச்சுருக்கேன்… இது இப்பதான் படிக்கிறேன்…//

  நன்றி மகேஷ்.

 10. //தமிழன்…(கறுப்பி…) said…

  கவிதைக்கான தெரிவு தெரிவுக்குரியதே…//

  நன்றி தமிழ்.

  அவரோட அனிச்சை கவிதை படித்தீர்களா?

 11. கொஞ்சம் லேட்டா வந்தாலும்….வழமை போல் சிறப்பு. கி.வா.ஜ. சிலேடை மிகப் பிரபலம். ரேஜோவாசன் அறிமுகத்திற்கு நன்றி. அனிச்சை இப்போதுதான் படித்தேன். அழகாக எழுதுகிறார். எப்படி நீங்கள் தேடித் தேடி கண்டுபிடிக்கிறீர்கள். ‘கல்யாண சிடி’ ஹா ஹா. தொடருங்கள் வேலன்.

  அனுஜன்யா

 12. நன்றி அனுஜன்யா.

  கவிதை சுட்டிகள் வெயிலான் மூலம் கிடைக்கிறது. அவருக்குத்தான் பெருமை போய்ச் சேர வேண்டும். அவர் எழுதுவதில்லை ஆதலால் என் வலையில் அந்த அறிமுகம் நடக்கிறது.

 13. எவ்வளவு பெரிய தத்துவத்தை மிடில் பர்த் வச்சு சொல்லிட்டீங்க..

 14. அண்ணாச்சி,

  கர்ணன் கதையை வள்ளல் தன்மைக்குச் சொல்வது போலவே நட்புக்கும் இலக்கணமாகச் சொல்வார்கள்.

  மழைகாலத்தில் விறகு கேட்டு வந்தவர்களுக்கு அரண்மனையை உடைத்து எடுத்துக் கொள்ளச் சொன்னதாகவும் கர்ணன் பற்றிய கிளைக் கதை உண்டு.

  கடைசியாக புண்ணியம் அனைத்தையும் தானம் செய்தானாம்.

  புண்ணியத்தையே தானம் செய்து கிடைத்த புண்ணியம் ஏன் அவனைக் காப்பாற்றவில்லை என்பது என்னுடைய நீண்டகால ஆன்மிகக் கேள்வி. 🙂

  சின்னக் கதம்பமாக இருந்தாலும் மணத்தில் குறை இல்லை.

 15. //கோவி.கண்ணன் said…

  அண்ணாச்சி,

  கர்ணன் கதையை வள்ளல் தன்மைக்குச் சொல்வது போலவே நட்புக்கும் இலக்கணமாகச் சொல்வார்கள்.

  மழைகாலத்தில் விறகு கேட்டு வந்தவர்களுக்கு அரண்மனையை உடைத்து எடுத்துக் கொள்ளச் சொன்னதாகவும் கர்ணன் பற்றிய கிளைக் கதை உண்டு.

  கடைசியாக புண்ணியம் அனைத்தையும் தானம் செய்தானாம்.

  புண்ணியத்தையே தானம் செய்து கிடைத்த புண்ணியம் ஏன் அவனைக் காப்பாற்றவில்லை என்பது என்னுடைய நீண்டகால ஆன்மிகக் கேள்வி. 🙂 //

  கோவி, கர்ணன் முறையற்றவனாகப் பிறந்தும், ஒரு தீயவனுக்கு அதுவும் அவனது நோக்கம் தீயதென்று தெரிந்திருந்தும் துணை போனதும் அவனுக்கு பெரும் இழுக்கு.

  இருந்த போதும் அவனது கொடை அவனை உயர்ந்தோர் மாட்டு வைத்துபோர்ரும் படி ஆக்கியது.

  பிறந்த எல்லோரும் இரந்தே தீரவேண்டும் என்றாலும் அவனது தனிப்பட்ட குணத்தால் அவன் உயர்நிலை அடைந்தான் என்பதுதான் உட்கருத்து.

