விளையாட்டாப் போச்சு


சின்ன வயசுல, விளையாட்டுங்கிறது சீசனுக்கு சீசன் மாறும். ஓரு சமயம் பம்பரம் ஜோராச் சுத்தும். அப்புறம் தூக்குத் தூக்கி, மரமேறின்னு வேற வேற விதமா மாறிவிடும். ஆனாலும் பால்யத்தை சுவராஸ்யமாக்கி பரவசமாக்கியதிலும், தோழமை உணர்வு ஊறச் செய்ததிலும் விளையாட்டுகளின் பங்கு முக்கியமானது.

அதிலும் என்னைப் போல் லைன் வீடுகளில் வசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். என்ன சண்டையாயிருந்தாலும் பெரியவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். நீங்க இன்னைக்கு கா விடுவீங்க நாளைக்குப் பழம் விடுவீங்க நாங்க அப்படியெல்லாம் இருக்க முடியாதுன்னு சொல்லுவாங்க. வேற வழியில்லமல் சண்டை போட்டவனுடன் சேர்ந்து விளையாட வேண்டிய கட்டாயம். கட்டாய நெருக்கம் வேறுபாடுகளை மறக்கச் செய்யும். இப்ப அது மாதிரியெல்லாம் பாக்க முடியாது. பள்ளிகளில் கூட எனக்கு, என்னோடதுங்கற மனப்பான்மை பெருகிவிட்டது. விட்டுக் கொடுப்பது சுத்தமாக இல்லை. இந்தச் சிறுவர்கள் நாளை பெரியவர்கள் ஆகும்போது என்ன விதமான் விளைவுகள் வருமென்று யோசித்தால் பயமாக இருக்கிறது.

சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் கட்டுரை ஒன்றில் தனது மகனுக்கு கழுதை ஒன்றைக் காட்ட வேண்டும் என்று அலைந்ததை எழுதிருக்கிறார். அது போல எதிர்காலத்தில் நமது குழந்தைகள் இந்த விளையாட்டுக்களைப் பற்றிப் படிக்கத்தான் முடியும் போலிருக்கிறது. இந்த விளையாடுக்களெல்லாம் நான் விளையாடியவை. பெயர்கள் இடத்தப் பொறுத்து மாறுபடலாம்.

பம்பரம்

பம்பர விளையாட்டில் அலர்ட்டா இருப்பது முக்கியம். 1 2 3 சொன்ன உடனே கோஸ் எடுக்க வேண்டும் (பம்பரத்தை தரையில் சுற்றவிட்டு சாட்டையால் கோதி எடுத்து கையில் பிடிப்பது). கடைசியில் பிடிப்பவரின் பம்பரம் வட்டத்துள் வைக்கப்பட்டு மற்றவர்களின் பம்பரத்தால் குத்திக் குதறப்படும். குத்துவதென்பது நேரடியாக அல்ல. பம்பரத்தை சாட்டை மூலம் சுழலவிட்டுத்தான். இதற்கு ஆக்கர் வைத்தல் என்று சொல்லுவோம்.

குறிபார்த்து பம்பரத்தின் தலையில் குத்துவதுதான் சவால். பெரியண்ணாகளுடன் ஆட நேர்ந்தால் நம் பம்பரம் இரண்டாகக் கூட உடைந்து விடும். குத்தும்போது உள்ளே இருக்கும் பம்பரம் வெளியே வந்தால், மீண்டும் கோஸ் எடுக்க வேண்டும். யார் கடைசியோ அவர்கள் பம்பரம் உள்ளே.

