கோவை வலைப் பதிவர் மீட்டிங்


சந்திப்புன்னு போனா மீட்டிங் நடத்துதாவ. ஒருத்தரு பேசுதாரு எல்லாரும் கேக்காவ. அதத்தாம் பதிவுல பண்ணுதமே? பின்ன இதுக்கு இம்புட்டுக் கஷ்டப்படனுமா?

ஏதோ முகந்தெரியாம எழுதிக்கிட்டுருக்கமே நேர்லயும்தாங் கொஞ்சம் பாத்துப் பழகுவமேன்னு போனா செமினார் மாதிரி நடத்துதாக.

நான் போனப்ப நம்ம சுப்பையா சார்வாள் பேசிக்கிட்டுருந்தாவ. என்னப் பாத்ததும், யாருன்னு சொன்னதும், ”வாங்க உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன்னாக” நமக்கு எல்லா எடமும் குளுந்துட்டு.

அடுத்து ஒருத்தர் வந்தாரு. சார்வாள் அவரப் பாத்தும் அதயே சொன்னாக. சே மோசம்லா போய்ட்டமுன்னு ஆயிட்டுது.

நான்ஸ்டாப்பா சார்வாள் பேசுதத பாத்ததும் எனக்கு கொசுவத்தி சுத்தீருச்சு
“ அடுத்த பந்தை வாலாஜா முனையிலிருந்து அளவான, சீரான வேகமெடுத்து, வீசும் கை விக்கெட்டின் மேல் வர வீசினார். அளவு சற்றுக் குறைவாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து, முன் காலிலே சென்று அதை ஓங்கி அடித்தார், தடுப்பதற்கு யாருமில்லை. அது அவருக்கு நான்கு ரன்களைப் பெற்றுத்தருகிறது. இத்துடன் அவரது சொந்த எண்ணிக்கை 60 அணியின் மொத்த எண்ணிக்கை 320. அடுத்த பந்து….”

அடுத்து ஞானவெட்டியான்னு எங்க பெரியப்பா கணக்கா ஒருத்தரு பேசுனாரு.
அவுக வாத்தியாரு அவுகள வெட்டிப்பயல்னு கூப்பிட்டாக, மாபோசி அவுகள ஞானவெட்டியான்னு பட்டப்பேரு வச்சுக்கூப்பிட்டாகன்னாரு.

அவுக இப்பத்தாம் கோயாமுத்தூருக்கு வந்திருக்காக இன்னங் கொஞ்ச நாள்ல பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுடுவாக. ஆரம்பிச்சாகண்டா ஒரு நாளைக்குப் பத்திலருந்து பானைஞ்சு பதிவு போடுவம்னாக. சரிதாம் ஒன்னு போடங்கியல இங்க அவனவன் தண்ணி குடிக்காம்.

அடுத்ததா பால் ஜோசப் (ஜோசப் பால்ராஜ்-னு நல்லா கும்மியடிச்சு அவரக் குழப்பீட்டாக), சொன்னதுல ஒரு விசயம் முக்கியமானது, .tk-னு ஒரு செர்வர்ல ப்ரீயா இடம் கொடுக்காம்லா அது பித்தலாட்டம்னது. யாரும் உங்க பிளாக்க அவசரப்பட்டு மாத்த வேண்டாம்னாக.

அடுத்து நம்ம மீசைக்கார லதானந்த் அண்ணாச்சி பேசினாக. நா தமிழ சாக்கி போட்டுத் தூக்க வரல. ஏதோ எழுதுனா, நாலு பேரு சந்தோஷப்படுவாகன்னா மொக்க போடலாம் தப்பில்லன்னாக.

அடுத்து ஓசை செல்லா தமிழ்மணத்துல இப்பல்லாம் ஒரே மொக்கன்னாக. சரி அம்புட்டுத்தேங் கெளம்புவோம்னு கிளம்பீட்டன் (வீட்டுல உளுந்தம்பருப்புச் சாப்பாடும் கறிக் கொழம்பும் ரெடின்னு SMS வந்ததுதா உண்மையான காரனம்) .