 16. கதம்பம் சுகமாக உள்ளது.
  ///சுலபமாக முடிவதைக் கூட தேவையில்லாத சுமைகளால் கடினமானதாக்கிக் கொள்கிறோம்///
  சரி தான்… 🙂

 17. //முத்துலெட்சுமி-கயல்விழி said…
  எவ்வளவு பெரிய தத்துவத்தை மிடில் பர்த் வச்சு சொல்லிட்டீங்க..
  //

  எம்புட்டு பெரிய கருத்து!
  எம்புட்டு அழகா கமெண்டுன அக்காவோட கமெண்ட்டுக்கு நான் ரிப்பிட்டீக்கிறேன் :))

 18. ///வடகரை வேலன் said…கோவி, கர்ணன் முறையற்றவனாகப் பிறந்தும், ஒரு தீயவனுக்கு அதுவும் அவனது நோக்கம் தீயதென்று தெரிந்திருந்தும் துணை போனதும் அவனுக்கு பெரும் இழுக்கு.////

  கர்ணனின் பிறப்பு முறையற்றதா? அவனது தாயின் சிறு வயதில் விளையாட்டாக கிடைத்த வரமும், அதைக் கேட்ட முறையும் தானே கர்ணனை பெற்றுத் தந்தது?… இதற்கு கர்ணனை குறை சொல்ல இயலாது.

 19. தமிழ்,

  கடைசிவரை தன் தந்தை யாரென்று தெரிந்தும் வெளியே சொல்ல முடியவில்லை. அதைக் குந்தியால் கூடச் சொல்ல முடியவில்லை; தவறு கர்ணனுடையதில்லை என்றபோதும்.

  மேல்னிலை அடைவது மேன்மக்களாகத்தான் பிறக்கவேண்டுமென்பதில்லை. மேன்மக்க்ளாக வாழ்ந்தாலே போதும் என்பதுதான் தாத்பர்யம்.

 20. அண்ணே லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுக்கங்க.( அது எனக்கு புடிக்காத வார்த்தைன்லாம் நீங்களும் காமெடி பண்ணப்படாது ). வழக்கம் போல் கதம்பத்தின் மணம் அருமை 🙂

 21. // புதுகை.அப்துல்லா said…

  அண்ணே லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுக்கங்க.//

  இது என்ன சின்னப் புள்ளத்தனமா?

 22. தமிழ் பிரியனின் கேள்வியும், உங்கள் பதிலும் யோசிக்க வைத்தது. முதலில் முறையற்றுப் பிறந்த குழந்தை (illigetimate child) எதுவாக இறந்தாலும், நிச்சயம் அது அக்குழந்தையின் தவறு அல்ல என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.

  ஒரு தளத்தில், கர்ணன் பிறந்த முறை எவ்வளவோ மேலானது – மற்ற பாண்டவர்களின் பிறப்பை நோக்குகையில். அனைவருக்கும் தந்தை பாண்டு என்றாலும், தருமனுக்கு-தர்ம தேவதை; பீமனுக்கு-வாயு பகவான்; அர்ஜுனன்-இந்திரன் என்று வெவ்வேறு தந்தையர்கள். நகுல-சகாதேவனும் அவ்வாறே. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், மகாபாரதம் ஒரு அபத்தங்களும், ஒழுக்கமின்மையும் நிறைந்த காவியம் என்று தோன்றும். ஒரு மதம் சார்ந்த நூல் என்று அணுகாமல், ஒரு பழங்காப்பியம் என்ற அளவில், முன்முடிவுகள் இல்லாமல் படித்தால், நிறைய விடயங்கள் ஒரு குறியீடாக வெளிப்படுகின்றன.

  அனுஜன்யா

 23. ‘இறந்தாலும்’ என்பதை ‘இருந்தாலும்’ என்று படிக்கவும். எவ்வளவு ஆழமான தப்பர்த்தம் இந்த வார்த்தைப் பிழையில்!

 24. மேல்னிலை அடைவது மேன்மக்களாகத்தான் பிறக்கவேண்டுமென்பதில்லை. மேன்மக்க்ளாக வாழ்ந்தாலே போதும் என்பதுதான் தாத்பர்யம்.

  //

  அண்ணே இந்த பதிலை இரசித்து மகிழ்ந்தேன் 🙂

 25. //பறவை அறியாமல் உதிரும்
  அதன் இறகு போல
  நம்மை அறியாமல்
  கனவிற்குள் உதிர்கின்றன
  நட்பின் நினைவுகள் ..//

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. அது ஒரு அழகியக் கனாக் காலம்

  கடைசி ஜோக் சூப்பர் அண்ணாச்சி.

 26. //கோவி, கர்ணன் முறையற்றவனாகப் பிறந்தும், ஒரு தீயவனுக்கு அதுவும் அவனது நோக்கம் தீயதென்று தெரிந்திருந்தும் துணை போனதும் அவனுக்கு பெரும் இழுக்கு.