பம்பரத்தின் வடிவமும் ஊருக்கு ஊர் மாறுபடும். சில சமயங்களில் வடிவங்களுக்கு ஒன்று என்றவிதத்திலும் வைத்திருப்போம். சாட்டை கையில் இருந்து உருவாமல் இருக்க சாட்டையின் இறுதியில் முடிச்சுப் போட்டு சோடா பாட்டில் மூடியை(எங்க ஊர்ல – காளி மார்க் அல்லது (அதோட போலி) யாளி மார்க்) தட்டையக்கி அதில் ஒரு ஓட்டை போட்டு மீண்டும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருப்போம். எங்க ஊர்ல பாலகிருஷ்ணன்னு ஒருத்தன் ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியப் போட்டு வைத்திருப்பான்.

பம்பரம் உடைந்தாலோ, அல்லது அதிக ஆக்கர் வாங்கி அம்மைத் தழும்பு போல ஆனாலோ வருத்தப் பட மாட்டோம். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தது, விளையாட்டுகள் அதை வளர்த்தன.

கில்லி (தாண்டல்)

இந்த விளையாட்டு தென் மாவட்டங்களில் செல்லாங்குச்சி என்றழைக்கப் படுகிறது. சில இடங்களில் கிட்டிப்புள் என்றழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டு குழு விளையாட்டு என்பதால் சகோதரத்துவத்தை வளர்த்தது.

இதைப் பற்றிய பதிவு ஏற்கனெவே நா ராதா கிருஷ்ணன் என்பவரால் எழுதப் பட்டிருக்கிறது.

சுட்டி

நுங்கு வண்டி பற்றியும் எழுதியிருக்கிறார்.

தூக்குத்தூக்கி

எல்லோர் கையிலும் 3 முதல் 4 அடி நீளமுள்ள குச்சி வேண்டும். சாட் பூட் த்ரீ போட்டு அவுட்டானவனை ஒரு வட்டம் வரைந்து அதனுள்ளே நிற்க வைப்போம். அவனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கச் செய்து அவனது கட்டை விரல மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடயில் அவனது குச்சியைக் கொடுத்து நிற்க வைப்போம். எல்லோரும் தங்களது குச்சியின் நுனி எதாவது ஒரு கல்லின் மீது படுமாறு இருக்க வேண்டும். யாரோ ஒருவர் அவனது குச்சியை தனது குச்சியால் வெகு தூரம் போய் விழுமாறு, அவன் தலைக்கும் குச்சிக்கும் இடையில் தனது குச்சியைக் கொடுத்து நெம்பி விடுவான் . அவ்வாறு செய்து விட்டு அவனும் உடனே ஓடிப்போய் ஒரு கல்லின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். யார் குச்சி கல்லைத் தொடாமல் இருக்கிறதோ அவர்களைத்தொட்டால் அவன் அவுட்.

அவன் ஒருவனைத் தொட ஓடும் பொழுது அவனை விடப் பெரியவன் அவனுக்குமுன் வந்து அவனைத் திசை திருப்புவான். அதன் மூலம் துரத்தப் படுபவன் தப்பிக்க வாய்ப்பிருக்கும். கீழே விழுந்த குச்சியை எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்வர். குச்சியைக் கையால் தொடாமல் தங்களது குச்சியால்தான் தொட வேண்டும் என்பது முக்கியம். அதற்குள் யாராவது சிக்கி விட்டால் அவர்கள் குச்சி அங்கே வைக்கப் பட்டு விளயாட்டு மீண்டும் தொடரும்.

சென்ற தூரத்தைக் கொண்டு பெரியவர்கள் முடித்துக் கொள்ளலாமா என்று அவனைக் கேட்பார்கள். சரி என்றால் அங்கிருந்து வட்டம் இருக்குமிடம் வரை நொண்டி அடிக்க வேண்டும். கூட்டமாக மற்றவர்கள் ஓடுகாலி நாய் நொண்டி நாய் என்று பாடிக் கொண்டே வருவார்கள். நாய் என்று திட்டி விட்டார்களே என்றில்லாமல் மீண்டும் அந்த விளையாட்டுத் தொடரும்.