மஞ்சூர் ராசா அவுகளுக்கும், அவுக வீட்லருக்க எல்லாத்துக்கும் ரெம்பப் பெரிய மனசு. ஒறமொறகள பார்த்த மாதிரி ஒரு கொற இல்லாமப் பாத்துக்கிட்டாக.

சூடா வடை கொடுத்தாக, குலோப் சாமூனு கொடுத்தாக, சாக்கிலேட்டுக் கொடுத்தாக, சர்பத்து கொடுத்தாக, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதமெல்லாம் கொடுத்தாக. சாப்பிட்ட எலய அவுக எடுத்தது மனச ரெம்பக் கஷ்டப்படுத்துச்சு.

சஞ்சய் தம்பீ சுத்தி சுத்தி வேல பாத்தாக. ரெம்பப் பாசத்தப் பொழிஞ்சாக.

ஆயிரம் இருந்தும் வசதிகளிருந்தும்னு நம்ம ஜிவாசி பாடுவகளே அது மாதிரி ஆயிட்டு.

ஐயா தொரமார்களே அடுத்தாப்ல பதிவர் சந்திப்பு ஏதும் நடத்துற மாதிரி இருந்தா நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க.

1. 10.00 – 4.00 கொஞ்சமில்ல ரெம்பவே சாஸ்தி. ஒரு 3 மனி நேரம் போதும்.

2. ஒரு பொது எடத்துல வைக்கதுதா நல்லது. சிலாவத்தா பேசிப் பழக முடியும். இதென்னமோ ம.ராசா வீட்டு விசேசத்துக்கு போனாப்லதா இருக்கு.

3. மீட்டிங்கு மாதிரி இருக்குறத கண்டிப்பா தவிர்க்கனும். நாலு பேரும் கலந்துரையாடனும் ஒருத்தரு அத முறைப்படுத்தனும். பேசுற விசயத்தப் பொருத்து அது தானே அமையும்.

4. இடம் நேரம் இதெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியாவது மத்தவங்களுக்கு சொல்லீரனும்.

5. சாப்பிடற ஐட்டமெல்லாம் முக்கியமில்ல. அதை பகிர்ந்து ஜாலியா பேசிச் சிரிக்கிறதுதான் முக்கியம்.

5. குறிப்பா ”இப்பல்லாம் தமிழ்மணத்துல ஒரே குப்ப சாரி மொக்க” ரக கமெண்டுகளத் தவிர்க்கனும்.

சிங்கப்பூர்லருந்து வந்தாகளே கிரி, அவுகதாம் பாவம். அங்கருந்து கோபிக்கு வந்தவுக நாலு சொந்தபந்தங்களப் பார்த்தமா, பாக்க வேண்டிய மக்க மனுசங்கள பாத்தமான்னு இல்லாம, பஸ் ஏறி கோயாமுத்தூரூ வந்தாக. சிங்கப்பூரூ பதிவர் சந்திப்பு மாரி இருக்குமுன்னு வந்தேம்னாக.

இது எப்பவும் உள்ளதுதான். எதிர்ப்பார்ப்பு அதிகமா இருக்குறப்ப ஏமாத்தமும் அதிகமா இருக்குமுல்லா?

மத்தியானம் என்ன பேசுனாகன்னு யாராவது பதிவு போடுவாகளா?

22 comments

  1. சார்வாள்,

    கலக்கிட்டியளே!

    உண்மையிலே ‘கிரி’ய நினைச்சா தான் பாவமா இருக்கு.

  2. வாங்க வெயிலாம்,

    கோபிக்குப் பஸ் ஏறுதவரைக்கும் பொலம்பித்தள்ளீட்டாக. பாவமாயிருந்திச்சு.

  3. சந்திப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

  4. வாங்க சிபி,

    சிபியும் வருவாகன்னாக.

    உங்கள மாதிரி பெருந்தலகளப் பாக்கலாமுன்னுதாம் வந்தது.