  இருந்த போதும் அவனது கொடை அவனை உயர்ந்தோர் மாட்டு வைத்துபோர்ரும் படி ஆக்கியது.

  பிறந்த எல்லோரும் இரந்தே தீரவேண்டும் என்றாலும் அவனது தனிப்பட்ட குணத்தால் அவன் உயர்நிலை அடைந்தான் என்பதுதான் உட்கருத்து.//

  மகாபாரதக் கதையில் வரும் பஞ்சபாண்டவர்களில் எவருமே பாண்டுவுக்கு பிறக்கவில்லை. தர்மன் எம தர்மனுக்கும், அர்ஜுனன் இந்திரனுக்கும், பீமன் வாயுபகவானுக்கும், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் இன்ன பிறருக்கும் பிறந்தவன். குந்தியின் திருமணத்திற்கு முன்பு சூரியனால் கொடுக்கப்பட்டவன் தான் கர்ணன். முறையற்ற என்று பார்த்தீர்கள் என்றால் எல்லாம் முறையற்ற பிறப்புதான். 🙂

  //பிறந்த எல்லோரும் இரந்தே தீரவேண்டும் என்றாலும் அவனது //

  கர்ணன் யாரிடமும் இரக்கவில்லை. அவன் கொடுத்தான் ! 🙂

  //கோவி, கர்ணன் முறையற்றவனாகப் பிறந்தும், ஒரு தீயவனுக்கு அதுவும் அவனது நோக்கம் தீயதென்று தெரிந்திருந்தும் துணை போனதும் அவனுக்கு பெரும் இழுக்கு.
  //

  தங்களது மூத்த அண்ணன் என்று தெரியாது பஞ்ச பாண்டவர்கள் அனைவருமே கர்ணனை தேரோட்டியின் மகன் இழிகுலத்தோன் என்று தூற்றிய போது துரியோதனன் ஒருவன் தான் அவனை சத்திரியனாக அங்கீகரித்து தனியாக ஒரு நாட்டைக் கொடுத்தான். துரியோதனன் என்கிற நண்பன் கெட்டவன் என்றாலும் நட்பில் தூய்மை இருந்தது. “எடுக்கவோ…கோர்க்கவோ” படித்திருப்பீர்கள்.
  🙂

 27. ///அனுஜன்யா said…தருமனுக்கு-தர்ம தேவதை; பீமனுக்கு-வாயு பகவான்; அர்ஜுனன்-இந்திரன் என்று வெவ்வேறு தந்தையர்கள். நகுல-சகாதேவனும் அவ்வாறே. ////
  ///கோவி.கண்ணன் said…
  மகாபாரதக் கதையில் வரும் பஞ்சபாண்டவர்களில் எவருமே பாண்டுவுக்கு பிறக்கவில்லை. தர்மன் எம தர்மனுக்கும், அர்ஜுனன் இந்திரனுக்கும், பீமன் வாயுபகவானுக்கும், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் இன்ன பிறருக்கும் பிறந்தவன். குந்தியின் திருமணத்திற்கு முன்பு சூரியனால் கொடுக்கப்பட்டவன் தான் கர்ணன்.///

  இவைகளைக் காணும் போது எனது பார்வையில் அனைவரையும் விட கர்ணனே சிறந்தவனாகின்றான்.

 28. அனுஜன்யா said…

  // தமிழ் பிரியனின் கேள்வியும், உங்கள் பதிலும் யோசிக்க வைத்தது. முதலில் முறையற்றுப் பிறந்த குழந்தை (illigetimate child) எதுவாக இறந்தாலும், நிச்சயம் அது அக்குழந்தையின் தவறு அல்ல என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.//

  மிகச்சரி. முறையாக அல்லது முறையற்று எவ்வாறு பிறந்தாலும் குற்றம் அக்குழந்தையினுடையதல்ல. ஆனால் அதன் மீது சுமத்தப் படும் தீராப்பழி சாகும் வரை இறக்கி வைக்கவியலாத ஒரு சுமையாகவே உடலைத்தொடரும் நிழல் போல அழுத்துகிறது. நிழலாவது அம்மாவசை இரவுகளில் ஓய்வெடுக்கிறது, இச்சாப நிழல் கொடுமையானது.