மரமேறிக் குரங்கு

ஏதாவது வேப்ப மரம் அல்லது புளிய மரத்தில்தான் இந்த விளையாட்டை விளையாடுவோம். சாட் பூட் த்ரீயில் அவுட்டானவனை மரத்தின் கீழே ஒரு வட்டம் போட்டு அதனுள்ளே ஒரு குச்சி வைத்து அதை வட்டத்துக்கு வெளியே போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி விடுவர். மரதிலிருபவர் தரையிலிருக்கும்போது கீழிருப்பவனால், தொடப்பட்டால் அவுட்.

அவன் ஒரு திசையில் ஓடி அவனை அவுட்டாக்க முயற்சித்தால், வேறு ஒருவன் கீழிறங்கி அந்தக் குச்சியை வெகு தூரம் வீசி எறிந்து விடுவான். அவன் ஓடிப்போய் எடுத்து வருமுன் மற்றவர் கீழிறங்கி அவனுக்குப் பழிப்புக் காட்டுவர். அவனை அலைய வைப்பதும் பிடி கொடுக்காமல் மரத்திலிருந்து தொங்கியவாறே சாகசம் செய்வதும், உடலுக்கும் மனதிற்கும் நல்ல பயிற்சி.

இதைப்போல மற்றவர்களும் தொடரலாம். அதற்கு இங்கே ஒரு இணைப்பு மட்டும் கொடுங்கள்.

Advertisements

19 comments

 1. //பெரியண்ணாகளுடன் ஆட நேர்ந்தால் நம் பம்பரம் இரண்டாகக் கூட உடைந்து விடும். //

  கடந்த காலங்களுக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டீர்கள் வேலன் !

  நினைவுகளை மீண்டும் துளிர்க்க வைத்த இடுகை !

 2. நல்ல நினைவுகள் வேலன் சார்…
  கிட்டியில் கீந்தும் போது நான் தான் வெகு தூரம் கீந்துவேன்….. ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்… 🙂

 3. நன்றி கோவி.

  இது போல வேறு சில விளையாட்டுக்களையும் யாராவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

 4. //மறக்கச் செய்யும். இப்ப அது மாதிரியெல்லாம் பாக்க முடியாது. பள்ளிகளில் கூட எனக்கு, என்னோடதுங்கற மனப்பான்மை பெருகிவிட்டது//

  அப்படியா! உங்கள் பிள்ளைகளிடம் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்

  சின்ன வயசுல விளையாட்டு பய்யனா இருந்து இருப்பீங்க போல 🙂

 5. //கிட்டியில் கீந்தும் போது//

  நல்ல வார்த்தை. உங்கள் ஊரில் இது கிட்டிப் புள் என்று நினைக்கிறேன். சரியா?

 6. காவியம், மணிக்காவியம் என்று ஒரு ஆட்டம் ஆடுவோம்… குனிய வைத்து தாண்டி விளையாடுவது… நன்றாக இருக்கும்…. அவுட்டோர் கேம்ஸ் மறைந்து இன்று கிராமங்களில் கூட வீடியோ கேம்ஸ், கிரிக்கெட், போகோ,சுட்டி என்று அறைக்குள் சிறுவர்கள் அடைந்து போவது வருத்தம் அளிக்கின்றது.

 7. // தமிழ் பிரியன் said
  அவுட்டோர் கேம்ஸ் மறைந்து இன்று கிராமங்களில் கூட வீடியோ கேம்ஸ், கிரிக்கெட், போகோ,சுட்டி என்று அறைக்குள் சிறுவர்கள் அடைந்து போவது வருத்தம் அளிக்கின்றது.//

  வழிமொழிகிறேன்

 8. //சின்ன வயசுல விளையாட்டு பய்யனா இருந்து இருப்பீங்க போல :-)//

  ஆமா கிரி அதனால நல்ல குழு மனப்பானமை வளர்ந்தது.