  5. நன்றி பர்சலாரே,

    நங்கொடுத்த புத்தவங்களப் படிசீயளா?

  6. //நான் போனப்ப நம்ம சுப்பையா சார்வாள் பேசிக்கிட்டுருந்தாவ. என்னப் பாத்ததும், யாருன்னு சொன்னதும், ”வாங்க உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன்னாக” நமக்கு எல்லா எடமும் குளுந்துட்டு.

    அடுத்து ஒருத்தர் வந்தாரு. சார்வாள் அவரப் பாத்தும் அதயே சொன்னாக. சே மோசம்லா போய்ட்டமுன்னு ஆயிட்டுது.//

    பாவங்க வாத்தியாரு.. இப்படிப்போட்டு அவரக் கலாய்க்கறீங்களே!

  7. உரிமை இருக்குறவங்களத்தானே கலாட்டாப் பண்ணமுடியும்.

    சார்வாள் இதெல்லாம் கண்டுக்கிட மாட்டாக.

  8. நல்லா நக்கலடிக்கிறீங்க… இருங்க இருங்க.. உங்கள பத்தியும் நக்கலடிச்சி யாராவது பதிவு போடத்தான் போறாங்க..அதுக்கும் நான் பின்னூட்டம் போடத்தான் போறேன்.

  9. கலாய்த்தலும், கலாய்க்கப்படுவதுமொன்றே வாழ்வின் தத்துவமுன்னு புரிஞ்சுக்கிடனுங்க, அதுனாலதாம் இப்படி.

  10. நல்ல பதிவு வடகரை வேலன்…

    ஆமாம் ஏன் வாத்தியார் ஐயாவை இப்படி கலக்குறீங்க? உங்க பதிவை மட்டும்தான் அவரு படிக்கணுங்களா??? :))

  11. வடகரை வேலன் சார்!
    ஒங்க ஏரியா இதுதான். திருநெல்வேலித்தமிழ் பொங்கி வெளையாடுது. விட்ராதீங்க. கேக்க சொகமா இருக்கு.
    வட்டார வழக்கு சாகாம ரி உளபட நாமா நாலு பேராவது பாடுபடுவோம்.

  12. வாங்க நந்து,

    மொத மொறயா வந்துருக்கீக.

    நானும் அன்செட்டிலானவங்களப் பத்தி ஒன்னும் சொல்லல பாத்துக்கிடுங்க.

  13. வாங்க ஸ்ரீ,

    வாத்தியாருன்னா ஒரு பயங்கலந்த மரியாத வரும்லா.

    இவரு நம்ம தோள்ல கைபோட்டு பேசுத தோழம் போல.

    நல்லா சாலியாத்தாம் பழகுவாக.

  14. ஸ்ரீ சார்,

    உங்கள ஜோசப் பால்ராஜ்ன்னு தப்பா நெனச்சுக்கிட்டு இங்க ஒரே கூத்துதாம் போங்க.

    பெறவு நாந்தே சொன்ன, அட அவுக வேற இவுக வேறன்னு.

  15. வாங்க லதானந்த் சார்வாள்.

    இப்ப கொஞ்சம் உப்புசம் கொறஞ்சுருக்கா?

    உங்க வீட்டம்மா சோறாக்கிப் போடுததக் கூட நல்ல பதிவாப் போட்டுட்டியளே.

  16. சந்திப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

  17. வேலன் அண்ணாச்சி பரணி பாயும் நெல்லைச் சீமையின் பழகு தமிழில் அசத்திபுட்டீங்க அண்ணச்சி.
    தி.விஜய்
    pugaippezhai.blogspot.com

    வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்

  18. வாங்க வேளராசி,

    நீங்க ஏன் சந்திப்புக்கு வரவில்லை?

  19. தவிர்க்க முடியாத சூழ்நிலை.மதியம் 3 மணிக்கு வரலாம் என போன் பண்ணினால் பாதிபேர் எஸ் ஆகிவிட்டார்கள் என தகவல் வந்தது.

  20. சந்திப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு கலாய்க்கறீங்களே!