  // ஒரு தளத்தில், கர்ணன் பிறந்த முறை எவ்வளவோ மேலானது – மற்ற பாண்டவர்களின் பிறப்பை நோக்குகையில். அனைவருக்கும் தந்தை பாண்டு என்றாலும், தருமனுக்கு-தர்ம தேவதை; பீமனுக்கு-வாயு பகவான்; அர்ஜுனன்-இந்திரன் என்று வெவ்வேறு தந்தையர்கள். நகுல-சகாதேவனும் அவ்வாறே. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், மகாபாரதம் ஒரு அபத்தங்களும், ஒழுக்கமின்மையும் நிறைந்த காவியம் என்று தோன்றும். ஒரு மதம் சார்ந்த நூல் என்று அணுகாமல், ஒரு பழங்காப்பியம் என்ற அளவில், முன்முடிவுகள் இல்லாமல் படித்தால், நிறைய விடயங்கள் ஒரு குறியீடாக வெளிப்படுகின்றன.//

  மகாபாரதம் உண்மையா பொய்யா என்பதை விட அது அள்ளித்தரும் வாழ்க்கைப் பாடங்கள் முக்கியமானது. ஒரு நீண்ட கதை செவிவழியாக இத்தனை யுகங்கள் கடந்து வந்திருக்கிறது என்பதே ஆச்சர்யமூட்டுகிறது. இடை வி்லகலும் பிற்சேர்க்கையும் உருவமாறுதலும் இருப்பினும் அடி நாதம் குலையவில்லை.

  கிளைக்கதைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.

  தர்மர், இடது கையாலேயே தர்மம் செய்த கதை தெரியுமா?

  அதிலுள்ள உட்கருத்து மிக நுட்பமானது.

 29. //புதுகை.அப்துல்லா said…

  மேல்னிலை அடைவது மேன்மக்களாகத்தான் பிறக்கவேண்டுமென்பதில்லை. மேன்மக்க்ளாக வாழ்ந்தாலே போதும் என்பதுதான் தாத்பர்யம்.

  //

  அண்ணே இந்த பதிலை இரசித்து மகிழ்ந்தேன் :)//

  ஆமாங்க அப்துல்லா. தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதன் அர்த்தமே வேறு. அதை நற்குடிப் பிறப்பென்று தவறாகப் பொருள் கொள்கிறோம்.

 30. என்றும் அதன் சுவை குன்றாத கதம்பம் வாழ்க

 31. கோவி,

  இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
  துன்பம் உறாஅ வரின்.

  ( குறள் எண் : 1052 )

  மு.வ : இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

  கருணாநிதி :வழங்குபவர்,
  வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.

  கர்ணன் எதையும் இரக்கவில்லையெனினும், கையறுநிலையில் யாராவது தன்னைக் காக்க மாட்டார்களா என மனதில் நினைத்ததே இரத்தலுக்குச் சமம். அனால் அது மேலே குறளில் சொல்லியது போல் உயர்வானது. ஏனெனில் அவன் தகுதிஉள்ளவன். துரியோதனனும் கொடுக்கும் போது பிற்காலத்தில் அவனை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்ற இழி எண்ணத்தில் கொடுக்க வில்லை. அந்த சமயத்தில் உடுக்கை இழந்தவனைக் காப்பாற்றினான். அதற்கு செஞ்சோற்றுக் கடனாக கடைசி வரை கொடுத்த வாக்கைக் காப்பற்றினான் கர்ணன்.

  தான் தேரோட்டியின் மகனல்ல உண்மையிலேயே அரசன் என்று தெரிந்த பிறகும் தன் நிலையில் சிறிதும் வழுவாதிருந்ததுதான் அவனது உயர்வு.

  எத்தனை அவமானங்கள், ஏளனங்கள், உதாசினப்படுத்துதல்கள். மலைக்கிறேன்.

 32. //இவைகளைக் காணும் போது எனது பார்வையில் அனைவரையும் விட கர்ணனே சிறந்தவனாகின்றான்.//

  தமிழ்,

  மஹாபாரதத்தில் ஆகச்சிறந்த பாத்திரம் கர்ணன் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

 33. //வடகரை வேலன் said…
  //இவைகளைக் காணும் போது எனது பார்வையில் அனைவரையும் விட கர்ணனே சிறந்தவனாகின்றான்.//

  தமிழ்,

  மஹாபாரதத்தில் ஆகச்சிறந்த பாத்திரம் கர்ணன் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
  //

  இந்த விஷயத்தில் எனக்கு சிலபல விஷயங்கள் முரண்படுகிறது. என்ன செய்ய..! 😦

 34. கர்ணன் செத்ததுக்கப்புறம் இனி என்னங்க செய்ய முடியும்.