  இப்பொழுதெல்லாம், குழந்தை வளர்ர்புக் கூட தொட்டியில் செடிவளர்ப்பு போல ஆகிவிட்டது.

 9. // தமிழ் பிரியன் said…

  காவியம், மணிக்காவியம் என்று ஒரு ஆட்டம் ஆடுவோம்… குனிய வைத்து தாண்டி விளையாடுவது… நன்றாக இருக்கும்…. அவுட்டோர் கேம்ஸ் மறைந்து இன்று கிராமங்களில் கூட வீடியோ கேம்ஸ், கிரிக்கெட், போகோ,சுட்டி என்று அறைக்குள் சிறுவர்கள் அடைந்து போவது வருத்தம் அளிக்கின்றது.//

  ஆமாங்க இப்ப வயக்காட்ல கூட கிரிக்கெட்தான் விளையாடிகிறார்கள்.

  அதும் என் சொந்த ஊரில் பேட் இல்லாமல் தென்னை மட்டையை வைத்து விளையாடுகிறார்கள். 10 வருடம் முன்பு பூப்பந்தும், கைப்பந்தும் விளயாடிக் கொண்டிருந்தார்கள். கபடி விளையாட்டே இல்லயோ என்றாகி விட்டது

 10. //தமிழ் பிரியன் said…

  காவியம், மணிக்காவியம் என்று ஒரு ஆட்டம் ஆடுவோம்… குனிய வைத்து தாண்டி விளையாடுவது… நன்றாக இருக்கும்….//

  பச்சக் குதிரையா?

 11. கில்லி தாண்டில் தோற்றவர்கள் கஞ்சி காய்ச்ச்றது..கோலி ஆட்டம்.பேந்தா..இதையேல்லாம் கூட எழுதுங்க வேலன்.

 12. //கில்லி தாண்டில் தோற்றவர்கள் கஞ்சி காய்ச்ச்றது..கோலி ஆட்டம்.பேந்தா..இதையேல்லாம் கூட எழுதுங்க வேலன்.//

  நீஙகளும் பங்கேற்கலாமே?

 13. அருமையான பதிவு அண்ணா..

  நான் குண்டு வெளையாடினதையெல்லாம் நிழலாட வெச்சுட்டீங்க!

  (ப்ளாக் கலக்கலா, கலர்ஃபுல்லா இருக்கு!!)

 14. /
  பம்பரம் உடைந்தாலோ, அல்லது அதிக ஆக்கர் வாங்கி அம்மைத் தழும்பு போல ஆனாலோ வருத்தப் பட மாட்டோம். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தது, விளையாட்டுகள் அதை வளர்த்தன.
  /

  அவ்ளோ நல்லவங்களாய்யா நீங்க!?!?

  எங்க ஊர்க்கார பயலுக எல்லாம் அழுதுகிட்டே மூக்க சீந்துவானுங்களே பம்பரம் உடைஞ்சிடுச்சின்னா

  :))))))

 15. //நான் குண்டு வெளையாடினதையெல்லாம் நிழலாட வெச்சுட்டீங்க.//

  நீங்க எழுதுனா இன்னும் நல்லாயிருக்கும்.

 16. //அவ்ளோ நல்லவங்களாய்யா நீங்க!?!?

  எங்க ஊர்க்கார பயலுக எல்லாம் அழுதுகிட்டே மூக்க சீந்துவானுங்களே பம்பரம் உடைஞ்சிடுச்சின்னா//

  சிவா,
  ஆரம்பத்துல நானும் அழுதேன் ஆனா அரசியல்ல இதெல்லாம் சகஜம்னு சீக்கிரம் புரிஞ்சுருச்சு

 17. நல்லா எழுத்யிருக்க. இன்னும் நிறைய விளையாட்டுக்கள் உள்ளன. அடைப்பற்றியும் எழுது.

 18. குரு விளையாட்டு பத்தி எழுதனுமா? அடை பற்றி எழுதனுமா?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s