  ஏன் பிடிக்குதுன்னு நான் சொல்லியிருக்கேன். ஏன் பிடிக்கலைன்னு நீங்க சொல்லுங்க. நீங்க சொன்னது சரின்னா நான் உங்க பக்கம் வந்துடறேன்.

 35. கோவி,

  C&P from my post

  ஜெயஸ்ரீ said…
  //இதில் எனக்கு வந்த ஐயம் என்ன என்றால்,

  1. கர்ணன் கண்ணனுக்கு தனது புண்ணியம் அனைத்தையும் தானம் அளிக்கிறான்.

  2. அவ்வாறு புண்ணியம் அனைத்தையும் தானம் அளிப்பதால் மேலும் புண்ணியம் கர்ணனுக்கு கிடைக்கிறது.

  3.திரும்பவும் அப்புண்ணியங்கள் கண்ணனுக்கு போகிறது.

  4.திரும்பவும் ( 2. ) நடக்கிறது.

  5. திரும்பவும் ( 3. ) நடக்கிறது.

  ….
  ….

  இது ஒரு iterative function of புண்ணியமாக இருக்கிறது. //

  அனானி அவர்களே,

  தமிழில் பாரதத்தை எழுதிய வில்லிப்புத்தூரார் அதையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

  தன் புண்ணியமனைத்தையும் தானமாகக் கேட்கும் கண்ணனுக்குத் தன் குருதியால் தன் புண்ணியங்களை தாரை வார்த்துக் கொடுக்கையில் கர்ணன் சொல்வது "யான் செய்புண்ணிய மனைத்தும் " உனக்குத் தந்தேன் . இதில் செய்புண்ணியம் என்ற பதத்தைக் கவனியுங்கள். அது வினைத்தொகை ,முக்காலங்களையும் குறிக்கும். யான் கடந்த காலத்தில் செய்த புண்ணியம், தற்போது (நிகழ் காலத்தில்) செய்யும் புண்ணியம், இப்படி உனக்குக் கொடுத்தபின் அதனால் எனக்கு ஏற்படப்போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்குத் தானமாகத் தந்தேன்.
  அப்படித் தந்தபின் தான் அவன் உயிர் பிரிகிறது.

 36. அந்த பதிவுல ஜி.ரா, குமரன், KRS எல்லாருக்கும் நடவுல ஒரு அட்டகாசமான விவாதம் நடந்தது 🙂

  நேரமிருந்தால் பின்னூட்டங்களையாவது படித்து பார்க்கவும்

 37. உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன் .பெரும்பாலும் இது வரை என் கவிதைகளை விமர்சித்தவர்கள் என் நெருங்கிய நண்பர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள் .உங்களின் விமர்சனமும் அறிமுகமும் உண்மையிலேயே மிகப்பெரிய டானிக் எனக்கு .
  நன்றி வடகரை வேலன் . 🙂

 38. /*வாழ்க்கையிலும் இதுபோலத்தான் எது முதலில் எது பிறகு என்று பகுத்தாயாமல் சிக்கல் உண்டாக்குகிறோம். சுலபமாக முடிவதைக் கூட தேவையில்லாத சுமைகளால் கடினமானதாக்கிக் கொள்கிறோம். சரிதானே?*/
  சரி தான்… அழகாகக் கூறியுள்ளீர்கள்

 39. //ரெஜோ said…

  உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன் .பெரும்பாலும் இது வரை என் கவிதைகளை விமர்சித்தவர்கள் என் நெருங்கிய நண்பர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள் .உங்களின் விமர்சனமும் அறிமுகமும் உண்மையிலேயே மிகப்பெரிய டானிக் எனக்கு .
  நன்றி வடகரை வேலன் . :-)//

  இதிலென்னங்க இருக்கு. எனக்குப் பிடிச்சத நான் ரசிச்சத மத்தவங்க கிட்டயும் பகிர்ந்துக்குறேன். அவ்வளவுதான்.

  நீங்க நன்றி சொல்ல வேண்டியது வெயிலானுக்குத்தான், அவர்தான் உங்க வலைக்குச் சுட்டி தந்தார்

 40. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s